×

அதிமுக இணைப்பு, பாஜவுடன் கூட்டணி: அமித்ஷா-வேலுமணி ரகசிய சந்திப்பு திருமணத்தை புறக்கணித்த எடப்பாடி; கோவையில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

கோவை: அதிமுக இணைப்பு, பாஜவுடன் கூட்டணி விவகாரம் குறித்து அமித்ஷா-வேலுமணி நடத்திய சந்திப்பு குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக பல்வேறு அணிகளாக பிரிந்து கிடக்கின்றது. ஓபிஎஸ், சசிகலா, டிடிவி என பல்வேறு அணிகளாக பிரிந்து தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அணியினர் அனைவரும் பாஜ ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து வருகின்றனர். பாஜ தயவோடு மீண்டும் அதிமுகவில் இணைவதற்கான முயற்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை ஓபிஎஸ் உள்பட யாரையும், எக்காரணம் கொண்டும் கட்சியில் மீண்டும் சேர்ப்பதில்லை என்ற முடிவில் உறுதியாக உள்ளார். அதேபோல வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாஜவுடன் கூட்டணி இல்லை என்பதிலும் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். ஆனால் அதிமுக செல்வாக்கு கொண்ட மேற்கு மண்டலத்தில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பாஜ ஆதரவு நிலைப்பாட்டில் தொடர்ந்து இருந்து வருகின்றனர்.

காரணம் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுகவில் இருந்து பிரிந்து கிடைக்கும் அணிகளின் தலைவர்கள் மீது ஐடி, ஈடி, சிபிஐ வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதற்கு பயந்து பாஜவுடன் கூட்டணி செல்ல விரும்புகின்றனர். ஆனால் பாஜவோடு பயணிக்க எடப்பாடி பழனிசாமி ஒத்துழைக்காமல் இருப்பதால் அவரை புறக்கணிக்கும் நிலைப்பாட்டினை மாஜி அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர். டெல்லி பாஜ மேலிடத்தின் அழுத்தத்தால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜ ஆதரவு நிலைப்பாடு மற்றும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு தனி அணிகளாக செயல்பட்டு வருபவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பது தொடர்பாக மேற்கு மண்டலத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட 6 பேர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர்.

ஆனால் பாஜவுடன் கூட்டணி வைக்க எடப்பாடி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதையடுத்து எடப்பாடி உறவினர் வீடுகளில் ஐடி ரெய்டு நடந்தது. இதன்பிறகும் எடப்பாடி பாஜவுடன் கூட்டணி வைக்க பிடிவாதமாக மறுததால் எடப்பாடி பழனிசாமிக்கும், மேற்கு மண்டலத்தில் உள்ள முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது. இதை கவனித்த பாஜ மேலிடம், மேற்கு மண்டலத்தில் இருந்தே எடப்பாடிக்கு எதிராக ஒரு அணியை உருவாக்க நினைத்து மாஜி அமைச்சர்களுக்கு தூதுவிட்டது. அவர்களும் பாஜ அசைவுக்கு இசைந்து மேலிடத்தை நேரில் சந்தித்து தங்களது ஆதரவு நிலைப்பாட்டினையும், கட்சி தலைமையின் எதிர்ப்பு நிலைப்பாட்டினையும் விளக்கி கூறினர்.

இதன்பின்னர் மேற்கு மண்டல சீனியர் நிர்வாகியான செங்கோட்டையனை முன்னிறுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்க முடிவு செய்யப்பட்டது. இதன் வெளிப்பாடாகத்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கோட்டையன் எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி அவர் கலந்து கொள்ளும் விழாக்களை புறக்கணித்தார். ஈரோடு மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டங்களில் எடப்பாடி பெயரை உச்சரிக்காமல் தவிர்தார். அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவையும் புறக்கணித்தார். சொந்த ஊரான கோபியில் கட்சி நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டார். அதிருப்தியில் இருந்த செங்கோட்டையனை சொகுசு காரில் தனியாக அழைத்து சென்று எஸ்.பி.வேலுமணி சந்தித்ததாக கூறப்படுகிறது.

இதன்பின்னர் கோவைக்கு 3 நாள் பயணமாக வந்த பாஜ ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, ஈஷா யோகா மையத்தில் நடந்த சிவராத்திரி விழாவில் பங்கேற்றார். இந்த விழாவில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணியும் பங்கேற்றார். இவருக்கு அண்ணாமலை அருகில் இருக்கை கொடுக்கப்பட்டிருந்தது. இந்த விழா முடிந்த பிறகு அமித்ஷாவுடன் எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின்போது, எடப்பாடி நிலைப்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது அமித்ஷா தரப்பில் இருந்து அதிமுக இணைப்பு குறித்து சில ஆலோசனைகள் கூறப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வேலுமணி-அமித்ஷா ரகசிய சந்திப்பு தொடர்பான தகவல் எடப்பாடி பழனிசாமிக்கு எட்டியதும் அவர் கடும் அதிருப்தியடைந்தார். பாஜ ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து தொடர்ந்து தனக்கு எதிராக காய் நகர்த்தி வரும் எஸ்.பி.வேலுமணிக்கு செக் வைக்கும் வகையில், எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தினார். இதனை தெரிந்து கொண்ட வேலுமணி, தனது மகன் திருமணத்தில் பாஜக நிர்வாகிகளை அழைத்து, எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக் கொடுத்தார். இதனால் கோபம் அடைந்த எடப்பாடி பழனிசாமி, கட்சியில் இருந்து நீண்டகாலமாக ஒதுக்கி வைத்திருந்த செ.மா.வேலுசாமிக்கு அமைப்பு செயலாளர் பதவி வழங்கினார்.

