சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் நடந்தது. நடராஜர், சிவகாமசுந்தரி உள்ளிட்ட 5 சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் பவனி. வாத்திய கருவிகள் இசைக்க, சிவ நடனத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். நாளை மதியம் ஆருத்ரா தரிசன விழா நடைபெற உள்ளது.
பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குவது சிதம்பரம் நடராஜர் கோயில். உலகப் பிரசித்தி பெற்ற இந்த சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டு தோறும் ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன திருவிழா உற்சவமும், மார்கழி மாதத்தில் ஆரூத்ரா தரிசன விழாவும் சிறப்பாக நடைபெறும்.

இந்த ஆண்டு மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த மாதம் 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை மதியம் ஆருத்ரா தரிசன விழா நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று தேரோட்டம் துவங்கியது. தேரோட்டத்தை முன்னிட்டு காலையில் மூலவரான நடராஜர் சித் சபையிலிருந்து பல்வேறு அலங்காரத்துடன் தேருக்கு கொண்டு வரப்பட்டார்.
நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேசுவரர் ஆகிய 5 சுவாமிகளும் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் வைக்கப்பட்டு 4 மாட வீதிகளையும் வலம் வந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

பெண்கள் தேருக்கு முன்னால் சாலையில் கோலமிட்டபடி சென்றனர். சிவாச்சாரியார்கள் சிவ வாத்திய கருவிகளை இசைத்தபடியும், சிவ நடனம் ஆடியபடியும் தேருக்கு முன்பாக வலம் வந்தனர். சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் சிலம்பாட்டம் ஆடியபடி வந்தனர். சிறுமிகள் பலர் தேருக்கு முன்பாக தேரோடும் வீதிகளில் பரதநாட்டியம் ஆடினர். பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்
இந்த ஆண்டு புத்தாண்டு தினத்தன்று மறுநாள் தேரோட்டம் நடைபெறுவதால் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நான்கு மாட வீதிகளையும் வலம் வந்த பிறகு இரவு தேர் நிலைக்கு வந்தவுடன் நடராஜர், சிவகாமசுந்தரி சமேதமாக ஆயிரங்கால் மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வைக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெறும்.
நாளை காலை மகாபிஷேகமும், அதைத்தொடர்ந்து பல்வேறு பூஜைகள், லட்சார்ச்சனை, சித் சபையில் ரகசிய பூஜை, திருவாபரண அலங்காரம் உள்ளிட்டவை நடைபெற உள்ளது. நாளை மதியம் ஆருத்ரா தரிசன விழா நடைபெற உள்ளது. மதியம் 2 மணியளவில் நடராஜர், சிவகாமசுந்தரி சமேதமாக நடனமாடியபடியே ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர். வருகிற 5 ஆம் தேதி திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக சிதம்பரம் கனகசபை நகரில் உள்ள ஞானப்பிரகாச குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. இதில் நடராஜரின் உற்சவரான சந்திரசேகர சுவாமிகள் தெப்ப உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர்.
