×

தேர்தல் நடைமுறைகளை வலுவாக்கும் யோசனைகளை தெரிவிக்க 18ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்த யோசனைகளை தெரிவிக்கும் வகையில் 18ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். மாநில தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி, வாக்காளர் பதிவு அதிகாரி மட்டத்தில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் எதுவும் இருந்தால், அதுபற்றி வரும் ஏப்ரல் 30ம் தேதிக்குள் கருத்துகளை அளிக்கும்படி அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளை இந்திய தேர்தல் கமிஷன் கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் கடிதமும் எழுதியுள்ளது. தேர்தல் செயல்முறைகளை மேலும் வலுப்படுத்துவதற்காக கட்சி தலைவர்கள் மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன், சாதகமான நேரத்தில் கலந்துரையாடலை நடத்தவும் தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.

இந்திய தேர்தல் கமிஷன் கடந்த வாரம் டெல்லியில் நடத்திய கூட்டத்தில், அனைத்து அரசியல் கட்சிகளுடன் மாநில தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி, வாக்காளர் பதிவு அதிகாரி அவ்வப்போது கலந்துரையாடல் கூட்டங்களை நடத்த வேண்டும் என்று என்றும் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் உத்தரவிட்டார். அதுபற்றிய அறிக்கையை சமர்க்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார். இந்த நடைமுறையை அரசியல் கட்சிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அதோடு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், வாக்காளர் பதிவு விதிகள், தேர்தல் நடத்தை விதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவுகள், இந்திய தேர்தல் கமிஷனால் அவ்வப்போது வெளியிடப்படும் கையேடுகள் போன்றவை சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கான வெளிப்படையான சட்ட ரீதியான கட்டமைப்பை நிறுவியுள்ளன என்றும் அரசியல் கட்சிகளுக்கு எழுதிய கடிதத்தில் தேர்தல் கமிஷன் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்த யோசனைகளை தெரிவிப்பது தொடர்பாக விரைவில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளான காங்கிரஸ், சிபிஎம், பாஜக, பகுஜன் சமாஜ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட 12 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறும்போது, “அனைத்துக்கட்சி கூட்டம் குறித்து நிறைய கேள்விகள் உள்ளன. 18ம் தேதி தற்காலிகமாக இறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் அந்த தேதி உறுதிப்படுத்தப்பட்டவுடன் முழுமையாக தெரிவிக்கப்படும்” என்றார்.

The post தேர்தல் நடைமுறைகளை வலுவாக்கும் யோசனைகளை தெரிவிக்க 18ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Chief Election Officer ,State ,Chief Electoral Officer ,Election Officer ,18th All-Party Meeting ,Tamil ,Nadu ,Dinakaran ,
× RELATED திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு...