×

திருத்தணி கோயிலுக்கு செல்லும்போது கூகுள் மேப்பால் வழிதவறி அவதிக்குள்ளாகும் பக்தர்கள்: அறிவிப்பு பலகை வைக்க கோரிக்கை

திருத்தணி: திருத்தணி புறவழிச்சாலையில் கூகுள் மேப்பை பயன்படுத்தி வாகனங்களில் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் வழிதவறி செல்வதை தடுக்க நெடுஞ்சாலைத்துறையினர் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். திருத்தணி நகரில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.52 கோடி மதிப்பீட்டில் சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அரக்கோணம் சாலை வரை புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னை, திருப்பதி போன்ற பகுதிகளிலிருந்து திருத்தணி கோயிலுக்கு வருபவர்கள் மற்றும் கனரக வாகனங்கள், கார்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரும்பாலும் புறவழிச்சாலையை பயன்படுத்தி பயணம் செய்கின்றனர். இதனால், நகரில் போக்குவரத்து நெரிசல் குறைந்து வருகிறது. வெளியூர்களிலிருந்து வாகனங்களில் முருகன் கோயிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் கூகுள் வரைபடத்தை பயன்படுத்தி பயணம் செய்கின்றனர்.

இவ்வாறு, பயணம் செய்யும்போது புறவழிச்சாலையில் ஜோதி நகர் பகுதியில் கோயிலுக்குச் செல்லும் வழி என்று கூகுள் வழி காட்டுவதால், புறவழிச்சாலையில் இருந்து ஜோதி நகர், அரசு மருத்துவமனை, ரயில்வே கேட் வழியாக மேட்டுத்தெரு வழியில் செல்லும்போது வாகன நெரிசல் மற்றும் நேரம் விரயமாகி வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கூகுள் வரைபடத்தின் குளறுபடியால், வழிமாறி செல்வதை தடுக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் கோயிலுக்குச் செல்லும் வழியில் ஜோதி நகர் சந்திப்பு பகுதியில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருத்தணி கோயிலுக்கு செல்லும்போது கூகுள் மேப்பால் வழிதவறி அவதிக்குள்ளாகும் பக்தர்கள்: அறிவிப்பு பலகை வைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruttani ,Highways Department ,Highways Department… ,Tiruttani temple ,
× RELATED அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்