புதுடெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் பெங்களூரு செல்வதற்காக கடந்த 4ம் தேதி டெல்லி விமான நிலையத்திற்கு 82 வயது மூதாட்டி ஒருவர் தனது பேத்தியுடன் வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் மனைவி, டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே, மூதாட்டிக்கு வீல்சேர் தேவை இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். ஒரு மணி நேரம் காத்திருந்த போதும் மூதாட்டிக்கு வீல்சேர் வழங்கப்படவில்லை. வேறு வழியின்றி விமானத்தில் ஏற நடந்து செல்ல முடிவு செய்தனர்.
ஏர் இந்தியா டிக்கெட் கவுண்டர் அருகிலேயே அவர் தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரது கண்ணிலும் மூக்கு வாய் பகுதியிலும் காயம் ஏற்பட்டது. முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்ட பிறகு விமான நிறுவன ஊழியர்கள் வீல் சேர் கொண்டு வந்து கொடுத்ததாகவும் அதன் மூலம் விமானத்தை பிடித்து பெங்களூரு வந்ததாகவும் அவரது பேத்தி கூறி உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அவரது பேத்தி, எக்ஸ் தளத்தில் குற்றம்சாட்டினார். மேலும், ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு விமான போக்குவரத்து இயக்குனரகத்திடமும் மூதாட்டியின் குடும்பத்தினர் புகார் அளித்தனர்.
இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் விமான நிறுவனம் தனது பாட்டியை மிக மோசமாக நடத்தியதாக அவரது பேத்தி கூறிய புகாருக்கு நேற்று பதிலளித்த ஏர் இந்தியா நிறுவனம், ‘‘மூதாட்டி தனது பேத்தியுடன் நடந்து செல்லும் போது துரதிஷ்டவசமாக விழுந்துள்ளார். உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கூடுதல் சிகிச்சை அளிக்க டாக்டர்கள் தயாராக இருந்த நிலையில் அவர்களாகவே மறுத்துவிட்டு பெங்களூருக்கு விமானத்தில் செல்வதாக கூறி புறப்பட்டனர். அதன் பிறகும் மருத்துவ உதவி அளிக்க தயாராக இருந்தும் மறுத்துவிட்டனர்’’ என கூறப்பட்டுள்ளது.
The post ஏர் இந்தியா விமான நிறுவனம் அலட்சியம் மாஜி ராணுவ அதிகாரியின் மனைவிக்கு வீல்சேர் மறுப்பு: நடந்து சென்ற போது தவறி விழுந்து ஐசியுவில் அட்மிட் appeared first on Dinakaran.
