நியூசிலாந்துடன் இந்தியா நேற்று ஆடிய ஒரு நாள் போட்டி, விராட் கோஹ்லிக்கு 300வது போட்டியாக அமைந்தது. இந்த சாதனையை நிகழ்த்திய 7வது வீரராக கோஹ்லி உள்ளார். 300வது போட்டியில் ஆடத் துவங்கும் முன், சக இந்திய வீரர்கள் கோஹ்லிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். நேற்றைய போட்டியில் இந்தியா பேட்டிங் செய்யத் துவங்கிய பின், விராட் கோஹ்லிக்கு சக வீரர்கள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்ட வீடியோ ஒன்றை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று வெளியிட்டது.
300வது போட்டியில் கோஹ்லி பெரிய ஸ்கோர் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் 11 ரன்னுக்கு அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். கோஹ்லி, 2008ம் ஆண்டு, இலங்கையின் தம்புல்லா நகரில் நடந்த ஒரு நாள் போட்டியில் முதல் முறையாக ஆடினார். அதன் பின், 51 சதங்களுடன் ஒரு நாள் போட்டிகளில் 14,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். 95 ஒரு நாள் போட்டிகளில் அவர் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார்.
* என்னைப் போல் ஒருவன் கோஹ்லியை புகழ்ந்த ரிச்சர்ட்ஸ்
விராட் கோஹ்லி 300வது போட்டியில் ஆடிய நிலையில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்வான் விவியன் ரிச்சர்ட்ஸ், ‘கோஹ்லி பல முறை என்னை நினைவுபடுத்துகிறார்’ என கூறியுள்ளார். மேலும், ‘யார் தைரியமாக போராடுகிறாரோ, அவர் வெற்றி பெறுவார். கோஹ்லி, தன் மேல் நம்பிக்கை வைத்துள்ளார். தேவை எழும்போதெல்லாம் வீரியத்துடன் செயல்பட்டு இந்திய அணியை வெற்றி பெறச் செய்கிறார். ஆக்ரோஷமாக அவர் ஆடும் விதம், கிரிக்கெட்டில் அவர் கொண்டுள்ள அளப்பரிய ஈடுபாட்டை உணர்த்துகிறது. அந்த வகையில் அற்புதமான கிரிக்கெட் வீரர் அவர்’ என ரிச்சர்ட்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
The post விராட் கோஹ்லிக்கு சக வீரர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.
