×

இறுதி எச்சரிக்கை விடுத்த சபாநாயகர் பேரவையில் வேல்முருகனை முதல்வர் கண்டித்ததால் பரபரப்பு

தமிழக சட்டப் பேரவையில் நேற்று பாமக உறுப்பினர் ஜி.கே.மணி, தமிழக அரசின் மொழிக்கொள்கை தொடர்பாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய பண்ருட்டி தொகுதி உறுப்பினர் வேல்முருகன், அதிமுக ஆட்சியில் ஒரு துறை சார்ந்த ஆள் தேர்வு நடத்தப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்தார்.

* அதற்கு பதில் அளித்து பேசிய ஆர்.பி.உதயகுமார், “வேல்முருகன் பொத்தாம் பொதுவாக பேசுகிறார் என்றார். உடனே இருக்கையில் இருந்து எழுந்த வேல்முருகன், தனக்கு பேச வாய்ப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, சபாநாயகர் இருக்கையை நோக்கி வேகமாக அவைக்கு நடுவில் வந்து கூச்சலிட்டார்.

அப்போது, “உங்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்க முடியுமா?” என அமைச்சர் சேகர்பாபு கூற, அவர் முன்பு சென்று வேல்முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுந்து, “உறுப்பினர் வேல்முருகன் அவை மரபுகளை மீறி, இவ்வாறு நடந்து கொண்டிருக்கக்கூடிய சம்பவங்களை எல்லாம் பார்க்கிற போது வேதனையாக இருக்கிறது என்றார்.

* சபாநாயகர் அப்பாவு: வேல்முருகன் இருக்கையை விட்டு எழுந்து வந்து மிரட்டும் தொனியில் பேசுவதை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது.

* முதல்வர் மு.க.ஸ்டாலின்: உறுப்பினர் வேல்முருகன் பேசுகிறார் என்றால், நான் அவையில் உட்கார்ந்து பொறுமையாகக் கேட்கக் கூடியவன். ஏனென்றால், நல்ல கருத்துகளை, எதிர் கருத்துகளைச் சொல்வதாக இருந்தாலும் அதை அர்த்தத்தோடு சொல்லக்கூடியவர். இருந்தாலும், சில நேரங்களில் அவர் அதிகப்பிரசங்கித்தனமாக நடந்து கொள்கிற இத்தகைய நிலைமைகளைப் பார்க்கிறபோது நான் உள்ளபடியே வேதனைப்படுகிறேன்.

* சபாநாயகர் அப்பாவு: இதுவே கடைசியாக இருக்கட்டும். இதை நீங்கள் திருத்திக்கொள்ள வேண்டுமென்று முதல்வர் கேட்டு கொண்டுள்ளார். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

* அனுமதி கொடுங்கள் என்று தான் கேட்டேன்- வேல்முருகன்
அவைக்கு வெளியில் வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ் மொழியை தமிழகத்தில் ஆட்சி மொழியாக, அலுவல் மொழியாக, பயிற்று மொழியாக கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை தான் குறிப்பிட்டேன். ஆனால், நான் என்ன பேச வருகிறேன் என்பதையே புரிந்து கொள்ளாமல், அதிமுகவினரும், அமைச்சராக இருக்கும் சேகர்பாபுவும் கூச்சலிட்டனர். முதல்வரும் எனது செயலை தவறாக புரிந்து கொண்டது வருத்தம் அளிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

The post இறுதி எச்சரிக்கை விடுத்த சபாநாயகர் பேரவையில் வேல்முருகனை முதல்வர் கண்டித்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Velmurugan ,Speaker's Council ,Tamil Nadu Legislative Assembly ,BMC ,G. K. Mani ,Tamil government ,Panruti ,Adimuga ,
× RELATED தமிழ்நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு...