×

பாலியல் பாஜ எம்.பியை ஒன்றிய அரசு காப்பது வெட்கக்கேடு: நடிகைகள் கடும் தாக்கு

மும்பை: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜ எம்.பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யக் கோரி, மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு முன் போராட்டம் நடத்த முயன்றபோது வீரர்கள் சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா, வினேஷ் போகத், சங்கீதா போகத் ஆகியோர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யாமல் தவிர்த்து வருவதை கண்டித்து, தாங்கள் பெற்ற சர்வதேச, தேசிய அளவிலான பதக்கங்களை கங்கையில் வீசுவதாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் முடிவெடுத்தனர். அதன்படி அவர்கள் நேற்றுமுன்தினம் மாலை ஹரித்வார் வந்தனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய விவசாய அமைப்பினர், வரும் 5 நாட்கள் வரை காத்திருக்கவும் என்று கூறி, பதக்கங்களை அவர்கள் வாங்கிக் கொண்டனர். இது குறித்து பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘நம்முடைய அரசாங்கம் எவ்வளவு தூரம் சென்றுவிட்டது என்பதை பார்க்கும் போது பிரமிப்பாக உள்ளது. ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள், பாலியல் பலாத்கார குற்றவாளியை பாதுகாக்கப் போகின்றன. இது முற்றிலும் வெட்கக்கேடான விஷயமாகும்’ என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த ‘இறுதிச்சுற்று’ படத்தில் மல்யுத்த வீராங்கனையாக நடித்துள்ள ரித்திகா சிங், மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ‘மல்யுத்த வீரர்கள் நடத்தப்படும் விதத்தைப் பார்த்து அதிக வருத்தமாக இருக்கிறது. அவர்களுடைய மனநிலையை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இந்த உலகத்துக்கு முன்பு அவர்களது சுயமரியாதை மறுக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டுக்காக விளையாடியவர்களுக்கு நாம் ஆதரவு தெரிவிக்க வேண்டும். அவர்கள் இந்தியாவுக்குப் பின்னால் இருப்பது போல், நாமும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நிற்க வேண்டும். அவர்களுடைய குரல்களை ஒடுக்குவது தவறான புரிதலுக்கு வழிவகுக்கும். எனவே, அதை அனுமதிக்காமல் அனைவரும் ஒன்றிணையுங்கள். இப்பிரச்னை விரைவில் தீர்க்கப்படும் என்று நம்புகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

The post பாலியல் பாஜ எம்.பியை ஒன்றிய அரசு காப்பது வெட்கக்கேடு: நடிகைகள் கடும் தாக்கு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Union government ,BJP ,Mumbai ,Delhi ,Jandar ,Mantar ,president ,Wrestling Federation of India ,Brij Bhushan Charan Singh ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED வளர்க்க நினைக்கவில்லை ஒன்றிய அரசு விவசாயிகளை அழிக்க நினைக்கிறது