- தெப்போற்சவம்
- பூந்தமல்லி வரதராஜப் பெருமாள் கோவில்
- பூந்தமல்லி
- திருக்கச்சி நம்பிகள்
- வரதராஜ பெருமாள் கோயில்
- அலவத்த கைங்கர்யம்
- வரதராஜ பெருமாள்
- ஸ்ரீமத் ராமானுஜர்
- உதயவர்
பூந்தமல்லி: பூந்தமல்லியில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் வரதராஜ பெருமாளுக்கு ஆலவட்டக் கைங்கர்யம் செய்தவர் திருக்கச்சி நம்பிகள். இவர், உடையவர் என்று அழைக்கப்படும் ஸ்ரீமத் ராமாநுஜரின் குருவானவர். குறிப்பாக, இங்குள்ள பெருமாளின் தலைக்குப் பின்புறம் சூரியபகவான் அருள்வதால், இது சூரியத் தலமாகக் கருதப்படுகிறது.
எனவே, இங்கு வந்து வேண்டிக்கொள்ள ஆரோக்கியம் மேம்படும் என்பது ஐதீகம். இந்த கோயிலில் தெப்போற்சவம் இதுவரை நடைபெறாமல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், இந்த கோயிலில் முதல்முறையாக தெப்போற்சவம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கோயில் பட்டாச்சாரியார்கள், வைஷ்ணவ பெரியோர்கள் மற்றும் அறங்காவலர்கள் தெப்போற்சவத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். தொடர்ந்து நேற்றுமுன்தினம் தொடங்கி மூன்று நாட்கள் தெப்போற்சவம் நிகழ்ச்சி நடைபெறுவதற்கு அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக அன்று இரவு சுமார் 7 மணியளவில் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் மற்றும் திருக்கச்சி நம்பிகள் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மேலும் நேற்று இரவு 7 மணிக்கு சீனிவாச பெருமாள் மற்றும் திருக்கச்சி நம்பிகள் தெப்பத்தில் எழுந்தருளினர். இதையடுத்து இன்று இரவு 7 மணிக்கு வரதராஜ பெருமாளும் திருக்கச்சி நம்பி நம்பிகளும் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பர்.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த தெப்ப நிகழ்ச்சியில் பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். முன்னதாக மூலவர் வரதராஜ பெருமாள் மற்றும் திருக்கச்சி நம்பி ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் லதா, அறங்காவலர் குழு தலைவர் பாபு அறங்காவலர்கள் வெங்கடேசன், கோபிநாத் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
The post பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோயிலில் முதல் தெப்போற்சவம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.
