×

அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டில் 3192 பட்டதாரி ஆசிரியர்கள், 2768 இடைநிலை ஆசிரியர்கள், 200 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், 4000 கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள், 56 சட்டக்கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் உள்ளிட்ட 10,355 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த ஆண்டு முழுவதும் ஒரே ஒரு ஆசிரியர் கூட நியமிக்கப்படவில்லை. 2023ம் ஆண்டு அக்டோபர் 25ம் நாள் அரசு பள்ளிகளுக்கு 3,192 பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. அவர்களை தேர்ந்தெடுக்கும் பணி கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் முடிவடைந்தது. ஆனால், இன்னும் அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்படவில்லை.

அதேபோல், கடந்த ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ஒரே ஆள்தேர்வு அறிவிக்கை 2768 இடைநிலை ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்காக வெளியிடப்பட்ட அறிவிக்கைதான். ஆனால், அந்தப் பணிக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் போட்டித் தேர்வு நடத்தப்பட்டாலும் கூட, இன்று வரை விடைத்தாள்கள் திருத்தப்படவில்லை. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், அதன் பின் ஓராண்டாகியும் இன்று வரை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்படவில்லை. தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டதன் நோக்கமே அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்களை குறித்த நேரத்தில் தேர்வு செய்ய வேண்டும் என்பதுதான். எனவே அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசும், ஆசிரியர் தேர்வு வாரியமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Ramadas ,Chennai ,Palamaka ,Tamil Nadu ,
× RELATED எடப்பாடி சூழ்ச்சியில் சிக்கி தவிப்பு;...