- அஇஅதிமுக
- திமுக
- பாஜக
- தலைஞானிறு பஞ்சாயத்து வேதாரண்யம்
- தலைஞாயிறு பஞ்சாயத்து
- வேதாரண்யம் தாலுகா
- நாகப்பட்டினம் மாவட்டம்
- செந்தமிழ் செல்வி
- தின மலர்
*தலைஞாயிறு பேரூராட்சியில் இணைந்த கைகள்
வேதாரண்யம் : நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பேரூராட்சி உள்ளது. இந்த பேரூராட்சியில் 1 தலைவர், 1 துணைத்தலைவர் மற்றும் 15 உறுப்பினர்கள் உள்ளனர். தலைவராக அதிமுகவை சேர்ந்த செந்தமிழ் செல்வி தலைவராக உள்ளார். துணைத்தலைவராக பாஜகவை சேர்ந்த கதிரவன் இருந்தார்.
15 கவுன்சிலர்களில் 7 பேர் திமுகவை சேர்ந்தவர்கள், 6 பேர் அதிமுகவை சேர்ந்தவர்கள். துணைத்தலைவராக இருந்த கதிரவன் முன்பு அதிமுகவில் இருந்தார். இதன் காரணமாக இந்த பேரூராட்சியில் அதிமுகவின் பலம் 8 ஆக இருந்ததால், அதிமுக தலைமை பதவியை பெற்றது. இதில் துணைத்தலைவராக இருந்த கதிரவன் தற்போது பாஜகவில் இணைந்து விட்டார். எனவே பாஜகவை சேர்ந்தவர் துணைத்தலைவர் பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில் துணைத்தலைவராக உள்ள பாஜகவை சேர்ந்த கதிரவன் மீது கவுன்சிலர்கள் அடுக்கடுக்கான குற்றசாட்டை வீசி வந்தனர். எந்த தீர்மானம் கொண்டு வந்தாலும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிறைவேற்ற விடாமல் தடுத்து விடுகிறார்.
பேரூராட்சி வளர்ச்சி சம்பந்தமாக ஏதேனும் திட்டங்கள் கொண்டு வர முயற்சித்தால் அதற்கு முட்டுக்கட்டை போடுகிறார். எனவே அவரை நீக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் சிலர் போர் கொடி தூக்கினர்.
பின்னர் படிப்படியாக போர்கொடி தூக்கிய கவுன்சிலர்களின் எண்ணிக்கை வளர்ந்து ஒட்டு மொத்த தலைஞாயிறு பேரூராட்சி கவுன்சிலர்கள் அனைவருமே அவருக்கு எதிராக திரும்பினர். இதன் காரணமாக பாஜகவை சேர்ந்த துணைத்தலைவர் கதிரவனுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர, கவுன்சிலர்கள் கூட்டாக, 1 மாதத்திற்கு முன்பாக தலைவர் செந்தமிழ் செல்வியிடம் மனு அளித்தனர்.
கூட்டம் நடத்துவது தொடர்பாக தலைஞாயிறு பேரூராட்சி தலைவர் செந்தமிழ் செல்வி, பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமியுடன் கலந்தாலோசித்தார். இதனை தொடர்ந்து இன்று தலைஞாயிறு பேரூராட்சி கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்படும் கூட்டம் என்பதால் தலைஞாயிறு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பேரூராட்சி வளாகத்தில் வேதாரண்யம் டிஎஸ்பி சரவணன் தலைமையில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், கரியாப்பட்டினம் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி கண்காணிப்பில் 25க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பேரூராட்சி வளாகத்திற்குள் கவுன்சிலர்களை தவிர ஏனையோர் முக்கிய காரணம் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் கவுன்சிலர்கள் ஒவ்வொருவராக தலைஞாயிறு பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தனர். தலைவர், அனைத்து கவுன்சிலர்களும் வந்த நிலையில் கூட்டம் தொடங்காமல் இருந்தது. இது குறித்து போலீசார் உள்ளே சென்று விசாரித்த போது துணை தலைவர் வரவேண்டும் என்று காத்திருப்பதாக சொல்லப்பட்டது.
இவ்வாறு பாஜகவை சேர்ந்த துணைத்தலைவர் கதிரவன் வருவார் என்று அனைவரும் வழிமேல் விழி வைத்து காத்திருந்தனர். அவர் வருவார் என்று எதிர்பார்த்து பாதுகாப்புக்கு நின்றிருந்த அலார்ட்டாக காத்திருந்தனர். ஆனால் நேரம் சென்றதே தவிர துணைத்தலைவர் வரவில்லை. இதனால் காத்திருந்த திமுக, அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்தை தொடங்க வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து கூட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தலைஞாயிறு பேரூராட்சி கூட்டம் தலைவர் செந்தமிழ் செல்வி தலைமையில் தொடங்கியது. கூட்டத்திற்கு பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கிருத்திகாதேவி, முத்துலட்சுமி, வீரசெல்வி, அப்துல் அஜீஸ், அஜய் ராஜா, மாதவன், மல்லிகா ஆகிய 7 திமுக கவுன்சிலர்களும், பாமா, அருணா, ராஜேந்திரன், மகேஷ்வரி, ரேவதி, விஜயா ஆகிய அதிமுகவை சேர்ந்த 6 கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். துணைத்தலைவரான பாஜகவை சேர்ந்த கதிரவன் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
கூட்டம் தொடங்கியவுடன் தீண்டாமை உறுதி மொழி வாசிக்கப்பட்டது. அதன் பின்னர் துணைதலைவரான பாஜகவை சேர்ந்த கதிரவன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திமுக, அதிமுகவை சேர்ந்த 13 கவுன்சிலர்களும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிப்பதாக தெரிவித்தனர். குரல் ஓட்டெடுப்பு மூலம் இந்த தீர்மானம் ஒட்டு மொத்தமாக நிறைவேறியது.
தலைஞாயிறு பேரூராட்சியில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நடைமுறைபடுத்த மாவட்ட கலெக்டருக்கும், தேர்தல் ஆணையருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
தலைஞாயிறு பேரூராட்சியில் துணை தலைவரை பதவி நீக்கம் செய்ய திமுக, அதிமுக உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post பாஜகவை காலி செய்ய திமுகவுடன் கைகோர்த்த அதிமுக appeared first on Dinakaran.
