சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.என்.நேரு சென்னை மாநகராட்சிக்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அமைச்சர் நேரு பேசியதாவது : இந்த வரலாற்று சிறப்புமிக்க பேரவையில் 5ஆம் ஆண்டாக நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானியக் கோரிக்கை விவாதத்தின் மீது எனது பதிலுரையை தொடங்குகின்றேன்.நகரங்களாக வளர்ந்து வருவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் இப்பேரவையில் 1971-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அளித்தபோது, “நகர்ப்புறங்களின் வசதி வாய்ப்புகளை கிராமத்து மக்கள் ஒரு கால கட்டத்திற்குள் பெற்றிட வேண்டுமென்னும் குன்றா ஆர்வத்துடன் இந்த அரசு செயல்படும்” என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
மேற்கண்ட தலைவர் கலைஞர் அவர்களின் வழிகாட்டுதல்படி நமது கழக அரசு அமையும்போதெல்லாம் இந்தத் துறையில் குடிநீர் வசதி, மழைநீர் வடிகால்களுடன் கூடிய சாலைகள், திடக்கழிவு மற்றும் திரவக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரித்தல், பொதுச் சுகாதாரம் பேணுதல், நீர்நிலைகளை பராமரித்து நிலத்தடி நீரைப் பெருக்குதல், குடிசைப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் ஆரம்பக் கல்வியை உறுதி செய்தல், பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்து முதியோர் மற்றும் இளைஞர் நலம் பேணுதல், நவீன தகன மேடைகள் அமைத்தல், பசுமைப் பரப்பினை அதிகரித்தல், இணையதள வசதிகளை ஏற்படுத்துதல், நகரமைப்பு பணிகள் மற்றும் நகர்புற வாழ்வாதார மேம்பாடு, போன்ற எண்ணற்ற பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதை அனைவரும் அறிவீர்கள்.
மேற்கண்ட பணிகள் அனைத்தும் இத்துறையில் பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட 25 மாநகராட்சிகள், 137 நகராட்சிகள் மற்றும் 487 பேரூராட்சிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னை குடிநீர் வாரியம், டுபிட்கோ, டுபிசல், டுவிக், CRRT மற்றும் புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகம் ஆகிய சார்பு நிறுவனங்கள் மூலம் வெகுசிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த நான்காண்டுகளில் நமது கழக அரசு,
* வளர்ந்து வரும் நகர்புற வளர்ச்சி, வரலாற்று முக்கியத்துவம் மற்றும் ஆன்மீக சுற்றுலா தளங்கள், நகரத்திற்கு வந்து செல்லும் மக்களுக்கு தேவைப்படும் வசதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் நகர்புற உள்ளாட்சிகளின் தரத்தை உயர்த்தியுள்ளது. இதுவரை, 10 மாநகராட்சிகள், 31 நகராட்சிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
* அத்துடன் மேலும் சில ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சிகளை, அருகிலுள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுடன் இணைக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளன.
* 16 மாநகராட்சிகளுடன் 149 ஊராட்சிகள், 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகளும்;41 நகராட்சிகளுடன் 146 ஊராட்சிகள், 1 பேரூராட்சியும்;25 பேரூராட்சிகளுடன் 29 ஊராட்சிகளையும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* மேலும், 29 ஊராட்சிகள் 25 பேரூராட்சிகளாகவும், 7 பேரூராட்சிகள் 7 நகராட்சிகளாகவும், 22 ஊராட்சிகள் மற்றும் 6 பேரூராட்சிகள் சேர்ந்து 6 நகராட்சிகளாகவும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* இவை முடிவுறும்போது, நகர்புற உள்ளாட்சிகளின் எண்ணிக்கை பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட 25 மாநகராட்சிகளாகவும், 146 நகராட்சிகளாகவும், 491 பேரூராட்சிகளாகவும் இருக்கும்.
* நகர்புற உள்ளாட்சிகளில் பொதுமக்களின் சிறப்பான போக்குவரத்தினை உறுதி செய்யும் நோக்குடன் கடந்த நான்காண்டுகளில் ரூ.10,980 கோடி மதிப்பீட்டில் 17,774 கி.மீ. நீளத்திற்கு சாலைப் பணிகள் முடிக்கப்பட்டும், 1,280 கி.மீ. நீளமுள்ள சாலைப் பணிகள் நடைபெற்றும் வருகின்றன.
* ரூ.8,039 கோடி மதிப்பீட்டில் 380 குடிநீர் திட்டம் மற்றும் மேம்பாட்டு பணிகள் முடிக்கப்பட்டும், 1,220 பணிகள் நடைபெற்றும் வருகின்றன.
