
நன்றி குங்குமம் தோழி
கண்ணாடி பிம்பங்கள்!
‘வேதாத்ரி கண் சிகிச்சை மையம்’ என தொங்கிய போர்டு கண்ணில் பட உள்ளே நுழைந்தார் முனியன். கறுத்து மெலிந்த தேகம்… பொலிவிழந்த கண்கள்… உழைத்து ஓடாய் தேய்ந்த கூனிய உடல்வாகு… அழுக்கு வேட்டியும் மேல் சட்டையும், காலில் இன்றைக்கோ நாளைக்கோ பிய்ந்து போகும் நிலையிலுள்ள ரப்பர் செருப்புமாக தயங்கியபடி உள்ளே வந்தார். அவசரமாக ரிஜிஸ்டரை புரட்டிக் கொண்டிருந்த அட்டென்டர் முருகன், ‘‘பெரியவரே… என்ன வேணும்” என சத்தமாக கேட்க…
‘‘கண்ணுல பொறை விழுந்து போச்சி சாமி… இங்க இலவசமாக கண்ணு ஆபரேசன் செய்யுறதா சொன்னாங்க”…
‘‘ஆதார் கார்டு இருக்கா?” ‘‘இருக்குங்க!…’’ என தடுமாற்றத்துடன் கையில் வைத்திருந்த மஞ்ச பைக்குள் கைவிட்டு எடுத்துக் காட்ட…
‘‘நீங்களே வைச்சிக்குங்க பெரியவரே…ஒரு ஃபார்ம் தரேன்… எழுதுவீங்களா?’’
என சந்தேகமாக கேட்க…
தலையை சொறிந்தார் முனியன். ‘‘அதோ அங்க ஒரு பொண்ணு உட்கார்ந்து இருக்கே… அதுகிட்ட போங்க தகவல் சொன்னீங்கன்னா எழுதி தரும்…காது கேக்குமுங்களா” என மறுபடியும் சத்தமாக சைகையில் கேட்டான் முருகன்.
நெற்றியில் கைவைத்து கண்ணை
சுருக்கிக்கொண்டு பார்த்த முனியன்
‘‘கொஞ்சமா கேக்குமுங்க”…
‘‘காலையில் ஏதாவது சாப்டீங்களா?’’ என சத்தமாக கேட்டு சைகையும் செய்ய… ‘‘சாப்டேனுங்க சாமி”… என தலையாட்டியபடி அந்தப் பெண்ணை நோக்கி நகர்ந்தார்.அவரை அனுப்பிவிட்டு ரிஜிஸ்டரை மறுபடியும் செக் செய்து கொண்டிருந்தான் முருகன். இன்று நகரின் பிரதானமான கண் மருத்துவமனையான இங்கு இலவச கண் சிகிச்சை முகாம். ஏழை எளிய மக்களுக்காக அடிக்கடி நடைபெறும் வழக்கமான நிகழ்வுதான். முருகனின் சர்வீஸில் இது போன்ற வசதி வாய்ப்பற்ற ஏழை எளியவர்களை தினமும் சந்திக்கிறான். பல வயதானவர்கள் உதவிக்கு கூட ஆளில்லாமல் தனியாகவே வந்து சிகிச்சை பெற்று செல்வது பார்க்கவே பரிதாபமாக இருக்கும். இது போல் ஆதரவற்ற நபர்களுக்கு இலவச உணவினை வழங்கி வருவது அந்த மருத்துவமனையில் வழக்கமும் கூட. முருகனும் தனது சக்திக்கு இயன்றவரை கைக்காசை போட்டு உதவி கொண்டிருக்கும் தாராள மனம் படைத்தவன்.
இன்று வந்த ரிஜிஸ்டேஷன் ஃபார்ம்களை சரிபார்த்தபடி இருந்தவன் சத்தம் கேட்டு நிமிர்ந்தான்.
சிவப்பு நிற ஷிஃப்ட் கார் ஒன்று வேகமாக உள்ளே நுழைந்தது. அதிலிருந்து மரியாதைக்குரிய தோற்றம் கொண்ட நபரொருவர் இறங்கினார். டிரைவர் இறங்கி கதவை திறந்துவிட இறங்கியவர் வெள்ளை வேட்டி, சட்டை அணிந்திருந்தார். கையில் விலை உயர்ந்த வாட்ச், மொபைல் என அவரின் வளமை தெரிந்தது.
‘‘வாங்க… வாங்க” என சிரித்து வரவேற்று வரவேற்பு சோபாவில் அமர வைத்தான் முருகன்.
