குன்னூர் : குன்னூரில் ரூ.8 லட்சம் கொடுத்து மலை ரயிலை வாடகைக்கு எடுத்து வந்த 8 நாடுகளை சேர்ந்த மருத்துவ குழுவினர், மலை ரயிலில் உற்சாக பயணம் மேற்கொண்டனர்.
யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயில் நீலகிரியின் பாரம்பரிய சின்னமாக விளங்குகிறது. இந்த ரயிலில் பயணிக்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் 8 நாடுகளை சேர்ந்த பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவர்கள் ஊட்டியில் நடைபெறும் கலந்தாய்வு கூட்டத்திற்கு செல்வதற்காக நீலகிரி மலை ரயிலை ரூ.8 லட்சம் கொடுத்து வாடகைக்கு எடுத்து பயணித்தனர்.
குறிப்பாக ஜெர்மனி, பிரேசில், நெதர்லாந்து உட்பட 8 வெளிநாடுகளை சேர்ந்த மருத்துவர்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரயில் மூலம் நேற்று காலை குன்னூர் வந்தடைந்தனர். தொடர்ந்து, குன்னூரில் ரயில் நிலையங்கள் மற்றும் காலநிலையை ரசித்தனர். முன்னதாக ஆடர்லி, ஹில்குரோவ், ரன்னி மேடு ஆகிய ரயில் நிலையங்களில் ரயிலை நிறுத்தி புகைப்படம் எடுத்துக் கொண்டு, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வெளிநாட்டினர், குன்னூரில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்டு சென்றனர்.
இந்த சிறப்பு ரயிலுக்காக மேட்டுப்பாளையம்-குன்னூர் வரை நீராவி இன்ஜின் பயன்படுத்தப்பட்டும், குன்னூரிலிருந்து ஊட்டி வரை டீசல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டும் இயக்கப்பட்டது. இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘‘சிறப்பு வாய்ந்த இந்த மலை ரயிலில் பயணித்தது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. குகைகளில் கூச்சலிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிபடுத்தி வந்தோம். வரும் வழியில் அருவிகளை கண்டு ரசித்தோம். இந்த பயணம் எங்களின் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக உள்ளது’’ என தெரிவித்தனர்.
The post குன்னூரில் ரூ.8 லட்சம் கொடுத்து மலை ரயிலை வாடகைக்கு எடுத்து வெளிநாட்டு குழுவினர் பயணம் appeared first on Dinakaran.
