பென்னாகரம் : வார விடுமுறையையொட்டி பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களான ஒகேனக்கல் மற்றும் ஏற்காடு, மேட்டூர், கொல்லிமலையில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமான ஒகேனக்கலுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும், சேலம் மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் பயணம் செய்து மகிழ்வர். இதனிடையே ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து சரிந்துள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 1200 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 700 கன அடியானது.
இதனால், அங்குள்ள அருவிகளில் இதமாக தண்ணீர் கொட்டுகிறது. வார விடுமுறையையொட்டி நேற்று ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள், எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினி பால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் பல்வேறு இடங்களில் குளித்து மகிழ்ந்தனர்.
தொடர்ந்து குடும்பத்துடன் பரிசல் சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும், மீன் அருங்காட்சியகம், முதலைப்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றிப்பார்த்தனர். மேலும், தொங்கு பாலத்தில் நின்றவாறு காவிரி ஆற்றின் அழகை கண்டு ரசித்தனர்.
ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நடைபாதை, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது. இதனால் கடைகள், ஓட்டல்களில் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. மேலும், மீன் மார்க்கெட் மற்றும் மீன் வறுவல் கடைகளில் விற்பனை ஜோராக இருந்தது.
ஏற்காடு: வார விடுமுறையையொட்டி, ஏற்காட்டுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நேற்று வந்தனர்.
அவர்கள் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி, மான் பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ட்ஸ் சீட் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று இயற்கை காட்சிகளை பார்த்து ரசித்து செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பயணிகள் வருகை அதிகரிப்பால், சாலையோர கடைகளில் வியாபாரம் களை கட்டியது. ஏற்காட்டில் நடப்பாண்டு 48வது கோடை விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்காவில் 40 வகை மலர்களை கொண்ட 2 லட்சம் மலர்செடிகள் மற்றும் மலர் படுகைகள் நடவு செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் அரங்கு, கலை நிகழ்ச்சி, பல்வேறு போட்டி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான ஆயத்தப் பணிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தோட்டக்கலைத் துறையினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.
இதேபோல், மேட்டூர் அணை பூங்காவில் விடுமுறை தினமான நேற்று, சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் காவிரியில் நீராடி அணைக்கட்டு முனியப்பன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். அணை பூங்காவில் ஊஞ்சலாடியும், சறுக்கியும் விளையாடினர்.
மீன்காட்சி சாலை, பாம்பு பண்ணை, முயல் பண்ணை, மான் பண்ணை ஆகியவற்றை கண்டு மகிழ்ந்தனர். அணை வலது கரையில் உள்ள பவள விழா கோபுரத்தை சுற்றிப்பார்த்தனர். இதேபோல், குட்டி கேரளா என்றழைக்கப்படும் பூலாம்பட்டி காவிரி ஆற்றில் வெளி மாநில, மாவட்ட சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக வருகை புரிந்து விசைப்படகில் உற்சாக சவாரி செய்து மகிழ்ந்தனர்.
சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டத்தில், கொல்லிமலை சிறந்த சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கொல்லிமலையில் பகலில் மிதமான வெயிலும், இரவில் குளிர் நிலவி வருகிறது.
காலையில் சில்லென்று குளிர் காற்று வீசுகிறது. கோடை வெயிலில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வெப்பத்தை தணிப்பதற்கு விடுமுறை தினமான நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். பெங்களூரு, பாண்டிச்சேரி, ஆந்திரா மாநிலங்களிலிருந்து கார், வேன்களில் வந்து குவிந்தனர்.
கொல்லிமலையில் போதிய மழை இல்லாததால் வெயில் காரணமாக அங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்அருவி, சினி பால்ஸ், சந்தனபாறை அருவிகளில் தண்ணீர் குறைவான அளவே கொட்டுகிறது. நீண்ட நேரம் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
அங்குள்ள அறப்பளீஸ்வரர் கோயில், எட்டுக்கை அம்மன் கோயில், மாசி பெரியசாமி கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தாவரவியல் பூங்கா, சிக்குப்பாறை காட்சிமுனையம் உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு வாசலூர்பட்டி ஏரியில் படகு சவாரி செய்தனர்.
The post வார விடுமுறையையொட்டி ஒகேனக்கல், ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.