உள்ளே வந்தவர், ‘‘டாக்டர் இருக்காரா?’’ என அமர்த்தலாக கேட்க… ‘‘அஹாங்… இருக்காருங்க சார்… நீங்க?’’
‘‘நான் அடையாறுல இருந்து வரேன்…டாக்டரை பார்க்கணும்” என்றார். அடிக்கடி இது போல் நிறைய பெரிய மனிதர்கள் இலவச சிகிச்சைக்கு நன்கொடை அளிக்க வருவதுண்டு… அவர்களை மரியாதையாக நடத்த வேண்டும் என்பது டாக்டரின் உத்தரவு… அதனால் வரவழைத்து கொண்ட பவ்யத்துடன்
அவரிடம் மரியாதையாக நடந்து கொண்டான் முருகன். பேரை கேட்டுக் கொண்டு உள்ளே சென்று டாக்டரிடம் சொன்னான். டாக்டர் அழைக்க உள்ளே சென்றார் அந்தப் பெரிய மனிதர்.
சிறிது நேரத்தில் டாக்டர் காலிங்பெல்லை அழுத்தி, ‘‘அந்த ஃபார்ம் கொண்டு வாங்க” என்றார் முருகனை பார்த்து. ஏற்கனவே ரெடியாக வைத்திருந்த நன்கொடை ஃபார்மை எடுத்துக்கொண்டு வந்து நீட்டிய முருகனிடம்… ‘‘இதுயில்லை முருகன்… அந்த ரிஜிஸ்டேஷன் ஃபார்மை கொண்டு வாங்க” என்ற டாக்டரை புரியாமல் திரும்பி பார்த்தபடி கொண்டு வந்து கொடுத்தான்.
டாக்டர் அவரிடம் சிரித்துப் பேசியபடி… ஃபார்மை கொடுக்க டேபிளிலேயே பில்லப் செய்து கொடுத்தார் அந்தப் பெரிய மனிதர்… ‘‘அப்பறம் வரட்டுங்களா டாக்டர்”… என இளித்தபடியே வெளியேறியவரை பார்த்துக் கொண்டே நின்றான் முருகன். ‘‘இந்தாங்க முருகன்… இதை அந்த இலவச சிகிச்சை முகாம் ஃபார்மில் சேத்துடுங்க” என டாக்டர் கொடுக்க…
‘‘சார்!…’’ என புரியாமல் தலையை சொறிந்தான். ‘‘அட, ஆமாம்யா… ஓசி கிராக்கிதான்… அந்த அரசியல்வாதியோட சிபாரிசு… ஆள் வெயிட்டு கை… நாம மாட்டோம்னா… நம்ம ஆஸ்பெட்டலுக்கு குடைச்சல் தருவாங்க… தொலைஞ்சி போகுது…
அதுல போட்டு தொலை” என்றார் அலட்சியமாக…
‘‘நல்ல வசதியான ஆளா தெரியுறாரே டாக்டர்… ஏழைங்களுக்கு குடுக்குற இதுல கூடவா கையை வைப்பானுங்க. ச்சே…’’ ‘‘என்னய்யா பண்ணுறது… இதுமாதிரியான அல்பி சொல்பிகளை அட்ஜஸ்ட் பண்ணித்தான் ஆகனும்… இல்லைன்னா அது நொள்ளை… இது நொட்டைன்னு நம்மள நோண்டுவாங்க… அதெல்லாம் தேவையா நமக்கு” என டாக்டர் அடுத்த பேஷன்டுக்கு தயாரானார்.
அந்தப் பெரிய மனிதர் பூர்த்தி செய்த ஃபார்மை உள்ளே சொருகி வைக்கும் போது மனது கூசியது… இப்படியும் சிலர் என மனதை தேற்றிக் கொண்டான் முருகன். இலவச சிகிச்சை ஆபரேஷன் நடைபெறும் நாளில் பலரும் காலையிலேயே வந்து காத்திருக்க அந்தப் பெரிய மனிதரும் சேரில் அமர்ந்திருந்தார்.
காலையிலேயே வயதின், ஏழ்மையின் காரணமாக தளர்ந்த நடையுடன் வந்தவர்களை கண்டு பாவமாக இருந்தது… நெடுந்தொலைவில் இருப்பவர்கள் விடியலிலேயே வந்து காத்திருந்தனர். கூடவே அவர்களுக்கு உதவிக்கு வந்தவர்கள் ஓரமாக மர நிழலில் அமர்ந்திருந்தனர். ஏற்கனவே ஆபரேஷன் செய்த சிலர் சேரில் கறுப்பு கண்ணாடிகளுடன் அமர்ந்திருந்தனர்.