* ரூ.5,171 கோடி மதிப்பீட்டில் 2,253 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டும், 460 கி.மீ. நீளத்திற்கு பணிகள் நடைபெற்றும் வருகின்றன.
* ரூ.6,986 கோடி மதிப்பீட்டில் 42 பாதாள சாக்கடை திட்டம் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் முடிக்கப்பட்டும் 51 பணிகள் நடைபெற்றும் வருகின்றன.
* ரூ.1,002 கோடி மதிப்பீட்டில் 111 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
* ரூ.1,833 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவிலிருந்து உரம் தயாரிக்கும் மையங்கள், வள மீட்பு மையங்கள், தனி நபர் கழிப்பிடங்கள், சமுதாய மற்றும் பொதுக் கழிப்பிடங்கள் உள்ளிட்ட பணிகளில் 11,340 பணிகள் முடிவுற்றும் 1,799 பணிகள் நடைபெற்றும் வருகின்றன.
* ரூ.858 கோடி மதிப்பீட்டில் இதுவரை 7,10,000 எண்ணிக்கையிலான தெரு விளக்குகள் LED விளக்குகளாக (ஆற்றல்மிகு ஒளி உமிழும் விளக்குகளாக – Light Emitting Diode) மாற்றப்பட்டுள்ளன.
* ரூ.1,564 கோடி மதிப்பீட்டில் 107 புதிய பேருந்து நிலையங்கள் மற்றும் மேம்பாட்டு பணிகள் முடிவுற்றும், 110 பணிகள் நடைபெற்றும் வருகின்றன.
* ரூ.932 கோடி மதிப்பீட்டில் 153 சந்தைகள் கட்டி முடிக்கப்பட்டும், 77 சந்தைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றும் வருகின்றன.
* ரூ.242 கோடி மதிப்பீட்டில் 92 அறிவுசார் மையங்கள் மற்றும் 44 நூலகங்கள் கட்டி முடிக்கப்பட்டும்; 10 அறிவுசார் மையங்கள் மற்றும் 134 நூலகப் பணிகள் நடைபெற்றும் வருகின்றன.
* ரூ.838 கோடி மதிப்பீட்டில் 1,145 நீர் நிலைகள் தூர்வாரி, கரைகள் பலப்படுத்தி சீரமைக்கப்பட்டும் 152 நீர் நிலைகள் மேம்பாட்டு பணிகள் நடைபெற்றும் வருகின்றன.
* ரூ.436 கோடி மதிப்பீட்டில் 920 புதிய பூங்கா மற்றும் அபிவிருத்திப் பணிகள் முடிக்கப்பட்டும், 197 பூங்கா பணிகள் நடைபெற்றும் வருகின்றன.
* ரூ.412 கோடி மதிப்பீட்டில் 230 நவீன எரிவாயு தகன மேடைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
* ரூ.338 கோடி மதிப்பீட்டில் நகர்புற உள்ளாட்சிகளுக்கான அலுவலக கட்டடங்கள் 27 கட்டி முடிக்கப்பட்டும், 74 பணிகள் நடைபெற்றும் வருகின்றன.
* சென்னை தவிர பிற நகர்புற உள்ளாட்சிகளில் ரூ.398 கோடி மதிப்பீட்டில் பயோ மைனிங் மூலம் தேக்கத் திடக்கழிவுகள் அகற்றி, நிலத்தினை மீட்டெடுக்கும் பணிகள் பல்வேறு நகரங்களில் முடிவுற்றும், சில நகரங்களில் நடைபெற்றும் வருகின்றன. இப்பணிகள் முடியும் போது 692 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்படும்.
* ரூ.554 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மற்றும் திரவக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு 8,285 வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
* இவை தவிர நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய கூடங்கள், அங்கன்வாடிகள் உள்ளிட்ட இதர பல்வேறு பணிகளுக்கு ரூ.3,001 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன.
* நகர்புற உள்ளாட்சிகளின் மின் கட்டணம், குடிநீர் விநியோக கட்டணங்கள், பணியாளர்களுக்கான ஊதியம் ஆகியவற்றிற்காக ஆண்டுதோறும் சுமார் ரூ.5,300 கோடி நகர்புற உள்ளாட்சிகளுக்கு அரசு மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
* குடிநீர் கட்டணம், சொத்து வரி, தொழில் வரி, குத்தகை இனங்கள், கட்டட அனுமதி, பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் ஆகியவற்றை பொதுமக்கள் இணையதளம் மூலம் எளிதாக பெறும் வகையில் இணையதள வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
* மன்னர்களின் தலைநகரமாக விளங்கிய இராமநாதபுரம், விவசாயம் சார்ந்த வணிகம், அபரிதமான தொழில் வளர்ச்சியினை கொண்டுள்ள பெரம்பலூர் ஆகிய இரு நகராட்சிகளையும் மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவது குறித்து முதலமைச்சர் அவர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்.
