×

தமிழ்த் தெம்பு திருவிழாவில் விறுவிறுப்பாக நடைபெற்ற ரேக்ளா பந்தயம்; மூன்று நாட்களாக நடைபெற்ற மாபெரும் நாட்டு மாட்டு சந்தை நிறைவு

கோவை: ஈஷாவில் நடைபெற்று வரும் தமிழ்த் தெம்பு திருவிழாவில் இன்று (09/03/25) கொங்கு நாட்டு வீரவிளையாட்டான ‘ரேக்ளா பந்தயம்’ கோலாகலமாக நடைபெற்றது. ஆலாந்துறை அருகே நடைபெற்ற ரேக்ளா பந்தய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

ஆதியோகி முன்பு தமிழ் பண்பாட்டை கொண்டாடும் வகையில் தமிழ்த் தெம்பு – தமிழ் மண் திருவிழா எனும் பிரம்மாண்ட விழா கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி துவங்கி 11 நாட்களாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் ஒரு பகுதியாக ‘ரேக்ளா பந்தயம்’ இன்று ஆலாந்துறை அருகே நாதேகவுண்டன்புதூர் கிராமத்தில் நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்களின் ரேக்ளா பந்தய மாட்டு வண்டிகள் மற்றும் காளைகளுடன் பங்கேற்றனர்.

ரேக்ளா பந்தயம் 200 மீட்டர் பிரிவு மற்றும் 300 மீட்டர் பிரிவு என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. இந்த இரண்டு பிரிவுகளிலும் முதல் இடத்தை பிடித்தவர்களுக்கு ரொக்கப் பரிசாக ரூ. 1,00,000 வழங்கப்பட்டது. அதே போன்று இரண்டாம் இடத்தை பிடித்தவர்களுக்கு 50,000, மூன்றாம் பரிசு பெற்றவர்களுக்கு 20,000, நான்காம் பரிசு பெற்றவர்களுக்கு 14,000 வழங்கப்பட்டன. மேலும் 5 முதல் 15 இடங்களை பிடித்தவர்களுக்கு தலா 3,000, 16 முதல் 30 இடங்களை பிடித்தவர்களுக்கு தலா 2,000 ரொக்க பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டன.மேலும் பந்தயத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இதனுடன் ஆதியோகி முன்பு கடந்த 7 ஆம் தேதி முதல் நாட்டின மாடுகள் மற்றும் குதிரைகளின் சந்தை நடைபெற்று வருகிறது. இதில் காங்கேயம், புங்கனூர், தார்பார்க்கர், கீர், சாஹிவால், பர்கூர் உட்பட 10-க்கும் மேற்பட்ட நாட்டின ரக மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதில் ரேக்ளா பந்தயத்திற்கான ஜோடி காளைகள், ஜல்லிக்கட்டு இளந்தாரி காளைகள், ஊட்டச்சத்து மிக்க பால் தரும் நாட்டின ரக பசுக்கள் ஆகியன அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதே போன்று குதிரைகளில் மார்வாரி மற்றும் நாட்டுக் குதிரைகள் சந்தைக்கு கொண்டு வரப்பட்டன.

கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் நாட்டு மாட்டுகள் மற்றும் குதிரைகளின் சந்தையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மாடுகள் மற்றும் குதிரைகளுக்கு 3 நாட்களுக்கும் தேவையான தீவனங்கள், தண்ணீர் மற்றும் வெயில் தாக்கத்தை தவிர்க்கும் வகையிலான அரங்குகள் உள்ளிட்டவை ஈஷா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் சந்தைக்கு வரும் மக்களுக்கும் தேவையான தங்குமிடம் மற்றும் உணவு ஈஷா சார்பில் வழங்கப்பட்டது. இந்த சந்தை இன்றோடு நிறைவு பெறுகிறது.

தமிழ்த் தெம்பு திருவிழாவில் தமிழ்நாட்டை சார்ந்த புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் விற்பனை மற்றும் கண்காட்சி, தமிழ் பண்பாட்டு கலைகளின் பயிற்சி பட்டறைகள், தினமும் மாலை வேளைகளில் தமிழ் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய உணவுக் கடைகள் உள்ளிட்டவைகள் இடம் பெற்று இருந்தன. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் திரளாக பங்கேற்றனர்.

இந்த ஆண்டு தமிழ்த் தெம்பு திருவிழா கடந்த பிப் 27 ஆம் தேதி முதல் மார்ச் 9 வரை 11 நாட்கள் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் பொது மக்களிடம் இருந்த கிடைத்த சிறப்பான வரவேற்பினை முன்னிட்டு விழாவினை மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டு நாளையும் நடைபெறும்.

The post தமிழ்த் தெம்பு திருவிழாவில் விறுவிறுப்பாக நடைபெற்ற ரேக்ளா பந்தயம்; மூன்று நாட்களாக நடைபெற்ற மாபெரும் நாட்டு மாட்டு சந்தை நிறைவு appeared first on Dinakaran.

Tags : raqla race ,Tamil Thembu Festival ,KOWAI ,RAKLA BETAYAM ,CONGO ,TAMIL TEMU FESTIVAL ,ISHA TODAY ,Goa North ,District ,Dhondamuthur ,Rakla Racing Show ,Alandurah ,Rekla Race ,Giant Country Cow ,
× RELATED தமிழ்நாட்டில் டிச.24 வரை வறண்ட வானிலை...