×

சரியான அளவு மற்றும் நுட்பங்களை பயன்படுத்தினால் மட்டுமே எதிர்பார்ப்பது கிடைக்கும்!

நன்றி குங்குமம் தோழி

கேக்குகள் எத்தனை வகை இருந்தாலும் கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தின் போது பிரத்யேகமாக தயார் செய்யப்படும் கிறிஸ்துமஸ் ப்ளம் கேக் என தனி அடையாளம் உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சில மாதங்களுக்கு முன்பே அதில் சேர்க்கப்படும் உலர்ந்த பழ வகைகள் மற்றும் நட்ஸ் வகைகளை ஊற வைப்பதில் இருந்தே கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான கொண்டாட்டம் துவங்கி விடும். சென்னையை சேர்ந்த நித்யா ஜான் ஒவ்வொரு வருடமும் பண்டிகை காலங்களில் கிறிஸ்துமஸ் கேக்கினை ஸ்பெஷலாக தயாரித்து வருகிறார்.

“ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸுக்காக சில மாதங்களுக்கு முன்பே ப்ளம் கேக் தயாரிப்புக்கான வேலைகளை தொடங்கிவிடுவேன். என்னுடைய ப்ளம் கேக் சுற்றத்தினர் மற்றும் நட்பு வட்டாரங்களில் மிகவும் பிரபலம். ஒவ்வொரு வருடமும் குறிப்பாக கிறிஸ்துமஸ் சீசனில் ஆர்டர்கள் அதிகமாக வரும்” எனும் நித்யா ஜான் ‘ஹவுஸ் ஆஃப் ராம்கின்ஸ்’ எனும் பேக்கிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். “2014ல் ெதாடங்கினேன்.

பேக்கிங் மீதான காதல் மற்றும் கனவில் வீட்டிலேயே சிறிய அளவில் ஹோம் பேக்கிங் என்ற முறையில் ஆரம்பிச்ேசன். நான் பேக் செய்த உணவுகளை சுவைத்த என் நண்பர்கள், நன்றாக இருப்பதாக கூறி தொடருமாறு ஊக்கப்படுத்தினர். மிகச் சிறிய அளவில், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் குழந்தைகளின் பிறந்தநாட்களுக்கு கேக் தயாரிப்பது என சிறிய அளவில் வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்திய ஓவன், டோஸ்டர், கிரில் மட்டுமே வைத்து தொடங்கினேன்.

காலப்போக்கில் பேக்கிங்கை ஒரு தொழிலாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் வந்தது. நான் தொழில் தொடங்கிய காலத்தில் சமூக ஊடகங்கள் அவ்வளவு பிரபலமாக இல்லை. பெரும்பாலும் வாய் வார்த்தைமூலமாகவே ஆர்டர்கள் வந்தன. தரம் என்பதுதான் எனது அடிப்படை நோக்கமாகவும் முதன்மை உந்துதலாகவும் இருந்தது. பேக்கிங் துறையை தொழிலாக மாற்றும் போது, நிறைய பயிற்சிகள் அவசியம். அதனால் பேக்கிங் குறித்து பல பயிற்சிகளை மேற்கொண்டேன். ெகாரோனா காலக்கட்டத்திற்குப் பிறகு பலரும் வீட்டில் இருந்தபடியே கேக் தயாரிப்பில் ஈடுபட ஆரம்பித்தனர். அவர்களுக்கு எனக்குத் தெரிந்ததை சொல்லித்தர விரும்பினேன். 2020 முதல் ஆன்லைன் முறையில் பயிற்சியும் எடுக்க துவங்கினேன்” என்றவர் மேலும் தொடர்ந்தார்.

