
கோவை: கோவை மாவட்டம் சின்னத்தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் வேட்டையன் என பொதுமக்களால் அழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டு யானை அடிக்கடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட சுயம்பு மற்றும் முத்து என்ற 2 கும்கி யானைகள் டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து வரவழைக்கப்பட்டன. இந்த இரண்டு கும்கி யானைகளுக்கும் அடுத்தடுத்து மதம் பிடிப்பதற்கான ஆரம்ப கட்ட அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, வனகால்நடை மருத்துவரின் ஆலோசனையின்படி டாப்சிலிப் யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர் காட்டு யானையை விரட்டும் பணிகளுக்காக டாப்சிலிப் முகாமில் இருந்து சின்னத்தம்பி என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டது.
தடாகம் சுற்று வட்டார பகுதிகளில் காட்டு யானையாக உலா வந்த சின்னத்தம்பி யானையின் சேட்டைகள் மற்றும் குறும்புத்தனமான நடவடிக்கைகளால் அப்பகுதி மக்களிடம் பிரபலமாக இருந்தது. விளைநிலங்களை சேதப்படுவத்துவதாக எழுந்த புகாரின் பேரில் கடந்த 2019ம் ஆண்டு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சின்னத்தம்பி யானை, டாப்சிலிப் யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு கும்கி யானையாக மாற்றப்பட்டது. இதையடுத்து கிராமங்களுக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்ட சின்னத்தம்பி யானை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே 6 ஆண்டுகளுக்கு பிறகு சின்னத்தம்பி யானை தனது சொந்த மண்ணிற்கு காட்டு யானையை விரட்ட அழைத்து வரப்பட்டது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அந்த யானையை ஆர்வத்துடன் சென்று பார்வையிட்டனர்.
கடந்த சில நாட்களாக வேட்டையன் யானையின் நடமாட்டம் குறைந்துள்ள நிலையில், காட்டு யானை பிரச்சனை அதிகமுள்ள பகுதிகளுக்கு கொண்டு செல்ல வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: காட்டுயானையை விரட்டும் பணிகளுக்காக சின்னத்தம்பி யானை வரவழைக்கப்பட்டு, வனஎல்லையோர பகுதிகளில் ரோந்து அழைத்து செல்லப்பட்டது. தற்போது காட்டு யானை பிரச்சனை குறைந்துள்ளது. இதனால் தடாகம் பகுதியில் உள்ள சின்னத்தம்பி யானையை, கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காட்டுயானை பிரச்சனை அதிகமுள்ள மற்ற பகுதிகளுக்கும் அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. தேவைப்படும் போது காட்டு யானையை விரட்ட சின்னத்தம்பி யானை அழைத்து செல்லப்படும்’’ இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
The post வேட்டையன் யானை நடமாட்டம் குறைந்தது; சின்னத்தம்பி யானையை மற்ற பகுதிகளுக்கு அழைத்து செல்ல திட்டம் appeared first on Dinakaran.
