×

ஏற்காட்டில் ஆசிரியை கொலை; விஷ ஊசி போடமாட்டேனு மறுத்தேன் கட்டாயப்படுத்தி போட வைத்தனர்: கைதான நர்சிங் மாணவி பகீர் வாக்குமூலம்

சேலம்: ஏற்காட்டில் ஆசிரியைக்கு விஷ ஊசி போட்டு கொலை செய்த வழக்கில், தன்னை கட்டாயப்படுத்தி ஊசியை காதலன் போட வைத்தார் என கைதான நர்சிங் மாணவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். திருச்சி மாவட்டம் துறையூர் விநாயகர்நகரை சேர்ந்தவர் முத்துசாமி மகள் லோகநாயகி (எ) அல்பியா (31) ஆசிரியை. இவர், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே விடுதியில் தங்கியிருந்து, வேலை பார்த்து வந்தார். இவரை மர்மநபர்கள் கொலை செய்து, ஏற்காடு 60 அடி பாலப்பகுதியில் தூக்கி வீசியிருந்தனர். இதுபற்றி ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இக்கொலையில் ஈடுபட்ட லோகநாயகியின் காதலனான பெரம்பலூரை சேர்ந்த பிஇ 4ம் ஆண்டு மாணவன் அப்துல் ஹபீஸ் (22), அவருக்கு உறுதுணையாக இருந்த சென்னை ஐடி கம்பெனி ஊழியர் தாஹியா சுல்தானா (22), துறையூர் செங்காட்டுப்பட்டியை சேர்ந்த நர்சிங் இறுதியாண்டு மாணவி மோனிஷா (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த விசாரணையில், தன்னை திருமணம் செய்யாமல் வேறு பெண்ணை மணந்தால், குடும்பத்துடன் கொன்றுவிடுவேன் என மிரட்டியதால் தனது 2 காதலிகளுடன் சேர்ந்து விஷ ஊசி போட்டு லோகநாயகியை கொன்றதாக அப்துல் ஹபீஸ் வாக்குமூலம் அளித்தார். லோகநாயகியை கொல்ல விஷ ஊசியை செலுத்திய நர்சிங் மாணவி மோனிஷாவிடமும் போலீசார் தனியாக விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர். அதுபற்றி போலீசார் கூறியதாவது: அப்துல் ஹபீஸ், மோனிஷாவை காதலித்து வந்துள்ளார். அவரை தொடர்புகொண்டு, தனக்கு தங்கை உறவு கொண்ட தாஹியா சுல்தானாவின் அண்ணனை திருமணம் செய்து கொலை செய்த லோகநாயகியை பழிவாங்க வேண்டியுள்ளது. அவருக்கு ஊசி போட்டு கொல்ல வேண்டும். அதனை நீதான் செய்ய வேண்டும். அதை செய்துவிட்டால், உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் எனக்கூறி சேலத்திற்கு அழைத்து வந்துள்ளார்.

வந்த இடத்தில், தான் வைத்துள்ள அறுவை சிகிச்சைக்கான மயக்க மருந்து மற்றும் ஊசியை கொடுத்துவிட்டு, நீங்களே போட்டுக்கொள்ளுங்கள் என அப்துல் ஹபீசிடம் மோனிஷா கூறியிருக்கிறார். ஆனால் நீ தான், ஊசியை போட வேண்டும் என அப்துல் ஹபீஸ் மிரட்டினார். அதனால் தான், ஏற்காடு மலைப்பாதையில் காருக்குள் வைத்து, பெயின் கில்லர் எனக்கூறி முதல் ஊசியை அதிக மயக்க மருந்து டோசுடன் போட்டேன். மயங்கியதும், மற்றொரு ஊசியை போட்டேன். அவர் மூச்சு திணறி இறந்தார். பிறகு உடலை தூக்கி போட்டுவிட்டு வந்துவிட்டோம், என மோனிஷா வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முதலில் ஊசியை மோனிஷா போட மறுத்த நிலையில், அவரை அப்துல் ஹபீஸ் கட்டாயப்படுத்தி போட வைத்துள்ளார். இதனால் அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோ போன்றவற்றை வெளியிட்டுவிடுவேன் என மிரட்டியிருக்கலாம் என போலீசார் சந்தேகம் கொண்டுள்ளனர். இதனிடையே இக்கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வாடகை காரை நேற்று, தனியார் கார் நிறுவனத்தில் இருந்து ஏற்காடு போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post ஏற்காட்டில் ஆசிரியை கொலை; விஷ ஊசி போடமாட்டேனு மறுத்தேன் கட்டாயப்படுத்தி போட வைத்தனர்: கைதான நர்சிங் மாணவி பகீர் வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Bakir ,Salem ,Yerevan ,MUTHUSAMI ,LOKANAYAGI ,DURAIUR VINAYAKARNAGAR, TRICHI ,
× RELATED அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் 42 சவரன்,...