×

பொதுத்தேர்வு தொடங்கிய நாளிலேயே பிளஸ் 2 மாணவி தீக்குளித்து தற்கொலை: திருவள்ளூரில் சோகம்

திருவள்ளூர், மார்ச் 4: பொதுத்தேர்வு தொடங்கிய நாளிலேயே பிளஸ் 2 மாணவி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் திருவள்ளூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது. இந்தநிலையில் திருவள்ளூர், ஜெயா நகரைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகள் பிரியா (17) என்ற மாணவியும் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு தயாரானார். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். மாணவி நேற்று முன்தினம் இரவு வரை படித்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று அதிகாலையில் வீட்டின் மொட்டை மாடியில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து மாணவி பிரியா தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் மருத்துவமனையில் மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், 80 சதவீத தீக்காயம் உள்ளதால் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மாணவி பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணையில் மாணவி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 92 சதவீதம் மதிப்பெண் பெற்றது தெரியவந்தது. அதேபோல் பிளஸ் 2 பொதுத்தேர்விலும் அதிக மதிப்பெண் எடுக்க முடியுமா என்ற அச்சத்தில் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கிய நாளிலேயே மாணவி தற்கொலை செய்த இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

The post பொதுத்தேர்வு தொடங்கிய நாளிலேயே பிளஸ் 2 மாணவி தீக்குளித்து தற்கொலை: திருவள்ளூரில் சோகம் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Suresh ,Jaya Nagar, ,Tiruvallur… ,
× RELATED திருநின்றவூர் நகராட்சியில் காலி...