* நகர்புற உள்ளாட்சிகளில் புதிதாக அனுமதிக்கப்பட்ட பொறியியல், நகரமைப்பு மற்றும் சுகாதார பிரிவு பணியிடங்களில் 2,566 பணியாளர்கள் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு விரைவில் நியமிக்கப்படவுள்ளனர்.
* பெருநகர சென்னை மாநகராட்சியில் நவீன உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்குவதற்காக “சிங்கார சென்னை 2.0” திட்டம் 2021ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை ரூ.966 கோடி மதிப்பீட்டில் 1048 பணிகள் முடிக்கப்பட்டும். ரூ.397 கோடி மதிப்பீட்டில் 103 பணிகள் நடைபெற்றும் வருகின்றன.
* சென்னை பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் ரூ.991 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவுகளை பயோ மைனிங் முறையில் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முடிவுறும் போது 568 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்படும்.
* சென்னையில் ரூ.906 கோடி மதிப்பீட்டில் 13 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டும் 12 பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெற்றும் வருகின்றன.
* சென்னை பெருநகர பகுதியில் அதிகரித்து வரும் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய பெருநகர காவல்துறை மற்றும் பெருநகர போக்குவரத்து கழகத்துடன் இணைந்து JICA கடன் உதவியுடன் ITMS பணிகள்
ரூ.530 கோடி மதிப்பீட்டில் பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
* பெருநகர சென்னை மாநகராட்சியில் மாற்று திறனாளிகள் கடலின் அழகை அருகில் சென்று ரசிக்கும் வண்ணம், மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் “மர நடைபாலங்கள்” அமைக்கப்பட்டுள்ளன.
* பெருநகர சென்னை மாநகராட்சி, முதன் முறையாக, பொது மற்றும் தனியார் துறை பங்களிப்புடன் கழிப்பறைகளை புதிதாக கட்டவும், பழையனவற்றை புதுப்பித்து 8 ஆண்டுகள் பராமரிக்கவும் மண்டலம் 5, 6 மற்றும் மெரினா கடற்கரை பகுதிகளிலுள்ள பணிகளை ரூ.430 கோடி மதிப்பீட்டிலும் இதர பகுதிகளிலுள்ள பணிகளை ரூ.1,202 கோடி மதிப்பீட்டிலும் துவக்கியுள்ளது.
* “நீலக்கொடி கடற்கரை” திட்டம் மூலம் ரூ.6 கோடியில் மெரினா கடற்கரை தரம் உயர்த்தப்படவுள்ளது.
*பல்வேறு சேவைகளான மின்வடம், குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்களுக்கான தனிபாதை போன்ற சிறப்பு அம்சங்கள் கொண்ட நடைபாதைகளுடன் கூடிய பெருநகர சாலைகள் சென்னை சிட்டி பார்ட்னர்ஷிப் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு 5.6 கி.மீ. நீளமுள்ள 4 சாலைகள் ரூ.132 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. மேலும், 6.6 கி.மீ. நீளமுள்ள 5 சாலைகள் ரூ.122 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளன.தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மக்களும் பயன் பெறும் வகையில் குடிநீர் திட்டங்களை செயல்படுத்துவதற்காகவும், பாதாள சாக்கடை திட்டங்களை நிறைவேற்றுவதற்காகவும் 1971 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உருவாக்கப்பட்டது.
* நமது கழக அரசு மீண்டும் 2021 ஆம் ஆண்டு அமைந்தபோது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 4.26 கோடி மக்களுக்கு 1935 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.
