×

மக்காச்சோள வர்த்தகம் மேற்கொள்ள தற்போதுள்ள 1% சந்தை கட்டணம் ரத்து: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசின் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் செயலாளர் தட்சிணாமூர்த்தி நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ்நாட்டில் மக்காச்சோள பயிர் சராசரியாக 4 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டு 29 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது எத்தனால் உற்பத்தி தொழிற்சாலைகளில் மூலப்பொருளாக மக்காச்சோளம் தேவை பெரிதும் அதிகரித்துள்ளது. இதனால், தமிழ்நாடு அரசால் மக்காச்சோள சாகுபடி பெருமளவில் விவசாயிகளிடையே ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு வேளாண் விளைபொருள் சந்தை (முறைப்படுத்துதல்) சட்டத்தின்படி மக்காச்சோளத்திற்கு கோயம்புத்தூர், ஈரோடு, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், திருப்பூர் ஆகிய 7 விற்பனை குழுக்களின் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் ஒரு சதவீத சந்தைக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் மக்காச்சோள சாகுபடி பரப்பு அதிகரித்து உற்பத்தி உயர்ந்ததை ஒட்டி பெரம்பலூர், திருச்சி, சேலம், மதுரை, திருநெல்வேலி, கடலூர், தேனி, திண்டுக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விருதுநகர், நாமக்கல், காஞ்சிபுரம், வேலூர், அரியலூர் ஆகிய 16 விற்பனை குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள 161 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மக்காச்சோள வர்த்தகத்திற்கு ஒரு சதவீத சந்தை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை ஆராய்ந்து மக்காச்சோளத்திற்கான அறிவிக்கை தமிழ்நாட்டின் அனைத்து விற்பனைக்குழு பகுதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது. இதற்கான அரசிதழ் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post மக்காச்சோள வர்த்தகம் மேற்கொள்ள தற்போதுள்ள 1% சந்தை கட்டணம் ரத்து: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chennai ,Agricultural Production Commissioner ,Dakshinamoorthy ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு...