×

நாரணமங்கலத்தில் ஒரு மாதமாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் விநியோகம் நிறுத்தம்: பொதுமக்கள் சாலை மறியல்

 

பாடாலூர்: ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமத்தில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் சீராக விநியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமம் உள்ளது. சுமார் 3-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் அந்த ஊரில், கடந்த சுமார் ஒரு மாதமாக காவேரி – கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் சீரான குடிநீர் விநியோகம் செய்யவில்லை. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் சீரான குடிநீர் வினியோகம் செய்யக்கோரி நாரணமங்கலத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தை இன்று காலை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். மேலும் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த அரசு பேருந்தையும், சிறைப்பிடித்தனர். இதனால், சுமார் அரை மணி அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமலதா விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

திருச்சி மாவட்டம், தாப்பாய் கிராமத்தில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட விநியோகத்தில் பழுது ஏற்பட்டுள்ளதாக தெரிவித்ததோடு, விரைவில் சீரான குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில், பொதுமக்கள் கலைந்து சென்றனர். அதன்பிறகு மீண்டும் அந்த வழியே போக்குவரத்து தொடங்கியது.

The post நாரணமங்கலத்தில் ஒரு மாதமாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் விநியோகம் நிறுத்தம்: பொதுமக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Kollidam ,Naranamangalam ,Padalur ,Alathur taluka ,Perambalur district ,Dinakaran ,
× RELATED அகரம், பாலவாக்கம் பகுதிகளில் பொங்கல்...