புதுடெல்லி: சுமை தூக்கும் தொழிலாளர்களுக்காக காங்கிரஸ் போராடும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மகாகும்பமேளாவுக்கு செல்ல கடந்த மாதம் 15ம் தேதி புதுடெல்லி ரயில் நிலையத்தில் ஏராளமான மக்கள் குவிந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலியாகினர். அப்போது கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களையும், உயிரிழந்தவர்களின் உடல்களையும் மீட்க ரயில் நிலையத்தில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உதவியாக செயல்பட்டனர். அந்த சுமை தூக்கும் தொழிலாளர்களை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அண்மையில் சந்தித்து பேசி, அவர்களுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்தார். இந்நிலையில் சுமை தூக்கும் தொழிலாளர்களுடனான சந்திப்பு குறித்த காணொலி பதிவை ராகுல் காந்தி தன் எக்ஸ் பதிவில் வௌியிட்டுள்ளார்.
மேலும் அவர் தன் எக்ஸ் பதிவில், “சில தினங்களுக்கு முன் புதுடெல்லி ரயில் நிலையம் சென்று அங்கு சுமை தூக்கும் தொழிலாளர்களை சந்தித்தேன். அப்போது பிப்ரவரி 15ம் தேதி கூட்ட நெரிசலில் சிக்கியவர்களை காப்பாற்ற அவர்கள்(சுமை தூக்கும் தொழிலாளிகள்) எத்தகைய முயற்சிகளை எடுத்தார்கள் என என்னிடம் விவரித்தனர். என்னிடம் ஒரு சுமை தூக்குபவர் சில நாள்களில் வரும் பணத்தை வீட்டுக்கு அனுப்பி விட்டு, சாப்பிடாமல் இருப்பேன் என்றார். தினக்கூலி வாங்கும் அந்த தொழிலாளர்களின் இரக்க குணத்தால் நான் ஈர்க்கப்பட்டேன். நல்லெண்ணமும், உதவும் குணமும் கொண்ட அவர்கள் இன்னும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறார்கள்.
நம் சகோதரர்களாகிய சுமை தூக்கும் தொழிலாளிகள் இன்னும் இதுபோன்ற சிரமங்களில் வாழ்கின்றனர். ரயில் நிலைய கூட்ட நெரிசலில் தங்கள் இன்னுயிரை பணயம் வைத்து மக்களை காப்பாற்றிய அவர்களின் குரல்களை யாரும் கேட்கவில்லை.
நான் அவர்களின் கோரிக்கைகளை அரசாங்கத்திடம் எடுத்து சென்று, அதை நிறைவேற்ற, அவர்களின் உரிமைகளுக்காக என் முழு பலத்துடன் போராடுவேன்” என தெரிவித்துள்ளார். அத்துடன் ரயில் நிலையம் போன்ற இடங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை நிர்வகிக்கவும், அப்போது ஏற்படும் உயிரிழப்புகள் போன்ற சம்பவங்களை தடுக்கவும் உரிய பரிந்துரைகளை வழங்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
The post சுமை தூக்கும் தொழிலாளர்களுக்காக காங்கிரஸ் போராடும்: ராகுல் காந்தி appeared first on Dinakaran.
