×

இரட்டை வேடம் போடுவதில் அதிமுகவுக்கு ஆஸ்கார் கொடுக்கலாம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு

பெரம்பூர்: இரட்டை வேடம் போடுவதில் அதிமுகவுக்கு ஆஸ்கார் விருது கொடுக்கலாம் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், ‘’மக்கள் முதல்வரின் மனிதநேய விழா’’ கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, திருவிக. நகர் வடக்கு பகுதி சார்பில், பெரம்பூர் கண்ணபிரான் தெரு, புளியந்தோப்பு நேரு நகரில், ‘’அன்னம் தரும் அமுதக்கரங்கள்’’ நிகழ்வில் கலந்துகொண்டு ஏழை, எளிய மக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளருமான பி.கே.சேகர்பாபு காலை உணவு வழங்கினார். இதில் தாயகம் கவி எம்எல்ஏ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது; சிவகங்கையை சேர்ந்த ஓம் குமார் என்பவர் மனைவி, இரண்டு குழந்தைகளோடு திருச்செந்தூருக்கு சாமி கும்பிட வருகிறார். அப்படி வரும்போது மூத்தோர்கள் செல்லக்கூடிய சிறப்பு வழியில் செல்கிறார். குழந்தைகளை பொது வரிசையில் விட்டுவிட்டு மூத்தோர் வரிசையில் மனைவிக்கு பின்னால் வரிசையில் தரிசனம் செய்ய சென்று இருக்கிறார். அப்போது மூச்சு திணறல் காரணமாக அவதிப்பட்ட அவரை கோயில் ஊழியர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். திருச்செந்தூர் கோவிலில் எந்தவிதமான கூட்ட நெரிசலுக்கும் வழியில்லை. கணவருக்கு சுவாசப் பிரச்சனை இருக்கிறது என்று மனைவி கைப்பட காவல் நிலையத்தில் எழுதிக் கொடுத்துவிட்டார். ஏதாவது கிடைக்காதா என்று இலவுகாத்த கிளி போல் காத்துக்கொண்டிருக்கும் எடப்பாடி போன்ற அரசியல்வாதிகள் இறந்தவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். அந்த குடும்பத்தின் நிலைமையை அறிந்து அவர்களுக்கு உதவி செய்யுங்கள். தேவையில்லாமல் அவதூறுகளை பரப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் எந்த முன்னேற்றத்திற்கு திருச்செந்தூர் கோவிலுக்கு வழி வகுத்தனர். உதவிக்கு வரவில்லை என்றாலும் உபத்திரத்திற்கு வராமல் இருக்க வேண்டும்.

சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து கேள்விக்கு, ‘’தொட்டிலையும் ஆட்டுவோம் பிள்ளையையும் கிள்ளுவோம் என்று எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றனர். இரட்டை வேடம் போடுவதில் அதிமுகவிற்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம்’ என்றார். திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு நடைபெற உள்ளதாகவும் திருப்பதி போல் திருச்செந்தூரும் விளங்கும். தற்பொழுது குறை சொல்பவர்கள் கூட ஆகா, ஓகோ என்று பாராட்டக்கூடிய நிலைமை ஏற்படும். தமிழக பட்ஜெட் வெற்று பட்ஜெட் அல்ல, வெற்றி பட்ஜெட்.இவ்வாறு கூறினார்.

The post இரட்டை வேடம் போடுவதில் அதிமுகவுக்கு ஆஸ்கார் கொடுக்கலாம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு appeared first on Dinakaran.

Tags : Minister ,B. K. Sakharbapu ,PERAMPUR ,SEKARBABU ,Chief Minister of Tamil Nadu ,K. ,Stalin ,Humanist Festival of the People's First ,Dimuka ,Eastern District of Chennai ,Carnival. Nagar ,B. K. ,Sekarbapu ,
× RELATED கட்சி விரோத செயல்பாடுகளில்...