ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே, எல்லாபுரம் ஒன்றியத்தில் மஞ்சங்காரணை கிராமம் உள்ளது. இங்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இக்கிராமத்தில், கடந்த 40 வருடத்திற்கு முன்பு பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது. இந்த பயணியர் நிழற்குடையை மஞ்சங்காரணை பகுதியைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆகியோர் செங்குன்றம், கோயம்பேடு, பொன்னேரி போன்ற பகுதிகளுக்குச் செல்ல பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது, இந்த பயணியர் நிழற்குடையின் மேற்கூரையில் சிமெண்ட் சிலாப்புகள் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிந்து எலும்புக்கூடு போல் காட்சியளிக்கிறது. மேலும், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் இருப்பதால் பயணிகள் ஒரு வித அச்சத்துடனையே இப்பேருந்து நிழற்குடையில் காத்திருக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த பயணியர் நிழற்குடையை அகற்றி புதிய பயணியர் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post மஞ்சங்காரணையில் இடிந்துவிழும் நிலையில் பேருந்து நிழற்குடை appeared first on Dinakaran.