‘‘அம்மா!.. அடுத்த முறை இங்க வர்ற வரைக்கும் இந்த கறுப்பு கண்ணாடியை போட்டுக்குங்க… வெயில்ல கண்ணாடி இல்லாம போகாதீங்க… ஒரு வாரத்துக்கு தலையில் தண்ணி ஊத்தாதீங்க” என நர்ஸ் சொல்லிக் கொண்டிருந்தார். அந்தப் பெரிய மனிதருக்கும் ஆபரேஷன் நல்லபடியா முடிந்து வெளியே
வந்தவரிடமும்.. நர்ஸ் அதே இன்ஸ்ட்ரக் ஷனை சொல்லிக் கொண்டிருக்க…
‘‘ஏம்மா!… இதுக்கப்புறம் வேற கண்ணாடி போடணும்னாரே டாக்டர்… அதுவும் நீங்களே தருவீங்களா?’’ என அந்தப் பெரிய மனிதர் கேட்க… ‘‘இல்லீங்க சார்… எழுதித் தருவோம் நீங்க வெளிய வாங்கிங்கீங்க” என நர்ஸ் சொல்லியது காதில் விழுந்தது. ‘‘இல்லியே…. எங்க மச்சான் முறைல ஒருத்தன் போன வருஷம் ஆபரேஷன் பண்ணப்ப அங்க கண்ணாடியும் அவங்களே கொடுத்தாங்களே”… ‘‘இங்க இதான் சார் ப்ரொஸிஜர்… வேணும்னா டாக்டரை கேட்டுக்குங்க”… ‘‘சரி… எழுதி குடுங்க” என அலுத்துக்கொண்டே சீட்டை வாங்கிக் கொண்டு போனார் அந்தப் பெரிய மனிதர்.
அவரையே உற்றுப் பார்த்த முருகன்… வந்திருந்த ஒருவருக்கு கண்களில் ட்ராப்ஸை போட்டுவிட்டு ‘‘ஒருமணி நேரம் அப்படியே உட்காருங்க’’ என சொல்லிக்கொண்டே நகர்ந்தான். எதிரே முனியன் வந்து கொண்டிருப்பதை பார்த்தவன்… ‘‘என்ன பெரியவரே எப்படியிருக்கீங்க?’’ என கேட்க…
‘‘நல்லாயிருக்கேன் தம்பி” என கருப்பு கண்ணாடியை கழட்டினார் முனியன்.
‘‘போட்டுக்கங்க… இப்ப கண் எப்படியிருக்கு?”
‘‘நல்லாயிருக்கு சாமி”…
‘‘இதுக்கப்புறம் வேற கண்ணாடி எழுதி குடுத்திருக்காரா டாக்டர்”…
‘‘ஆமாம் தம்பி…இன்னைக்கு டாக்டருக்கு கண்ணை காமிக்க வந்தேன். போவும்போதுதான் புது கண்ணாடி வாங்கணும்”…
‘‘காசு ஏதாச்சும் வேணுங்களா பெரியவரே… சொல்லுங்க டிரஸ்ட் மூலமா வாங்கித் தர சொல்றேன்”…
‘‘வேணாம் தம்பி…பேத்தி முறையில ஒரு பொண்ணு துட்டு குடுத்துச்சி கண்ணாடி வாங்க… நான் பாத்துக்கறேன்… இல்லாத பட்ட வேற யாருக்காச்சும் வாங்கித்
தாப்பா”… ‘‘ஓஓ… சரிங்க பெரியவரே… நீங்க கவனமா இருங்க”…
‘‘தம்பி…” என தயங்கி நின்றவரை…
‘‘என்ன வேணும் பெரியவரே… தயங்காம கேளுங்க”…
‘‘எனக்கொன்னும் வேணாம்பா… இங்க வர ஏழைகளுக்கு இலவசமாக சோறு கூட தர்றீங்க… பாத்தேன்’’ என மஞ்சப்பையில் கையை விட்டு அழுக்கு ரூபாய் நோட்டுக்களை எடுத்து முருகனின் கைகளில் திணித்தவர்… ‘‘ஏதோ என்னால முடிஞ்சதுப்பா… இன்னும் நாலுபேருக்கு சோறு போடுப்பா” என பதிலை கூட எதிர்பாராமல் கறுப்பு கண்ணாடியை அணிந்து கொண்டு தடுமாறி நடந்து போனார் அந்த முனியன் என்கிற பெரிய மனிதர்.
தொகுப்பு: ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
The post சிறுகதை appeared first on Dinakaran.