“ஆரம்பத்தில் தனிப்பட்ட நேரடி வகுப்புகள் எடுத்தேன். ஆனால், பல்வேறு பகுதிகளில் இருந்து பலரால் வரமுடியாத காரணத்தால் ஆன்லைன் வகுப்புகளை ஆரம்பித்தேன். நேரடி வகுப்புகள் பொதுவாக 2 முதல் 3 நாள் பயிற்சி பட்டறைகளாக இருக்கும். உணவு தொடர்பானது என்பதால், அதற்கான வீடியோக்களை எடுத்து பதிவு செய்திடுவோம். நேரடி வகுப்புகளில் பங்கேற்பவர்கள் அடுத்த 3 மாதங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் வீடியோக்களை பார்த்துக்கொள்ளலாம். மேலும், அவர்களுக்கு வாட்ஸப் சப்போர்ட்டும் வழங்கப்படும்.

தனிப்பட்ட தேவைக்காகவும், பொழுதுபோக்குக்காகவும் பேக்கிங் தொழிலை தொடங்க விரும்பும் தொழில்முனைவோர் என பலதரப்பட்ட மக்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்கின்றனர். வகுப்புகளில் கலந்து கொண்டவர்கள் பலரும் தங்கள் சொந்த தொழிலைத் தொடங்கியுள்ளனர். ஒரு கேக் செய்ய வெறும் ரெசிபி மட்டும் போதாது. பேக்கிங்கில் நிறைய நுட்பங்கள் உள்ளன. குக்கீஸ் மற்றும் கேக்குகள் செய்ய எவ்வளவு பொருட்கள் எந்த அளவில் கலக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். சரியான அளவு மற்றும் நுட்பங்களைப் பயன்படுத்தினால் மட்டுமே நாம் எதிர்பார்க்கும் தயாரிப்பு கிடைக்கும்” என்றவர், பேக்கிங் துறையில் உள்ள சவால்கள் மற்றும் துறையில் நிலைத்திருக்க சில வழிமுறைகளை பகிர்கிறார்.

“2014ல் நான் தொழில் தொடங்கியபோது இருந்த நிலைமைக்கும், இப்போதைய நிலைமைக்கும் அதிகம் போட்டி உருவாகியுள்ளதை பார்க்க முடிகிறது. தற்போது தொழில் தொடங்குவோர் ஆரம்பத்திலேயே அதிக முதலீடு செய்கின்றனர். உதாரணத்திற்கு, 10,000 சதுர அடி இடம் எடுப்பது, கமர்ஷியல் ஓவன்களை வாங்குவது என்று. முதலீடு செய்வதற்கு முன் ஒரு சோதனை ஓட்டம் பார்த்து படிப்படியாக உயர முயற்சிக்க வேண்டும். தயாரிப்பு பொருட்களின் தரம் அவசியம் என்பது போல் இப்போது பிராண்ட் மதிப்பும் மிகவும் முக்கியம். அதுதான் உங்களை மற்றவர்களுக்கு அடையாளத்தை ஏற்படுத்தும். சமூக ஊடகங்கள் பிராண்ட் வளர உதவும். ஆனால், தரத்தில் ஒரு சிறிய பிரச்னை வந்தாலும், அது உங்களை மிக வேகமாக கீழே தள்ளவும் வாய்ப்புள்ளது.

பேக்கிங் மீதான ஆர்வம் இருந்தால் மட்டுமே அதை ஒரு தொழிலாக மாற்ற முடியாது. சரியான பிசினஸ் பிளான் மற்றும் சந்தை ஆய்வு அவசியம். போட்டிகளுக்கு மத்தியில் இத்துறையில் நிலைத்திருக்க மார்க்கெட்டிங், தரம் மற்றும் விலை நிர்ணயம் ஆகிய மூன்று விஷயங்களை முக்கியமாக கடைபிடிக்க வேண்டும். வாடிக்கையாளர்களின் உளவியல் மற்றும் அவர்களது பிரைஸ் ரேஞ்சை புரிந்துகொள்ள வேண்டும். ஒரு கிலோ கேக் 400 ரூபாய் என்று குறைவாக விலை நிர்ணயம் செய்தால் கூட, மக்கள் வாங்க யோசிப்பார்கள். அதே சமயம் பேக்கிரி கடையை விட ஹோம் பேக்கர்கள் மூன்று மடங்கு அதிகம் விலை நிர்ணயம் செய்கிறார்கள் என்ற பொதுவான கருத்து உள்ளது. தரம் மற்றும் கஸ்டமைசேஷன் பொருத்தே விலையினை நிர்ணயிக்கிறோம்.

