×

மும்மொழி கொள்கை எதிர்ப்பு நீதிக்கான போர்: யோகி ஆதித்யநாத்துக்கு முதல்வர் பதிலடி

சென்னை: மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு நீதிக்கான போர் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். ‘தமிழ் இந்தியாவின் பழமையான மொழிகளில் ஒன்று. மேலும் அதன் வரலாறு சமஸ்கிருதத்தைப் போலவே பழமையானது. அனைவரும் அனைத்து மொழிகளையும் கற்க வேண்டும். உத்தரபிரதேசத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் பிற மொழிகளை கற்பிக்கும்போது, தமிழக பல்கலைக்கழகங்களில் இந்தியை கற்பிப்பதில் என்ன தவறு. தொகுதி மறுவரையறை குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கிவிட்ட பின்னரும் அரசியலுக்காக ஸ்டாலின் அதுகுறித்து குற்றம்சாட்டுகிறார்’ என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது: இருமொழிக் கொள்கை, நியாயமான தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழகத்தின் நியாயமான, வலுவான குரல் தேசிய அளவில் ஒலிப்பதால் பாஜ கலக்கமடைந்துள்ளது. அக்கட்சியின் தலைவர்கள் அளிக்கும் பேட்டியில் அது புலப்படுகிறது. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நமக்கு வெறுப்பு பற்றி பாடம் எடுக்கிறார். எங்களை விட்டுவிடுங்கள். அவர் வெறுப்பு பற்றி பாடமெடுப்பது நகை முரண். அரசியல் அவல நகைச்சுவையன்றி வேறு என்னவாக இருக்க முடியும். நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை. ஆதிக்கத்தை, திணிப்பைத் தான் எதிர்க்கிறோம். இது வாக்கு அரசியலுக்கான கலவரம் அல்ல. நீதிக்கான, மாண்புக்கான போர். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

The post மும்மொழி கொள்கை எதிர்ப்பு நீதிக்கான போர்: யோகி ஆதித்யநாத்துக்கு முதல்வர் பதிலடி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Yogi Adityanath ,Chennai ,Tamil Nadu ,M.K. Stalin ,Uttar Pradesh ,India ,
× RELATED சொல்லிட்டாங்க…