×

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம்

டாக்கா: வங்கதேச கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் முஷ்பிகுர் ரஹீம் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததையடுத்து 35 வயதான முஷ்பிகுர் ரஹீமும் தனது ஓய்வு குறித்து சமூக ஊடகங்கள் மூலமாக தெரிவித்தார்.

“இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார். நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் வங்கதேச அணி இந்தியா மற்றும் நியூசிலாந்திடம் தோற்றது. அதே நேரத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால் அந்த அணியால் ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியவில்லை.

இதன் காரணமாக அவர் ஓய்வை அறிவித்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஓய்வு குறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “நமது உலகளாவிய சாதனைகள் குறைவாக இருக்கலாம், ஆனால் நான் என் நாட்டிற்காக களத்தில் இறங்கும்போதெல்லாம், முழுமையான அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையுடன் எனது 100% உழைப்பையும் கொடுத்தேன்” என தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 2006ல் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான முஷ்பிகுர் ரஹீம் 274 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 49 அரைசதங்கள் மற்றும் 9 சதங்களுடன் 7795 ரன்கள் எடுத்துள்ளார். விக்கெட் கீப்பராக அவர் 243 கேட்சுகளையும் 56 ஸ்டம்பிங்குகளையும் செய்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற்றாலும் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவார்.

The post சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம் appeared first on Dinakaran.

Tags : Mushfikur Rahim ,Dhaka ,India ,Champions Trophy semi-final ,Australia ,Steve Smith ,Mushfigur Rahim ,Dinakaran ,
× RELATED இந்தியா ஓபன் பேட்மின்டன் காயத்ரி-ட்ரீஷா வெற்றி வேட்டை