×

வாணியம்பாடி அடுத்த அலசந்தாபுரத்தில் கி.பி. 14ம் நூற்றாண்டு நடுகல் கண்டெடுப்பு

*கண்ணப்ப நாயனார் தகவல் பொறிப்பு

வாணியம்பாடி : வாணியம்பாடி அடுத்த அலசந்தாபுரத்தில் கி.பி. 14ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் பிரபு மற்றும் சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன், முத்தமிழ்வேந்தன் ஆகியோர் வாணியம்பாடி அடுத்த அலசந்தாபுரம் கிராமத்தில் களஆய்வு செய்ததில் கி.பி. 14ம் நூற்றாண்டு விஜயநகர மன்னர் ஆட்சிக்காலத்தை சேர்ந்த நடுகல்லை கண்டெடுத்துள்ளனர்.

இதுகுறித்து பேராசிரியர் பிரபு தெரிவித்துள்ளதாவது: அலசந்தாபுரம் கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் கள ஆய்வை மேற்கொண்டோம். அப்போது, அங்கு நடுகல் ஒன்று இருப்பதை உறுதி செய்தோம். தொடர்ந்து, அதனை ஆய்வு செய்தபோது, அரிய வரலாற்று நிகழ்வு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்ததை காணமுடிந்தது.

நடுகல்லானது 7 அடி உயரமும் 6 அடி அகலமும் கொண்டதாக உள்ளது. மையப்பகுதியில் வீரனின் உருவமும் அவனோடு போரிட்ட எதிரியின் உருவமும் காணப்படுகிறது. வீரன் தன் வலது கரத்தில் கொடுவாள் எனப்படும் போர் ஆயுதத்தையும் இடது கரத்தில் ஈட்டியும் கொண்டு எதிராளியை தாக்கியவாறு சித்தரிக்கப்பட்டுள்ளார். இடையில் உடைவாளும் கழுத்தில் ஆபரணங்களும் காணப்படுகின்றன.

எதிராளியின் கையில் வில்லும் அம்பும் காணப்படுகிறது. எனவே போர்க்களத்தில் வீரமரணம் அடைந்த வீரனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் இதுவென அறிய முடிகிறது.நடுகல்லில் மொத்தமாக 11 மனித உருவங்களும் ஒரு குதிரையும் இரண்டு சிவலிங்கங்களும் செதுக்கப்பட்டுள்ளன.

நடுகல்லின் இடது புறம் ஒரு பெண் இசைக்கருவியை சுமந்த நிலையிலும், அதற்கு மேல் ஒரு பெண் கள குடுவையை ஏந்திய நிலையிலும், அதற்கு மேல் ஒரு பெண் வீரனுக்கு சாமரம் வீசிய நிலையிலும், அதற்கு மேல் வீரனின் குதிரையும் காணப்படுகின்றன. நடுகல்லின் மேல்புறம் இறந்த வீரனை நான்கு பெண்கள் தேவலோகம் அழைத்துச் செல்லும் காட்சியும், அதற்கு அருகே ஒரு பெண் சிவலிங்கத்திற்கு நீராட்டும் காட்சியும் இடம் பெற்றுள்ளன.

மேலும், நடுகல்லின் வலது புறம் அரிய வரலாற்று நிகழ்வை காண முடிகிறது. சிவலிங்கம் ஒன்றில் ஒருவர் தன் இடது காலை வைத்த நிலையில் காணப்படுகிறார். அவரது வலது கையில் வில் உள்ளது. அவர் தன் இடது கையால் தமது கண்ணைக் குத்தியவாறு சித்தரிக்கப்பட்டுள்ளார்.

அதாவது பொத்தப்பி என்ற நாட்டில் உடுப்பூர் என்னும் ஊரில் பிறந்தவர் திண்ணப்பர் என்ற கண்ணப்ப நாயனார். இதுகுறித்த செய்தி நடுகல்லில் இடம் பெற்றுள்ளது. தமிழக அளவில் இதுவரை எண்ணற்ற நடுகற்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகிறது. ஆனால் கண்ணப்ப நாயனார் குறித்த செய்தியோடு வடிக்கப்பட்ட நடுகல் தமிழகத்தில் இது மட்டுமேயாகும்.

பொத்தப்பி நாடு என்பது ஆந்திர மாநிலத்தின் இப்போதைய கடப்பா மாவட்டத்தில் புல்லம்பேட்டை வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராகும். உடுப்பூர் என்பது குண்டக்கல்- அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள ராசம்பேட்டைக்கு அருகில் இன்றளவும் உள்ளது.

அவ்வூர் உடுக்கூர் என இன்று வழங்கப்படுகிறது. நடுகல் கண்டறியப்பட்ட அலசந்தாபுரமானது ஆந்திர எல்லைப்பகுதியில் உள்ளது என்பதும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கதாகும். இத்தகைய அரிய வரலாற்றை தாங்கி நிற்கும் இந்நடுகல்லை இவ்வூர் மக்கள் ஆவலப்பன் என வழிபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post வாணியம்பாடி அடுத்த அலசந்தாபுரத்தில் கி.பி. 14ம் நூற்றாண்டு நடுகல் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Alasandapuram ,Vaniyambadi ,Prabhu ,Pure Heart College of Tirupattur ,Radhakrishnan ,Muthamizhvendan ,Vaniyambadi… ,
× RELATED சட்டவிரோத குவாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?: ஐகோர்ட் கிளை கேள்வி