இந்நிலையில் கோவையில் நேற்று முன்தினம் முன்னாள் அமைச்சர் வேலுமணி மகன் திருமண விழாவில் பாஜ தலைவர் அண்ணாமலை தலைமையில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், முன்னாள் மாநில தலைவர் தமிழிசை, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜ மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். விழாவுக்கு வந்த அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்களிடம் மிகவும் இணக்கமாக பேசி வரவேற்றார். அவர்கள் அண்ணாமலையை சந்தித்து கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது எடப்பாடி பழனிசாமிக்கு கடும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

திருமணத்திற்கு வந்த அண்ணாமலையை, கொங்கு மண்டல அதிமுக நிர்வாகிகள், வரிசையாக எழுந்து நின்று, ஜெயலலிதாவுக்கு கொடுக்கும் மரியாதையை விட அதிகளவில் கொடுத்து, எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். இதனை பார்த்த எடப்பாடி பழனிசாமி மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளார். என்றாலும் திருமண விழாவுக்கு செல்ல எடப்பாடி பழனிசாமி தயாராக இருந்தார். ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை. இதற்கு முக்கிய காரணம் அமித்ஷாவுடன் வேலுமணி நடத்திய ரகசிய சந்திப்புதான்.

அதேநேரத்தில் பாஜ தலைவர்கள் ஒரே நேரத்தில் வருவது உறுதியானதால் எடப்பாடி பழனிசாமி அங்கு வருவதை தவிர்த்துக்கொண்டதாக கூறப்படுகிறது. 10ம் தேதி நடக்கும் திருமண வரவேற்பில் எடப்பாடி கலந்து கொள்வதாக கூறப்பட்டாலும், தனியாக ஒருநாள் வீட்டிற்கு வந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக வேலுமணியிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே வருகிற 10ம் தேதி கொடிசியாவில் அதிமுகவினர் மட்டும் பங்கேற்கும் திருமண வரவேற்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்வதாக உறுதியளித்துள்ளாராம். ஆனால் அவர் கலந்து கொள்வாரா? அல்லது தனது கோபத்தை காட்டும் வகையில் புறக்கணிப்பாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பின் எடப்பாடிக்கு வலதுகரமாக செயல்பட்டு வந்தவர் எஸ்.பி.வேலுமணி. ஆனால் தற்போது அவர் பாஜ ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளதால் அவரது மகன் திருமணத்தை எடப்பாடி புறக்கணித்ததாக கூறப்படுகிறது. மேற்கு மண்டல அதிமுக நிர்வாகிகள் இத்தனை நாட்களாக மறைமுகமாக பாஜ ஆதரவு நிலைப்பாடு எடுத்து வந்த நிலையில், அமித்ஷா வருகைக்கு பிறகு அடுத்தகட்ட நிலைக்கு சென்றிருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. எடப்பாடிக்கு எதிராக ஒரு அணியை உருவாக்க நினைத்து மாஜி அமைச்சர்களுக்கு பாஜ மேலிடம் தூதுவிட்டது. அவர்களும் பாஜ அசைவுக்கு இசைந்து மேலிடத்தை நேரில் சந்தித்து தங்களது ஆதரவு நிலைப்பாட்டினையும், கட்சி தலைமையின் எதிர்ப்பு நிலைப்பாட்டினையும் விளக்கி கூறினர்.

* திருமணத்திற்கு வந்த அண்ணாமலையை, கொங்கு மண்டல அதிமுக நிர்வாகிகள், வரிசையாக எழுந்து நின்று, ஜெயலலிதாவுக்கு கொடுக்கும் மரியாதையை விட அதிகளவில் கொடுத்து, எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். இதனை பார்த்த எடப்பாடி பழனிசாமி மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளார்.
* அமித்ஷா-எஸ்.பி.வேலுமணி சந்திப்பின்போது எடப்பாடி நிலைப்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது அமித்ஷா தரப்பில் இருந்து அதிமுக இணைப்பு குறித்து சில ஆலோசனைகள் கூறப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

The post அதிமுக இணைப்பு, பாஜவுடன் கூட்டணி: அமித்ஷா-வேலுமணி ரகசிய சந்திப்பு திருமணத்தை புறக்கணித்த எடப்பாடி; கோவையில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BJP ,Edappadi ,Amit Shah ,Velumani ,Coimbatore ,Amit Shah-Velumani ,Jayalalithaa ,OPS ,Sasikala ,TTV ,Dinakaran ,
× RELATED சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ஆலோசனை