* கடந்த 4 ஆண்டுகளில் நமது கழக அரசு இவ்வாரியம் மூலம் ரூ.9,011 கோடி மதிப்பீட்டில் 71 குடிநீர் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. மேலும், ரூ.891 கோடி மதிப்பீட்டில் 52 கூட்டுக் குடிநீர் திட்டங்களை மறுசீரமைத்துள்ளது. இதன் மூலம் கூடுதலாக 102 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் 351 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
* ஆக, தற்பொழுது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தமிழ்நாட்டின் 13 மாநகராட்சிகள், 70 நகராட்சிகள், 325 பேரூராட்சிகள் மற்றும் 51,048 ஊரகக் குடியிருப்புகளுக்கு சராசரியாக நாளொன்றுக்கு 2,286 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் 5.28 கோடி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
* மேலும், தற்பொழுது ரூ.17,453 கோடி மதிப்பீட்டில் 25 கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளும், ரூ.767 கோடி மதிப்பீட்டில் 4 குடிநீர் திட்ட மறுசீரமைப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் இன்னும் கூடுதலாக 806 மில்லியன் லிட்டர் குடிநீர் 137 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் கிடைக்கும். ஆக இவை நிறைவுறும்போது அதாவது செப்டம்பர் 2025 இல் மொத்தமாக 6.65 கோடி மக்கள் பயன்பெறும் வகையில் 3,092 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க முடியும்.
* புதிதாக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் இரண்டாம் கட்டம், சேந்தமங்கலம் கூட்டுக் குடிநீர் திட்டம், திண்டுக்கல் மாநகராட்சி கூட்டுக் குடிநீர் திட்டம், கரூர்-திருச்சி கூட்டுக் குடிநீர் திட்டம், புதுக்கோட்டை கூட்டுக் குடிநீர் திட்டம், மயிலாடுதுறை கூட்டுக் குடிநீர் திட்டம், தென்காசி கடையநல்லூர் கூட்டுக் குடிநீர் திட்டம், தூத்துக்குடி திருச்செந்தூர் கூட்டுக் குடிநீர் திட்டம், ஈரோடு அந்தியூர் கூட்டுக் குடிநீர் திட்டம், திருப்பூர் கூட்டுக் குடிநீர் திட்டம், திருவள்ளூர் கூட்டுக் குடிநீர் திட்டம், காணை கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டங்கள் உள்ளிட்ட 16 திட்டங்கள் ரூ.16,875 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஆக இந்த 16 திட்டங்களும் நிறைவுறும்போது 7.5 கோடி மக்களுக்கு 3,627 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க இயலும்.
* 2024 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஃபெங்கல் புயலினால் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ராணிப்பேட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி மற்றும் சேலம் மாவட்டங்களிலுள்ள
76 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் பாதிப்படைந்தன. இதனை போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன.
* கடந்த 4 ஆண்டுகளில் 17 பாதாள சாக்கடை திட்டங்கள் ரூ.1,777 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், 10 பாதாள சாக்கடை திட்டங்கள் ரூ.3,608 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.
சென்னை குடிநீர் வாரியம்
* நமது கழக அரசு 2021 ஆம் ஆண்டு அமைந்தபோது, சென்னை பெருநகரின் மக்களுக்கு நாளொன்றிற்கு 830 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. கடந்த நான்காண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளால் தற்பொழுது தினமும் 1100 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
* கடந்த நான்கு ஆண்டுகளில்,
i. 15 புதிய குடிநீர் திட்டப் பணிகள் ரூ.2089 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனால் கூடுதலாக 19 இலட்சம் மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
ii. ரூ.560 கோடி மதிப்பீட்டில் 10 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டப் பணிகள் முடிவுறும்போது மேலும் 9 இலட்சம் மக்கள் பயனடைவார்கள்.
கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள பேரூரில், 400 MLD கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகள் ரூ.4,276 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. இத்திட்டம் முடிவுறும்போது சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 23 இலட்சம் மக்கள் பயனடைவார்கள்.
iii. 47 கழிவுநீர் திட்டப் பணிகள் ரூ.1,494 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், ரூ.3,393 கோடி மதிப்பீட்டில் 24 கழிவுநீர் திட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்பணிகள் முடிவுறும்போது
34 இலட்சம் மக்கள் பயனடைவார்கள்.
* மீஞ்சூரில் 100 MLD, நெம்மேலியில் 110 MLD மற்றும் 150 MLD சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள் உள்ளன. தற்பொழுது மேலும், நெம்மேலியின் அருகில் பேரூரில் 400 MLD கடல் நீரை குடிநீராக்கும் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முடிவடையும் பொழுது மொத்தமாக நாளொன்றிற்கு 760 மில்லியன் லிட்டர் குடிநீர் கடல் நீரிலிருந்து உற்பத்தி செய்ய முடியும். பருவ மழை பொய்க்கும் காலங்களில் கூட சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் பிரச்சனை ஏதும் ஏற்படாதவாறு சமாளிக்க முடியும்.
