×

நம்ம ஊரு திருவிழாவில் பங்கேற்க கலைகுழுவினர் பதிவு செய்யலாம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூரில் நம்ம ஊரு திருவிழாவிற்கான கலைக்குழுவினர் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் பதிவு செய்யலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் கலெக்டர் மு.பிரதாப் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பில் சென்னையில் பொங்கல் பண்டிகையின்போது, தமிழ் நாட்டின் நாட்டுப் புறக் கலைகள், அயல் மாநில நாட்டுப்புறக் கலைகள், செவ்வியல் கலைகள் இடம் பெறும் வகையில், நம்ம ஊரு திருவிழா 18 இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கோயம்புத்தூர், தஞ்சாவூர், வேலூர், சேலம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய 8 இடங்களில் நம்ம ஊரு திருவிழா நடத்தப்பட்டது. இந்த ஆண்டும் மேற்காணும் 8 இடங்களிலும் இக்கலை திருவிழா நடத்தப்பட உள்ளது.

இவ்விழாவில் நிகழ்ச்சி நடத்த விரும்பும் கலைக்குழுக்களின் நிகழ்ச்சி பதிவு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மார்ச் 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்படி நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், பறையாட்டம், பம்பைகைச் சிலம்பாட்டம், இறைநடனம், துடும்பாட்டம், ஜிக்காட்டம், கிராமிய பாட்டு மற்றும் பல்சுவை நிகழ்ச்சி வழங்கும் கலைக் குழுக்கள் வருகிற 22 அன்றும், தெருக்கூத்து, இசைநாடகம், நாடகம், கனியான்கூத்து, பொம்மலாட்டம், தோல்பாவைக்கூத்து, வில்லுப்பாட்டு, தேவராட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், கும்மி, கோலாட்டம், மரக்கால் ஆட்டம், பரதநாட்டியம், பழங்குடியினர் நடனம் நிகழ்ச்சி நடத்துபவர் மற்றும் இதர கலைக்குழுக்களின் நிகழ்ச்சிகள் மார்ச் 23 அன்றும் திருவள்ளூர், ஆயில்மில், அருகில் உள்ள எம்எஸ்கே திருமண மண்டபத்தில் பதிவுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மாவட்ட அளவிலான தேர்வில் பங்குபெற விரும்பும் கலைக்குழுக்கள் திருவள்ளூர் மாவட்டத்திற்கான பொறுப்பாளர் உதவி இயக்குநர் சி.நீலமேகன், 9444668932 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். கலைஞர்களின் கோரிக்கையின் அடிப்படையில் 38 மாவட்டங்களிலும் கலைக் குழுக்களின் நிகழ்ச்சி பதிவு செய்யப்பட உள்ளது. இப்பதிவுக்கு வரும் கலைஞர்களுக்கு மதிப்பூதியம், போக்குவரத்து செலவினங்கள் வழங்கப்படாது. ஒவ்வொரு கலைக்குழுவின் 5 நிமிட வீடியோ பதிவு செய்யப்பட்டு கலைப்பண்பாட்டுத் துறையால் அமைக்கப்படும் தேர்வுக்குழுவால் தமிழ்நாட்டில் 8 இடங்களில் நடைபெற உள்ள சங்கமம் திருவிழாவில் நிகழ்ச்சி வழங்குவற்கான கலைக்குழுக்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்விழாக்களில் சிறப்பான நிகழ்ச்சி வழங்கிய கலைக் குழுவினர் மாநில அளவிலான தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்பட்டு 2026ம் ஆண்டு சென்னை சங்கமம் விழாவில் வாய்ப்பு பெறுவார்கள். கலை பண்பாட்டுத்துறை அளித்துள்ள இந்த வாய்ப்பினை அனைத்து கலைஞர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

The post நம்ம ஊரு திருவிழாவில் பங்கேற்க கலைகுழுவினர் பதிவு செய்யலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Namma Uru festival ,Thiruvallur ,Collector ,M. Pratap ,Tamil Nadu Government Art and Culture Department ,Chennai ,
× RELATED திருநின்றவூர் நகராட்சியில் காலி...