தர்மபுரி: உதவி கேட்டு சந்தித்த போது, பாஜ நிர்வாகி படுக்கைக்கு அழைத்ததாக கல்லூரி மாணவி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். தவெக சார்பில், தர்மபுரியில் மகளிர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 21 வயது மாணவி பங்கேற்று பேசினார். அப்போது, புராஜக்ட் தொடர்பாக ஏரியூர் பகுதியைச் சேர்ந்த பாஜ நிர்வாகியை சந்தித்து உதவி கேட்டபோது, தன்னை படுக்கைக்கு அழைத்ததாக மேடையிலேயே அவர் தெரிவித்தார்.
இதனால், நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நான் டிப்ளமோ இஇஇ இறுதியாண்டு படித்து வருகிறேன். கொரோனா காலத்தில் ரூல் பென்சிலையும், நார்மல் வாட்டர் வைத்தும் ஆக்சிஜன் இன்வெட்டர் கண்டுபிடித்தேன். அதன் மூலம் ஏராளமானோருக்கு ஆக்சிஜன் வழங்கியிருக்கிறேன். அப்போது, என்னை யாருக்கும் தெரியாது. இப்போது தான் எல்லோருக்கும் ஆக்சிஜன் இன்வெட்டர் கண்டுபிடித்த பொண்ணு என்று தெரிகிறது.
தற்போது நான் செய்து கொண்டிருக்கும் புராஜக்ட் கம்பரஷர் வைத்து ஒரு ஆக்சிஜன் இன்வெட்டர் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். அறிவியல் கண்காட்சியில் உலக அளவிலும், தேசிய அளவிலும் நான் தான் முதலிடம் பெற்றுள்ளேன். மேலும், உலக சாதனை படைத்துள்ளேன். 2023-2024ல் இளம் விஞ்ஞானியாக என்னை தேர்வு செய்து விருது வழங்கினர். தேசிய அளவிலான இறகுப்பந்து போட்டியில் பங்கேற்று விளையாடியுள்ளேன். இப்போது புதிதாக நிறைய புராஜக்ட் செய்து வருகிறேன். இதற்கு உதவி தேவையாக உள்ளது.
இவ்வளவு புராஜக்ட்ஸ் செய்து கொண்டிருக்கும்போதே எனக்கு தடைகள் வருகிறது. உதவிக்காக ஏரியூர் பகுதியைச் சேர்ந்த பாஜ நிர்வாகியை சந்திக்க சென்றபோது, என்னை எப்படி யூஸ் பண்ணிக்கலாம் என்று தான் பார்த்தாங்களே தவிர, நம்ம ஊரு பொண்ணு, நம்ம ஸ்டேட்டுக்கு ஒரு பெயர் வருமே என்றெல்லாம் அவர்கள் யோசிக்கவில்லை.
ஏரியூர் ஒன்றியத்தைச் சேர்ந்த பாஜ நிர்வாகியை, புராஜக்ட் தொடர்பாக நேரில் சந்தித்தபோது, தவறாக நடக்க முயன்றார். அவர் என்னை படுக்கைக்கு அழைத்தார். அதிலிருந்து உடனே வெளியே வந்துவிட்டேன். அவருடன் மாநில தலைவர் அண்ணமாலை சாரை சந்தித்துள்ளேன். அங்கிருந்து வந்தபிறகும் என்னை தவறாக பயன்படுத்திக்கொள்ள முயன்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.
The post உதவி கேட்ட தர்மபுரி மாணவியை படுக்கைக்கு அழைத்த பாஜ நிர்வாகி: பகிரங்க பேட்டியால் பரபரப்பு appeared first on Dinakaran.