* சென்னையின் வட பகுதிகளில் பெருகி வரும் மக்கள் தொகையின் தேவைகளை பூர்த்தி செய்ய தற்போதுள்ள குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டமைப்புகளின் திறன் போதுமானதாக இல்லாததால், கழிவுநீர் மற்றும் குடிநீர் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், நீர் மாசுபாட்டை குறைக்கவும் ரூ.946 கோடியில் புதிய திட்டம் தொடங்கப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
* மேலும், கூவம் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க அனைத்து பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
* சென்னை மாநகரிலுள்ள வணிக வளாகங்கள் மற்றும் பன்னடுக்கு குடியிருப்பு கட்டிடங்களில் ஒரு இலட்சம் Smart Meter பொது மற்றும் தனியார் துறை பங்களிப்புடன் பொருத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
* அடையாறு மண்டலத்திலுள்ள பள்ளிப்பட்டு மற்றும் திருவான்மியூர் குடிநீர் விநியோக நிலையங்களிலிருந்து குடிநீர் விநியோகிக்கும் பகுதிகளுக்கு 24×7 குடிநீர் வழங்கும் முறையை செயல்படுத்தும் பொருட்டு சுமார் ரூ.690 கோடி மதிப்பீட்டில் விரைவில் பணிகள் தொடங்கப்படவுள்ளன.
* சென்னை மாநகரின் அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வழங்க ஏதுவாக 100 கி.மீ. நீளத்திற்கு முதன்மைச் சுற்றுக்குழாய் அமைக்கும் திட்டம் (Ring Main) ரூ.2,423 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் மூலம் 5 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் 4 நிலையங்கள் என மொத்தம் 9 குடிநீர் வழங்கல் அமைப்புகளும் ஒன்றிணைக்கப்படுவதால் சென்னை மாநகரத்தின் அனைத்து நீர் பகிர்மான நிலையங்களுக்கும் சமச்சீரான குடிநீர் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்.
* செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நாள் ஒன்றுக்கு 530 MLD குடிநீர் விநியோகம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதன் அடிப்படையில் ஏற்கனவே உள்ள 265 MLD பிரதான குழாயுடன் 265 MLD கொள்ளளவு கொண்ட 2 ஆவது பிரதான குழாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.இப்பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் முறையாக பணி செய்யாததால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, மறு ஒப்பந்தம் கோரப்பட்டு, மீண்டும் பணி ஆணை வழங்கப்பட்டது. தற்பொழுது, 90 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் இறுதிக்குள் இப்பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இத்திட்டம் நிறைவுறும்போது, தினமும் 530 MLD குடிநீர் வழங்க இயலும். அதாவது சென்னை மாநகரத்திற்கு தற்பொழுது வழங்கப்படும் குடிநீரின் அளவில் பாதி அளவிற்கு வழங்க இயலும்.
* சென்னை குடிநீர் வாரியம், தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றி, அவர்களது குடும்பங்களின் சமூக-பொருளாதார மேம்பாடு, கண்ணியமான சுயதொழில் மற்றும் நிலையான வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்காக, DICCI-ன் (Dalit Indian Chamber of Commerce & Industry) மூலம் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி முதற்கட்டமாக
100 ஜெட்டிங் கம் கிராபிங் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 102 வாகனங்கள் வழங்கப்பட உள்ளன.
சார்பு நிறுவனங்கள்
நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான மேலாண்மையை “டுபிட்கோ” “டுபிசெல்” மற்றும் “டுவிக்” நிறுவனங்களும். திருப்பூர் பகுதிக்கு குடிநீர் மற்றும் கழிவுநீரகற்றுதல் சம்மந்தப்பட்ட பணிகளை தனியார் பங்களிப்புடன் புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகமும் செயல்படுத்தி வருகின்றன. தமிழ்நாட்டில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு தூய்மையான மற்றும் பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்கிட வேண்டுமென்று இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. அதன் முதற்கட்டமாக, CRRT மூலம், அடையாறு நதியை மீட்டெடுத்து, நதிக்கரை நெடுக பசுமை பரப்புகளை அதிகரித்து அழகுறச் சீரமைக்கும் திட்டம், பொது மற்றும் தனியார் துறை பங்களிப்புடன் சுமார் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அடையாறு நதிக்கரையிலிருந்த 9,539 குடும்பங்களில் 4,977 குடும்பங்கள் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் மறுகுடியமர்த்தப்பட்டுவிட்டனர். மீதமுள்ள 4,562 குடும்பங்களும் அவர்களது முழு சம்மதத்துடன் மறுகுடியமர்த்தப்படுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
The post ”30 புதிய பூங்காக்கள்” : சென்னை மாநகராட்சிக்கான அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்ட புதிய அறிவிப்புகள் என்ன? appeared first on Dinakaran.
