×

கீரனூர் அடுத்த திருப்பூரில் ஜல்லிக்கட்டு; 750 காளைகள் அதகளம்: 200 வீரர்கள் மல்லுக்கட்டு

புதுக்கோட்டை: கீரனூர் அடுத்த திருப்பூரில் இன்று காலை நடந்த ஜல்லிக்கட்டில் 750 காளைகள் சீறி பாய்ந்தன. காளைகளை 200 மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அடுத்த திருப்பூரில் கருப்பர் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக புதுகை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன. காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இறுதியாக 750 காளைகள், 200 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. காலை 9 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லப்பாண்டியன் கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். முதலாவதாக வாடிவாசலில் இருந்து கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது.

தொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். களத்தில் வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து பல காளைகள் நின்று விளையாடியது. களத்தில் காளைகள் முட்டி காயமடைந்த வீரர்களுக்கு அங்ேகயே முதலுதவி அளிக்கப்பட்டது. காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், கட்டில், பீரோ, டைனிங் டேபிள், சேர், மின்விசிறி, எவர்சில்வர் பாத்திரங்கள் மற்றும் ரொக்கத்தொகை பரிசாக வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு களத்தில் தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. கீரனூர் டிஎஸ்பி மணிமாறன் தலைமையில் 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு போட்டியை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.

 

The post கீரனூர் அடுத்த திருப்பூரில் ஜல்லிக்கட்டு; 750 காளைகள் அதகளம்: 200 வீரர்கள் மல்லுக்கட்டு appeared first on Dinakaran.

Tags : Jallikatu ,Tiruppur ,Kiranur ,Mallukattu ,Pudukkottai ,Jallikat ,Karupar Temple Festival ,Tiruppur, Pudukkottai District ,Keeranur ,Tiruppur Jallikatu ,Atakalam ,Malluktu ,Dinakaran ,
× RELATED சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்;...