
*கி.பி. 7ம் நூற்றாண்டை சேர்ந்தது
செய்யாறு : செய்யாறு அருகே மேல்மா கிராமத்தில் பல்லவர் கால விஷ்ணு துர்க்கை சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, மேல்மா கிராமத்தில் கற்பக விநாயகர் கோயில் உள்ளது. இதனருகே பல்லவர் கால விஷ்ணு துர்க்கை எனும் கொற்றவை புடைப்பு சிற்பம் நேற்று கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் எறும்பூர் கை.செல்வக்குமார் கூறியதாவது:
மேல்மா கிராமத்தில் விஷ்ணு துர்க்கை எனும் கொற்றவை புடைப்புச்சிற்பம் நேற்று கண்ெடடுக்கப்பட்டது. இது பழந்தமிழர் வழிபாட்டில் கொற்றவைக்கு தனி இடம் உண்டு. பாலை நில கடவுளாகவும், வேட்டைக்கு செல்வோர், போருக்கு செல்வோர் வழிபடும் கடவுளாகவும் பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு பழக்கத்தில் உள்ளது.
அந்த வகையில் இந்த ஊரில் துர்க்கை அம்மனாக தொன்று தொட்டு வழிபாடு நடத்தி வரும் இச்சிலை விஷ்ணு துர்க்கை எனும் கொற்றவை புடைப்பு சிற்பம் வடக்கு திசை நோக்கி காணப்பட்டது. இதன் உயரம் 111 செமீ., அகலம் 22 சென்டி மீட்டராகும்.
கரண்ட மகுடம், காதுகளில் பத்திர குண்டலங்களுடன், கழுத்தில் சரபலி, மார்பு கச்சை, தோள்பட்டையுடன், இடுப்பில் அரையாடை முடிச்சுடன் உள்ளது. 4 கரங்களில் சங்கு, சக்கரம், அபயம், கடிஹஸ்தங்கள் காட்டப்பட்டுள்ளது.
செய்யாறு கோட்டப்பகுதிகளில் 8 கரங்களுடன் கூடிய கொற்றவை சிலைகள் பல காணப்பட்டாலும் சின்ன செங்காடு கிராமத்தில் கண்டெடுத்ததுபோல் இங்கும் கொற்றவை சிலை 4 கரங்களுடன் உள்ளது. இது சிறப்புக்குரியதாகும். மேலும் இந்த வகை புடைப்பு சிற்பத்தின் ஒழுங்கமைவை வைத்து பல்லவர் காலமாக, 7ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக கருதவேண்டி உள்ளது.
இவ்வாறு செல்வகுமார் தெரிவித்தார்.
The post செய்யாறு அருகே மேல்மா கிராமத்தில் பல்லவர் கால விஷ்ணு துர்க்கை சிற்பம் கண்டெடுப்பு appeared first on Dinakaran.
