- புதுக்கோட்டை
- மோடி
- என்டிஏ
- தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில்
- பாஜக
- ஜனாதிபதி
- நயினார் நாகேந்திரன்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மதுரை
புதுக்கோட்டை: தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’, என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் பிரசார பயணத்தை கடந்த அக்.12-ல் மதுரையில் தொடங்கினார். பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அவர், ஜனவரி 9ம் தேதி நிறைவு செய்கிறார். நிறைவு விழா புதுக்ேகாட்டையில் நடக்க உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்து உள்ளார்.
இதற்காக பாஜ சார்பில், புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளத்திவையல் பகுதியில் 42 ஏக்கர் பரப்பளவில், பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அந்த இடம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் 5 பேர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர், உளவு பிரிவினர் தற்போதே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், விழா நடைபெறும் இடத்தை சுற்றியுள்ள பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளின் பெயர் மற்றும் பின்புலங்களும் உளவு பிரிவினரால் சேகரிக்கப்பட்டு வருகிறது.
விழா நடைபெறும் இடத்தில் இருந்து சற்று தொலைவில் 10 ஏக்கர் பரப்பளவில் ஹெலிகாப்டர் இறங்கு தளமும் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, மேடை அமைப்பதற்கும், பந்தல் அமைப்பதற்கும் பந்தல் முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு கடந்த 21ம் தேதி நடந்தது. மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் பாஜ மாநில செயலாளர் கருப்பு முருகானந்தம், அதிமுக., சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ஐஜேக கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நயினார் பிரசார நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி யில் தற்போது வரை அதிமுக, பாஜ, தமாகா உள்ளிட்ட கட்சிகளே உள்ளன. தேமுதிக, பாமக இன்னும் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. ஓபிஎஸ், டிடிவி கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டனர். கூட்டணி உறுதி ஆகாததால் தமிழக பயணத்தை அமித்ஷா ஒத்திவைத்து உள்ளார். பெரிய கூட்டணியை உருவாக்குவோம் என கூறி வரும் அதிமுக, பாஜவை நம்பி எந்த கட்சியும் செல்ல தயாராக இல்லை. இதனால் கடும் அப்செட் அடைந்த அமித்ஷா, ஓபிஎஸ் மற்றும் டிடிவியை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வரும் பொறுப்பை அண்ணாமலையிடம் ஒப்படைத்து உள்ளார். பிரதமர் மோடி தமிழக பயணத்துக்கு முன் கூட்டணியை இறுதி செய்யும் முயற்சியில் பாஜ இறங்கி உள்ளது. இதனால், நயினார் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் எடப்பாடி, ஜி.கே.வாசன் உள்ளிட்ட சிறிய கட்சிகள் மட்டுமே பங்கேற்கும் என கூறப்படுகிறது. ஓபிஎஸ், டிடிவி மற்றும் பாமக, தேமுதிக சார்பில் தலைவர்கள் பங்கேற்பார்களா என்ற கேள்வி எழுந்து உள்ளது.
