×

அதிமுக கூட்டத்தில் நாற்காலிகளை வீசி சரமாரி தாக்குதல்; எடப்பாடி, செங்கோட்டையன் ஆதரவாளர்கள் பயங்கர மோதல்: கோபியில் பரபரப்பு

கோபி: கோபியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் எடப்பாடி, செங்கோட்டையன் ஆதரவாளர்கள் பயங்கர மோதி நாற்காலிகளை வீசி தாக்கி கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளை புறக்கணித்து சொந்த மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மகன் திருமண விழாவில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்ட பாஜ பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழாவில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டதும், அவர்கள் அண்ணாமலையுடன் சிரித்து பேசியதும் அதிமுகவினரிடையே புகைச்சலை ஏற்படுத்தியது.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் செங்கோட்டையனிடையே மோதலும், குழப்பமும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் நேற்று கோபி திருப்பூர் சாலையில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியால் கோபி தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மேட்டுப்பாளையம் எம்எல்ஏ ஏ.கே.செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். அதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். இங்கும் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே வெற்றி பெற்றோம் என பழைய வரலாறுகளை பேசினார். அவர் பேசி முடிக்கும்போது, கூட்டத்தில் இருந்து எழுந்த அந்தியூர் ஒன்றிய இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் பிரவீன் என்பவர், 2011ல் இருந்து இளைஞர் பாசறை செயலாளர் பொறுப்பில் இருந்து வருவதாகவும், அதிமுக கூட்டங்களுக்கு அழைப்பு வருவதில்லை என்றும், இன்று நடைபெறும் இவ்வளவு பெரிய கூட்டத்திற்குகூட அழைப்பு இல்லை என சரமாரியாக குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

அவரை மேடையில் வந்து பேசுமாறு செங்கோட்டையன் அழைத்தார். ஆனால் கீழே இருந்து தொண்டனாகவே கேள்வி கேட்கிறேன் என பிரவீன் கூறினார். அதைத்தொடர்ந்து செங்கோட்டையன், சமரசம் செய்ய பிரவீனை மேடைக்கு அழைக்கவே, கட்சியினர் பிரவீனை மேடைக்கு அழைத்து சென்றனர். அங்கும் இதே குற்றச்சாட்டை பிரவீன் கூறவே, ஆத்திரமடைந்த செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் பிரவீனை சூழ்ந்து சரமாரியாக தாக்கினர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கு இருந்த நாற்காலிகளை தூக்கி பிரவீனை தாக்க தொடங்கினர். தொடர்ந்து பிரவீனை இழுத்து வந்த செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மண்டபத்தின் வெளியே சரமாரியாக தாக்கினர். இதனால் திருமண மண்டபம் முழுவதும் போர்க்களம்போல் காட்சி அளித்தது. அப்போது அங்கு இருந்த சிலர் பிரவீனை பாதுகாப்பாக வெளியேற்றினர். செங்கோட்டையனிடம் கேள்வி கேட்டவர் எடப்பாடி ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. அவரை சமாதானப்படுத்த முயற்சித்தும் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது மோதலாக உருவாகி எடப்பாடி, செங்கோட்டையன் ஆதரவாளர்கள் நாற்காலிகளை வீசி தாக்கி கொண்டனர்.

மோதலுக்கு எடப்பாடி உறவினர் காரணமா?

மோதலுக்கு பின் கட்சி நிர்வாகிகளை உள்ளே அழைத்த செங்கோட்டையன் பேசினார். அவர் கூறும்போது, ‘‘பிரச்னை செய்த நபர் கட்சி உறுப்பினரே இல்லை. அந்தியூரை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ இ.எம்.ஆர் ராஜா பிரச்னை செய்வதற்காக அவரை திட்டமிட்டு அனுப்பி உள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அந்தியூர் தொகுதியில் அதிமுக தோல்விக்கு இஎம்ஆர் ராஜாதான் காரணம். அவர் பொதுமக்களிடம் அதிமுகவிற்கு ஓட்டு போட வேண்டாம் என்று பிரசாரம் செய்த ஆதாரங்கள் என்னிடம் உள்ளது’’ என்றார். செங்கோட்டையனால் குற்றம்சாட்டப்பட்ட இ.எம்.ஆர்.ராஜா, சமீபத்தில் செங்கோட்டையன் பரிந்துரை இல்லாமலும், அவருக்கே தெரியாமலும் ஜெயலலிதா பேரவை மாநில இணைச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்டவர். அவரைபோல் முன்னாள் எம்.பி. வி.கே.சின்னசாமியின் மகன் சிவக்குமார் உள்ளிட்ட 4 பேருக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டதும் செங்கோட்டையனை ஆத்திரத்திற்கு உள்ளாக்கியது. அதன் பிறகே இருவருக்கும் இடையே வெளிப்படையாக மோதல் வெடித்தது.

இந்நிலையில் கோபியில் நடைபெற்ற கூட்டத்தில் மோதல் வெடித்து, நாற்காலிகளை தூக்கி வீசி அடிக்கும் அளவிற்கு பகிரங்கமாக வெடித்திருப்பது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மோதலுக்கு எடப்பாடி நெருங்கிய உறவினரே காரணம் என சமூக வலைத்தளத்தில் அதிமுகவினர் பரபரப்பான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். அதில் அதிமுக நிர்வாகி பிரவீன், எடப்பாடி பழனிசாமியின் மிக நெருங்கிய உறவினர் சசி பிரபுவுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களையும், பிறந்தநாள் கொண்டாடும் வீடியோக்களையும் பதிவிட்டுள்ளனர். அதிமுகவில் மாநில நிர்வாகிகள் இருவரை செங்கோட்டையனுக்கு தெரியாமல் சசி பிரபு பரிந்துரையின் பேரிலேயே எடப்பாடி பழனிசாமி நியமித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக செங்கோட்டையன் கடும் அதிருப்தியில் உள்ளார்.

The post அதிமுக கூட்டத்தில் நாற்காலிகளை வீசி சரமாரி தாக்குதல்; எடப்பாடி, செங்கோட்டையன் ஆதரவாளர்கள் பயங்கர மோதல்: கோபியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Barley ,Eadapadi ,Sengkottayaan ,Kobe ,Kobi ,Sengkottai ,Former Minister ,Senkottian ,Aitmuka ,Secretary General ,Edappadi Palanisami ,Saramari ,Sengkottiyan ,
× RELATED சேலத்தில் எடப்பாடிக்கு செக்; செங்கோட்டையன் ஸ்கெட்ச்