×

தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் தயாரிப்பு தேதி இல்லாத 50 கிலோ தின்பண்டம் பறிமுதல்

*20 கடைகளுக்கு ரூ.50ஆயிரம் அபராதம்

தர்மபுரி : தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்டில், உணவு பாதுகாப்புத்துறையினர் நடத்திய சோதனையில், தயாரிப்பு தேதி மற்றும் முகவரி அச்சிடப்படாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 50 கிலோ தின்பண்டங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், 20 கடைகளுக்கு ரூ.50ஆயிரம் அபராதம் விதித்தனர்.

தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குமணன், கந்தசாமி, திருப்பதி, அருண்குமார், உணவு உதவி பகுப்பாய்வாளர் கார்த்திக் உள்ளிட்ட குழுவினர், நேற்று புறநகர் மற்றும் நகர பஸ் ஸ்டாண்டில் 2வது நாளாக அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் முகவரி அச்சிடப்படாமலும், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி ஆகியவை குறிப்பிடாமலும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மிக்சர், காராபூந்தி, முறுக்கு, தட்டுவடை, சிப்ஸ் போன்ற 50 கிலோ தின்பண்டங்கள் மற்றும் செயற்கை வண்ணம் பூசப்பட்ட 50 லிட்டர் குளிர்பானங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

சுமார் 40 கடைகளில் இந்த சோதனை நடந்தது. இதில் உணவு பொருள் பறிமுதல் செய்யப்பட்ட 20 கடைகளுக்கு, மொத்தமாக ரூ.50 ஆயிரம் அபாரதம் விதிக்கப்பட்டது.

இதையடுத்து டவுன் பஸ் ஸ்டாண்டில், தள்ளுவண்டி கடையில் தர்பூசணியை அறுத்து விற்பனைக்கு வைத்திருந்த ஒரு துண்டு தர்பூசணியை எடுத்து, அதில் ரசாயனம் உள்ளதா என டிஸ்யூ பேப்பர் மூலம் சோதனை செய்தனர்.

அப்போது அங்கு வந்த மாணவிகளுக்கு, தர்பூசணியில் ரசாயனம் ஏற்றி விற்பனை செய்வதை கண்டுபிடிக்கும் எளிய முறையை கற்று தந்தனர். இதே போல், டீக்கடைகளில் இருந்த பாலில் மாவு கலக்கப்பட்டிருக்கிறதா என மாதிரியை எடுத்து, உணவு பகுப்பாய்வு வாகனத்தில் உள்ள கருவிகள் மூலம் உடனடியாக சோதனை செய்து தரத்தை பரிசோதித்தனர். இந்த சோதனை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தொடரும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் தயாரிப்பு தேதி இல்லாத 50 கிலோ தின்பண்டம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri bus ,Dharmapuri ,Food Safety Department ,Dharmapuri Town Bus Stand ,
× RELATED தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு...