×

மாசி மகத்தை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரையில் இருளர் ஜோடிகளுக்கு திருமணம்: கூட்டம் கூட்டமாக குலதெய்வம் வழிபட்டனர்

மாமல்லபுரம்: மாசி மகத்தை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரையில் ஏராளமான இருளர்கள் கூட்டம் கூட்டமாக கடற்கரையின் பெரிய பாறையில் அமைந்துள்ள கன்னியம்மனை வழிபட்டனர். இதில், திருநங்கைகள் மூலம் தாலி எடுத்துக் கொடுத்து இருளர் ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. மாசி மகத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் மாமல்லபுரம் கடற்கரையில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இருளர்கள் திரள்வது வழக்கம்.

அவர்கள், அங்கு தங்கள் குல தெய்வமான கன்னியம்மனை வணங்கி தங்கள் உறவு முறைக்குள் திருமணம் மற்றும் நிச்சயதார்த்தம் போன்ற சடங்குகளை செய்து வருகின்றனர். தாங்கள் கொண்டு வந்த தென்னங்கீற்று மற்றும் பழைய காட்டன் புடவைகளால் தற்காலிக குடில்கள் அமைத்து தங்குகின்றனர். அங்கேயே உணவு சமைத்தும் சாப்பிட்டு குடும்பத்தினருடன் குல தெய்வ வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாசி பவுர்ணமியை முன்னிட்டு கடந்த ஆண்டு இதே மாசி மகம் தினத்தன்று நிச்சயம் செய்த ஜோடிகளுக்கு எளிமையான முறையில் உற்றார், உறவினர்கள் முன்னிலையில் கடற்கரையில் திருமணம் நடந்தது.

காஞ்சிபுரத்தை சேர்ந்த மாரி-சத்யா என்ற இருளர் இன ஜோடிகளுக்கு அதே பகுதியை சேர்ந்த திருநங்கைகள் கடற்கரையில் பூஜைகள் செய்து தங்கள் கரங்களால் தாலி எடுத்துக் கொடுத்து திருமணம் செய்து வைத்தனர். திருநங்கைகள் கையில் தாலி வாங்கி கட்டி திருமணம் செய்து கொண்டால், அந்த திருமண ஜோடிகளுக்கு ஆயுள் அதிகரிப்பதாகவும், நோய் நொடிகள் இன்றி வாழலாம் என்பது முன்னோர்களின் நம்பிக்கையாக உள்ளது, என இருளர் பெண்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, இருளர்கள் பலர் கடற்கரையொட்டி உள்ள பெரியபாறையில் உள்ள கன்னியம்மனுக்கு ஏராளமானோர் தங்களது குடும்பத்தினருடன் சென்று பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.

* மாயமான சிறுவன் மீட்பு
அரக்கோணம் அடுத்த குருவராஜபேட்டை பகுதியைச் சேர்ந்த குமரேசன்-சுகுணா தம்பதியினர் தங்களது 6 வயது மகனை அழைத்துக் கொண்டு மாமல்லபுரம் கடற்கரைக்கு வந்து தற்காலிக குடில் அமைத்து தங்கினர். கூட்டத்தில், எதிர்பாராத விதமாக சிறுவன் திடீரென மாயமானான். இதுகுறித்து, மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில், எஸ்ஐ உஷாராணி மற்றும் போலீசார் கடற்கரையில் தீவிர சோதனையில் ஈடுபட்டு மாயமான சிறுவனை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதேபோல், நேற்று முன்தினம் இரவு மாயமான ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கொடமநல்லூர் பகுதியை சேர்ந்த தேவேந்திரன் என்பவரையும் போலீசார் மீட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

The post மாசி மகத்தை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரையில் இருளர் ஜோடிகளுக்கு திருமணம்: கூட்டம் கூட்டமாக குலதெய்வம் வழிபட்டனர் appeared first on Dinakaran.

Tags : Masi Mahatma ,Mamallapuram ,Kanniyammana ,
× RELATED கிருஷ்ணகிரியில் தனியார் நிறுவன பேருந்தில் பயங்கர தீ விபத்து!!