இன்று மக்கள் கேக்கிற்காக பணம் செலவழிக்கத் தயாராக உள்ளனர் எனில் அதற்கேற்ற மதிப்பை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். கேக்கின் நிறம் துல்லியமாக இருக்க வேண்டும். தீம் பேஸ்ட் பார்ட்டிகளுக்கு சிக்கலான கேரக்டர்களைப் பயன்படுத்தும் போது, ஒவ்வொரு கேரக்டர் பற்றியும் ஆராய்ச்சி செய்து, அதை அதிக கஸ்டமைசேஷனுடன் செய்ய வேண்டியிருக்கும். கேக்கில் பயன்படுத்தப்படும் பாண்டன்ட் கலையினை செய்ய அதிக நேரம் தேவைப்படும்.

ஒரு கேக்கை பேக்கிங் செய்ய ஆகும் நேரத்தை விட, இந்த பொம்மைகளை செய்ய மூன்று மடங்கு அதிகமாக நேரம் எடுக்கும். கேக்கின் எடை அரை கிலோவாக இருந்தாலும், அதை தயாரிப்பதற்கான உழைப்பு அதிகம். ஒரு கேக் ஆர்ட்டிஸ்ட்டாக இருக்கும் போது முடிந்தவரை வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும்” என்றவர், இந்தாண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக ஸ்பெஷலான தயாரிப்புகளை செய்துள்ளார்.

“கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பு நவம்பர் மாதத்தில் தொடங்கினாலும், செப்டம்பர் மாதத்திலேயே அதற்கான பழங்களை ஊறவைக்க ஆரம்பித்துவிடுவேன். நவம்பர் முதல் வாரத்தில் இருந்து கிறிஸ்துமஸ் பிளம் கேக் ஆர்டர்களை எடுப்பேன். ரம் கலந்த பிளம் கேக், நான்-ஆல்கஹாலிக் பிளம் கேக், முட்டையுடன் மற்றும் முட்டை இல்லாத பிளம் கேக்குகளும் தயாரிக்கிறேன். குழந்தைகள் சாப்பிடும் கேக்குகளில் ஆல்கஹாலுக்கு பதில் ஆரஞ்சு ஜூஸ் அல்லது ஆப்பிள் ஜூஸை பயன்படுத்துகிறேன். ரம் இன்ஃப்யூஸ் செய்யப்பட்ட கேக்குகளில் கூட ரம்மின் சுவை இருக்குமே தவிர, அதிகளவு அதன் தாக்கம் இருக்காது. கிறிஸ்துமஸ் கேக்குகளில் கேரமல் பயன்படுத்துகிறேன்.

செயற்கையான சுவையூட்டி, நிறமூட்டிகளை சேர்ப்பதில்லை. கேக் தயாரிப்பு மட்டுமின்றி, கிறிஸ்துமஸ் கிஃப்ட் ஹேம்பர்களையும் வழங்கி வருகிறோம். கார்ப்பரேட் ஆர்டர்களுக்கு ஏற்பவும் கஸ்டமைஸ் செய்து தருகிறேன். சிக்னேச்சர் பிரௌனி, குஸ்சி போன்ற பிஸ்கட்டி கேக், ஹாட் கோக்கோ மிக்ஸ், கிறிஸ்துமஸ் மசாலாக்கள் சேர்த்து செய்யப்படும் ஒரு கிளாஸிக்கான ஜின்ஜர் பிரெட் குக்கீஸ், நட்ஸ் மற்றும் சாக்லேட் வைத்து செய்யப்படும் கிறிஸ்துமஸ் கிளஸ்டர் போன்றவைகளை இந்த வருட கிறிஸ்துமஸ் கிஃப்ட் ஹேம்பரில் இணைத்திருக்கிறேன்” என்றார்.

செய்தி: ரம்யா ரங்கநாதன்

படங்கள்:ஆ.வின்சென்ட் பால்

Tags : Thanksgiving ,Christmas ,
× RELATED அட்வகேட் to ஃபேஷன் டிசைனர்!