*விவசாயிகள் அதிர்ச்சி
கோபி : கோபி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பாக்கு குலைகள், வாழைத்தார்களை இரவு நேரத்தில் திருடும் கும்பலால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். கோபி அருகே உள்ள பாரியூர், நஞ்சகவுண்டன்பாளையம், நஞ்சை கோபி, புதுக்கரைபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் தடப்பள்ளி வாய்க்கால் பாசனத்தின் மூலமாக நெல், கரும்பு, வாழை மற்றும் பாக்கு பயிரிடப்பட்டு வருகிறது.
இங்கு, உள்ள பாக்கு தோப்புகளில் கடந்த சில மாதங்களுக்கு முன் அடுத்தடுத்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பாக்கு குலைகள் நள்ளிரவில் திருடப்பட்டது. திருட்டை தடுக்க விவசாயிகளே குழு அமைத்து இரவு நேரங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, அத்தாணி அருகே உள்ள கிராமங்களை சேர்ந்த சிலர் நள்ளிரவில் பாக்கு குலைகளை திருடுவது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து விவசாயிகள் அளித்த புகாரின் அடிப்படையில் பாக்கு குலைகள் திருடியவர்கள் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர் சில மாதங்களாக விவசாய விளை பொருட்கள் திருடப்படாமல் இருந்த நிலையில் தற்போது அறுவடைக்கு தயாரான வாழைத்தார்கள் திருடப்பட்டு வருகிறது.
கடந்த 10 நாட்களில் மட்டும் நஞ்சகவுண்டன்பாளையம், குள்ளம்பாளையம், வெள்ளாளபாளையம் கிராமங்களை சேர்ந்த பலரது விவசாய தோட்டத்தில் இருந்த சுமார் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 200க்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் நள்ளிரவில் திருடப்பட்டு உள்ளது.
வாழைத்தார்களை திருடுவதற்கு 4 முதல் 5 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனங்களில் வந்து வாழைத்தார்களை திருடி சென்று சந்தைகளில் விவசாயிகள் போன்று விற்பனை செய்துவிட்டு தப்பி விடுகின்றனர்.
இதனால், அப்பகுதியில் உள்ள விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து தடப்பள்ளி அரக்கன் கோட்டை பவானி நதி பாசன விவசாயிகள் தங்கள் சங்க தலைவர் சுபி.தளபதி கூறுகையில், ‘‘கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து பாக்கு குலைகளை திருடி வந்த கும்பல் தற்போது வாழைத்தார்களை திருடி வருகிறது.
சுமார் ஒரு வருடம் வரை மழை, காற்றில் இருந்து பாதுகாத்து அறுவடைக்கு தயாரான நிலையில் நள்ளிரவில் கும்பலாக வந்து வாழைத்தார்களை திருடி செல்கின்றனர். தனியாக தோட்டத்தில் வசித்து வரும் விவசாயிகள், வாழைத்தார் திருடும் கும்பலை எதிர்கொள்ள முடியாததை சாதகமாக்கி கொள்ளும் கும்பல், எளிதில் வாழைத்தார்களை திருடிச்செல்கிறது.
எனவே, காவல்துறையினர், விவசாய விளை பொருட்களை திருடும் கும்பலை பிடித்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு, திருடப்பட்ட வாழைத்தார் மற்றும் பாக்கு குலைகளுக்கு உரிய இழப்பீட்டை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்’’ என்றார்.
The post கோபி சுற்றுப்புற பகுதிகளில் இரவு நேரத்தில் வாழைத்தார்கள், பாக்கு குலைகள் திருடும் கும்பல் appeared first on Dinakaran.
