×

நாளை உலக மகளிர் தினம்.. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!!

சென்னை: உலக மகளிர் தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பெண்களின் சாதனைகளை பறைசாற்றும் வகையிலும், பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அவர்களின் உரிமைக்காக வாதிடவும் மார்ச் 8ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. உலகின் முதல் மகளிர் தினம் 1911ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி கொண்டாடப்பட்டது. உலக மகளிர் தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்;
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்’ என்கிற மகாகவி பாரதியாரின் வரிகளுக்கு ஏற்ப, இன்று எல்லாத் துறைகளிலும் புதுமை படைத்து, பெண்கள் வெற்றிக்கொடி நாட்டி வருகின்றனர். பொறுமை, தியாகம், துணிச்சல், விடாமுயற்சி என பல்வேறு நற்பண்புகளும் ஒருங்கே அமையப் பெற்ற பெண்குலத்தின் பெருமையைப் போற்றும் விதமாக, ஆண்டுதோறும் மார்ச் 8-ஆம் தேதி அன்று சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இனிய நாளில், தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் மகளிர் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டமற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

அன்பை அள்ளிக் கொடுப்பதில் அன்னையாக, அறிவை அருளும் ஆசிரியையாக, பாசத்தோடு அரவணைக்கும் சகோதரியாக, மனதோடு மனம் கலந்த மனைவியாக, மகளாக, நட்பைக் காட்டும் தோழியாக, தர்மத்தைச் சொல்லும் பாட்டியாக என, வாழ்நாள் முழுவதும் நம்மோடு பயணிக்கின்றவர்கள்தான் பெண்கள். தற்போது பெண்கள், கல்வி அறிவு பெற்று ஆட்சித் துறை, தொழில் துறை, அறிவியல், மருத்துவம், சட்டம், காவல், இலக்கியம், கல்வி போன்ற அனைத்துத் துறைகளிலும் சிறப்பாகப் பணியாற்றி வெற்றிநடை போட்டு வருதை நம் கண்களால் காண முடிகிறது.

இன்றைக்கு பெண்களே இல்லாத துறை இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். இன்றைய பெண்கள் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாகவும், புரட்சிப் பெண்ணாகவும் விளங்கி வருகின்றார்கள். பெண்ணுரிமை வாழட்டும்! வளரட்டும்! என்ற வாழ்த்துதலோடு, மீண்டும் எனது இதயங்கனிந்த சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்மையை வணங்குவோம்! பெண்மையைப் போற்றுவோம்! பெண்மையால் பெருமை கொள்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்;
அனைவரின் உயர்வுக்கும் உறுதுணையாக இருக்கும் மகளிரை பெருமைப்படுத்தும் வகையில் உலக மகளிர் தினம் மார்ச் 8-ம் தேதியான நாளை கொண்டாடப்படும் நிலையில், அனைத்து மகளிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் உளமார்ந்த மகளிர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மகளிர் நாள் நூற்றாண்டுகளைக் கடந்த வரலாறு கொண்டதாகும். 1789-ம் ஆண்டில் பிரெஞ்சுப் புரட்சியின்போது சமத்துவம், சுதந்திரத்துவம், வாக்குரிமை ஆகிய மூன்றையும் வலியுறுத்தி பாரிஸ் நகரில் பெண்கள் போராடத் தொடங்கியது தான் மகளிர் நாள் கொண்டாடப்படுவதற்கான தொடக்கம் ஆகும். அதன் பின் உலகம் முழுவதும் உள்ள மகளிர் தங்களின் கோரிக்கைக்காக குரல் கொடுத்த நிலையில் 1911-ம் ஆண்டில் தான் சர்வதேச மகளிர் நாளை ஐ.நா. அமைப்பு முறைப்படி அறிவித்தது.

21-ம் நூற்றாண்டு பிறந்து கால் நூற்றாண்டாகி விட்ட போதிலும் இன்னும் பெண்களுக்கு முழுமையான விடுதலையும், உரிமைகளும் கிடைக்கவில்லை. வீடுகள் தொடங்கி அலுவலகம் வரையிலும், ஆட்சி மன்றத்திலும் பெண்கள் அவர்களின் உரிமைகளுக்காக போராடும் நிலை இன்றும் தொடர்ந்து வருகிறது. சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றங்களிலும் மகளிருக்கு பிரதிநிதித்துவம் அளிக்க சட்டம் இயற்றப் பட்டாலும், அதிகாரம் இன்னும் எட்டாக்கனியாகத் தான் இருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரம் வழங்கப்பட்டாலும் கூட, அதை பயன்படுத்தும் உரிமை குடும்பத்தினரிடம் தான் இருக்கிறதே தவிர, பெண்களின் கைகளுக்கு கிடைக்கவில்லை.

இப்படியாக உரிமை, அதிகாரம், விடுதலை ஆகியவையும், பெண்களும் தண்டவாளங்களைப் போல இணையாமல் இணையாகவே பயணிக்க வேண்டியுள்ளது. ஆணுக்கு இணையாக பெண்கள் முன்னேற வேண்டும்; சாதனைகளை படைக்க வேண்டும் என்பன தான் நமது உயர்ந்த நோக்கங்கள். அந்த நோக்கங்கள் எட்டப்பட வேண்டும் என்றால் அவர்களுக்கு உரிமையும், விடுதலையும் வழங்கப்பட வேண்டும். பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதை மகளிர் தினத்தில் மட்டும் பயன்படுத்தும் முழக்கமாக வைத்துக் கொள்ளாமல், உண்மையாகவே மகளிருக்கு முழுமையான விடுதலையையும், உரிமையையும் வென்றெடுத்துக் கொடுக்க இந்த நாளில் உறுதியேற்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post நாளை உலக மகளிர் தினம்.. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!! appeared first on Dinakaran.

Tags : World Women's Day ,Secretary General ,Edappadi Palanisami ,Ramadas ,Palamaka ,Chennai ,Dinakaran ,
× RELATED ஊட்டியில் 150 அடி ஆழ பள்ளத்தாக்கில் விழுந்த இளைஞர் உயிருடன் மீட்பு