*மதுரையில் உற்சாகம்
மதுரை : சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதை மதுரை மாநகராட்சி மாணவர்கள், அறிவியல் விஞ்ஞானிகளின் முகமூடிகளை அணிந்து பூங்கொத்து கொடுத்து வரவேற்பதாகவும், விண்வெளி சாதனைகள் குறித்து விளக்கிப் பேசியும் கைதட்டி ஆர்ப்பரித்து கொண்டாடி மகிழ்ந்தனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சர்வதேச விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ்.
இவர் கடந்த 5.6.2024ல் 8 நாள் ஆய்வுப்பயணமாக விண்வெளிக்கு சென்றார். அங்கு ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக அவர் புட்ச் வில்மோருடன் விண்வெளியிலேயே 9 மாதங்கள் தங்கினார். உலகம் முழுவதும் இது பேசுபொருளாகி, எப்படி அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள் என கேள்வி எழுந்தது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்களுக்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சக பணியாளர்களான அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் சேர்ந்து தற்போது பூமிக்கு திரும்புகின்றனர்.
இந்திய நேரப்படி நேற்று காலை 10.35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு புறப்படுவதற்கு ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தில் இவர்கள் புறப்பட்டனர். விண்கலம் பூமியை நோக்கிய பயணத்தில் இருந்த நிலையில் நேற்று சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 பேருடன் அந்த விண்கலம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை பூமியை வந்தடைந்தது. உலகம் முழுவதும் சுனிதா வில்லியம்ஸ்சின் பூமி திரும்பும் நிகழ்வு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இதையொட்டி, இந்திய வம்சாவளி பெண் என்பதால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோர் பத்திரமாக பூமிக்கு திரும்புவதை வரவேற்கும் வகையில் மதுரை மஞ்சனக்கார தெருவில் உள்ள சிங்காரத்தோப்பு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், அவரை வரவேற்கும் விதமாக மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர் சுனிதா வில்லியம்ஸ் முகமூடி அணிந்த மாணவிக்கு, பூங்கொத்து கொடுத்து முகமூடி அணிந்த கலிலியோ, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், சர்.சி.வி.ராமன் உள்ளிட்ட அறிவியல் விஞ்ஞானிகள் வரவேற்று, கைதட்டி ஆர்ப்பரித்து மகிழ்ந்தனர்.
சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் குறித்த நிகழ்வுகளையும், சாதனைகளையும் மாணவிகள் விளக்கி பேசினர். பத்திரமாக இவர்கள் பூமிக்கு திரும்புவதை எல்இடி திரை மூலமாக ஸ்மார்ட் வகுப்பில் நேரடியாக மாணவ, மாணவிகள் கண்டுகளிக்கும் வகையில் சிறப்பு காட்சி ஒளிபரப்பு ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது.
பாலாடையில் சுனிதா ஓவியம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கன்னார் தெருவை சேர்ந்த ஓவியர் கார்த்திக். இவர் பழங்கள், இலைகள், காய்கறிகள், மயிலிறகு உள்ளிட்டவற்றில் சுதந்திர போராட்ட வீரர்கள்,அரசியல் தலைவர்கள், சுவாமி படங்களை வரைந்துள்ளார். தற்போது விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸை வரவேற்கும் விதமாக அவரது படத்தை பாலாடையில் வரைந்து அசத்தியுள்ளார். இது இணையதளத்தில் வைரலாகி உள்ளதை பார்த்து பலரும், பாராட்டியுள்ளனர்.
The post பிரபல அறிவியல் விஞ்ஞானிகளின் முகமூடியுடன் பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்க்கு மாணவர்களின் மாறுபட்ட வரவேற்பு appeared first on Dinakaran.
