×

சைதாப்பேட்டையில் சணல் பொருட்கள் விற்பனை கண்காட்சி

சென்னை: தேசிய சணல் வாரியம் சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் சணல் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சி நடைபெறுகிறது. இந்தியாவில் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான வகையில் உற்பத்தி செய்யப்படும் சணல் பொருட்கள் பயன்படுத்துவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய ஜவுளி ஆணையம் மற்றும் தேசிய சணல் வாரியம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்து வருகிறது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக தேசிய சணல் வாரியம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சைதாப்பேட்டை வர்த்தகர் சங்க மண்டபத்தில் சணல் உற்பத்தி விற்பனை கண்காட்சி நடத்தி வருகிறது.

இந்த கண்காட்சி 18ம் தேதி (நேற்று) முதல் வரும் 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியை நேற்று தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன இயக்குநர் ஆர்.அம்பலவானன் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் தமிழ்நாடு உள்பட நாட்டில் உள்ள 20 மாநிலங்களை சேர்ந்த சணல் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான சணலிலான கைவினைப்பொருட்கள், பொம்மைகள், பேன்சி பேக்குகள், ஷாப்பிங் பேக்குகள், தரை விரிப்பான்கள், பரிசு பொருட்கள், செருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த கண்காட்சி காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சைதாப்பேட்டையில் சணல் பொருட்கள் விற்பனை கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Jute products sales ,Saidapet ,Chennai ,Saidapet, Chennai ,National Jute Board ,India ,Textile Commission of India… ,Dinakaran ,
× RELATED திருநின்றவூர் நகராட்சியில் காலி...