சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி கொளத்தூரில் 3 நாட்கள் நடைபெற்ற கலைக்களம் நிகழ்ச்சி பார்வையார்களை வெகுவாக கவர்ந்தது. நிகழ்ச்சி களைகட்டியது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் பல்வேறு தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அன்னம் தரும் அமுத கரங்கள் என்ற நிகழ்ச்சியின் வாயிலாக ஒரு வருடத்திற்கு தொடர்ச்சியாக காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு தினமும் காலை ஆயிரம் பேருக்கு உணவு வழங்கி அந்த திட்டமும் தினமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் முதல்வரின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக சென்னை கிழக்கு மாவட்டத்தில் மட்டும் 72 நிகழ்ச்சிகள் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டு தினமும் நாள்தோறும் கவியரங்கம், நல திட்ட உதவிகள், விளையாட்டுப் போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர் நிகழ்ச்சிகளாக நடத்தப்படுகின்றன. அந்த வகையில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூர் டான்போஸ்கோ பள்ளி வளாகத்தில் முதல்வரின் கலைக்களம் என்ற தலைப்பில் வெள்ளி, சனி, ஞாயிறு என கடந்த 3 நாட்களும் கலைத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
சாதாரண நிகழ்ச்சியாக இது இருந்து விடக் கூடாது என்பதற்காக பல்வேறு சிறப்பு அம்சங்கள் இதில் இடம்பெற்றன. அந்த வகையில் தமிழர் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் நினைவு கூறும் வகையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலைக்குழுவினர் வரவழைக்கப்பட்டு நாள்தோறும் மாலை 4 மணியிலிருந்து 7 மணி வரை தொடர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முதல் நாள் அதாவது கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் மார்த்தாண்டம் கலைக்குழுவினரின் களரி பட்டு நிகழ்ச்சி, திருநெல்வேலி கருப்பசாமி கலை கழுவினரின் எருதுகட்டு மேளம், காரியப்பட்டி ராமர் தப்பாட்டக் குழுவினரின் தப்பாட்டம், தூத்துக்குடி உவரி களியல் குழுவினரின் களியல் நிகழ்ச்சி, கலைவாணர் கலைக்குழுவினரின் பெரும் முரசு ஆட்டம் மற்றும் இசைவாணி கானா முத்து இணைந்து நடத்திய ஆத்துக்குடி இளையராஜாவின் இளைய கானம் போன்றவை இடம் பெற்றன. இவை பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.
முதல் நாள் நிகழ்ச்சியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். 2வது நாள் நிகழ்ச்சியில் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 2வது நாள் நிகழ்ச்சியில் தூத்துக்குடி அபிநயா நிருத்தலயா சமூக கலைப்பள்ளி சார்பில் திருநங்கைகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி, விழுப்புரம் மாவட்டம் மாற்றுத்திறனாளி மல்லர் கம்பம் குழுவினரின் மல்லர் கம்பம் நிகழ்ச்சி, வள்ளியூர் அபிநய கீதம் கலை குழுவினரின் கொம்பு தப்பாட்ட நிகழ்ச்சி, தஞ்சாவூர் தேன்மொழி ராஜேந்திரன் நையாண்டி கரகம் கலைக்குழுவினரின் கரகம் நையாண்டி நிகழ்ச்சி, குரும்பூர் உறுமி மேளம் கலைக்குழுவினரின் கட்டைக் குழல் உறுமி மேளம் நிகழ்ச்சி, அந்தோணி தாசன் குழுவினரின் கலைநகழ்ச்சி என பல நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.
