×

மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 50 மின் ஆட்டோக்கள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் ‘காலநிலை வீரர்கள்’ திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 50 மின் ஆட்டோக்களை துணை முதல்வர் வழங்கி, கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தி வரும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் குறித்தும், மாற்று பயன்பாட்டு பொருட்கள் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை கொண்ட ‘காலநிலை வீரர்கள்’ என்ற புதிய முன்னெடுப்பை அரசு மேற்கொண்டுள்ளது. இதன் முதல் கட்டமாக கடந்த 8.3.2025 அன்று தலா விழிப்புணர்வு பணிக்காக ரூ.4.83 லட்சம் மதிப்புள்ள 50 மின் ஆட்டோக்களை மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு முதல்வர் வழங்கினார்.

இரண்டாவது கட்டமாக நேற்று துணை முதல்வர் தலா ரூ.4.83 லட்சம் மதிப்புள்ள 50 மின் ஆட்டோக்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வழியனுப்பி வைத்தார். இந்த மின் ஆட்டோக்களில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை நிறுத்தவும், மஞ்சள் பை, மக்கும் பொருட்களால் தயாரிக்கப்பட்ட டம்ளர், பாக்குமட்டை தட்டு, மரக் கரண்டிகள், மறுசுழற்சி அட்டையால் செய்யப்பட்ட தட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளன. முன்னதாக, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ‘காலநிலை வீரர்கள்’ திட்ட மின் ஆட்டோக்களில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த, காலநிலையை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பொருட்களை பார்வையிட்டார். தமிழ்நாடு புதுமைத் தொழில் முனைவோர் திட்டத்தின் இணைய முகப்பை தொடங்கி வைத்தார்.

The post மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 50 மின் ஆட்டோக்கள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Pollution Control Board ,Chennai ,Tamil Nadu Pollution Control Board ,Dinakaran ,
× RELATED சென்னை கத்திப்பாராவில் பூட்டு போட்டு...