3வது நாள் அதாவது நேற்றைய நிகழ்ச்சியை நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்து நிகழ்ச்சியை கண்டு களித்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தருமபுரி ஆதீனம் ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சரிய சுவாமிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார். 3வது நாள் நிகழ்ச்சியில் சமர் பெண்கள் கலைக் குழுவினரின் தப்பாட்டம், கோவை ஆதன் பொன் செந்தில்குமார் கொங்கு பன்னாட்டு மையத்தின் பெருஞ்சலங்கை ஆட்டம்,
திருச்சி மகாமுனி கலைக்குழுவினரின் சக்கை குச்சி கலை நிகழ்ச்சி, திருநெல்வேலி சங்கர் கணேஷ் கரகக் குழுவினரின் கரக நிகழ்ச்சி, நெல்லை நையாண்டி கலை கழுவினரின் நையாண்டி நிகழ்ச்சி, காஞ்சிபுரம் விவேகானந்த கிராமிய கலை குழுவினரின் கைச்சிலம்பம், தஞ்சாவூர் சின்ன பொண்ணுக்குமார் கிராமிய கச்சேரி உள்ளிட்ட பல்வேறு கலை குழுவினரின் கச்சேரிகள் வெகு விமரிசையாக நடைபெற்றன. இதில் மொத்தம் 500 கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
கலை நிகழ்ச்சிகளுடன், 25 மகளிர் சுய உதவிக் குழுவினர் மூலம் மண்மணம் மாறாத 200 வகையான உணவுத் திருவிழா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் சைவம், அசைவம் என பல்வேறு உணவுப் பொருட்கள் பொதுமக்களின் தேவைக்காக சுவையாக தயார் செய்து பரிமாறப்பட்டன. ஒவ்வொரு உணவையும் ஒவ்வொரு இடத்தில் தேடி சென்று சாப்பிட்ட மக்களுக்கு அனைத்து வகையான உணவுகளும் ஒரே இடத்தில் கிடைத்ததால் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.
கலை நிகழ்ச்சிகளுடன் கண்டு களித்து உணவு வகைகளையும் ருசித்து சாப்பிட்டனர்.
இந்த நிகழ்ச்சியை திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி ஒருங்கிணைத்து பல்வேறு பணிகளை மேற்கொண்டார். அவருடன் சென்னை மாநகர மேயர் பிரியா, மண்டல குழு தலைவர் சரிதா, மாமன்ற உறுப்பினர்கள் தாவூத் பி.ஸ்ரீதனி, பூர்ணிமா, பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சந்துரு, மகேஷ்குமார், நரேந்தர், ஹெலன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஒருங்கிணைப்பு பணியில் முழுவதுமாக ஈடுபட்டனர்.
* 3 நாளில் 30,000 பேர் கண்டுகளிப்பு: அமைச்சர் பெருமிதம்
கொளத்தூரில் 3 நாட்கள் நடைபெற்ற கலைக்களம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு தினகரனுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது: மாநிலம் காக்கும் முதல்வரின் அரும்பெரும் பணிகளை போற்றிடும் வகையில் 72 நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்.
ஆண்டு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு காலை உணவுகள், கருணை இல்லங்கள், விழி இழந்தோர், மாற்றுத்திறனாளிகள், உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள், கர்ப்பிணி பெண்கள், திருநங்கைகள் என்று அனைத்து மக்களுக்கும் நடத்திட்ட உதவிகள் என்று கொண்டாடினாலும் பட்டிமன்றம், கருத்தரங்கம், விளையாட்டு விழாக்கள் என்று கொண்டாடினாலும், தமிழரின் பண்பாட்டுச் சின்னமான கலைகளை போற்றுகின்ற முதல்வருக்கு கலைக்களம் என்ற தலைப்பில் 3 நாள் கலை விழா மற்றும் 25 மகளிர் சுய உதவி குழுக்கள் பங்கேற்கின்ற உணவுத் திருவிழா என வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த 3 நாட்களில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொளத்தூர் தொகுதி மக்கள் முதல்வரின் அருமை பெருமைகளோடு கலை நிகழ்ச்சிகளையும் கண்டு களித்து, வகை வகையான உணவுகளை உண்டு, முதல்வரின் பிறந்த நாளை கொண்டாடியதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.
* செல்பி எடுத்து மகிழ்ந்த இளைய தலைமுறை
முதல்வரின் கலைக்களம் நிகழ்ச்சியில் கட்சிக்கு அப்பாற்பட்டு இளைஞர்கள் அதிக அளவில் திரண்டு வந்திருந்து கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர். மேலும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட கிராமிய கலைஞர்களோடு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் உணவுத் திருவிழாவில் அதிக அளவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு தங்களுக்கு பிடித்தமான உணவுகளை ருசித்து உண்டனர். இதனால் உணவுத் திருவிழா இரவு 10 மணியை தாண்டியும் நடந்தது.
The post நாட்டுப்புற கலைஞர்களின் அசத்தல் கலை நிகழ்ச்சிகளுடன் கொளத்தூரில் களைகட்டிய 3 நாள் கலைக்களம்: மண்மணம் மாறாத உணவுத்திருவிழா, ஆரவாரத்துடன் பங்கேற்று மகிழ்ந்த மக்கள் appeared first on Dinakaran.
