- தேனி அரசு மனநல மருத்துவமனை
- டெனி
- ராயல் மருத்துவமனை
- தெனி-அலினகர்
- தெனி அரசினர் மனநல மருத்துவமனை
- பொது மருத்துவமனை
- தின மலர்

தேனி: தேனியில் செயல்பட்ட அரசினர் மருத்துவமனை பெயரளவுக்கு மனநல சிகிச்சை மையம் செயல்படுவதால் இம்மருத்துவமனை வளாகத்தில் மீண்டும் 24 மணி நேர பொது மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். தேனி-அல்லிநகரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. தேனி மற்றும் சுற்றுப்புற கிராம மக்களின் மருத்துவ தேவைக்காக கடந்த 1969ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, தேனியில் அரசினர் மருத்துவமனை கட்ட அப்போதைய கல்வி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் நெடுஞ்செழியன் அடிக்கல் நாட்டினார்.
இம்மருத்துவமனை கட்டப்பட்டு, 1971ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது அப்போதைய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த அன்பழகன் இம்மருத்துவமனையை திறந்து வைத்தார். என்.ஆர்.டி. நினைவு அரசினர் மருத்துவமனை என்ற பெயரில் செயல்பட்ட இம் மருத்துவமனையில் தேனி நகரம் மட்டும் இல்லாமல் தேனியை சுற்றியுள்ள கிராமப்புற மக்களும் ஆயிரக்கணக்கில் வந்து சிகிச்சை பெற்று சென்றனர்.
இதனையடுத்து, இம்மருத்துவமனையில் பொது மருத்துவப் பிரிவு, சித்தா, ஹோமியோ, மகப்பேறு, குழந்தைகள் நலம் என பல்வேறு பிரிவுகளுடன் சுமார் 200 படுக்கை வசதிகளுடன் இம்மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வந்தது. தேனி புதிய மாவட்ட தலைநகரானபோது, இம் மருத்துவமனை வளாகத்தில் பல லட்சக்கணக்கான செலவில் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டன. இம் மருத்துவமனையில் இசிஜி, எக்ஸ்ரே, ஸ்கேன் வசதிகள் செயல்பட்டன.
இதனால், தேனி நகரை சேர்ந்த பொதுமக்கள் எந்த நேரமும் தேனி நகரின் மத்தியில் உள்ள இம் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று சென்றனர். 2004ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ஆண்டிபட்டி அருகே க.விலக்கு பகுதியில் அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறக்கப்பட்டது. இப்புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறந்ததையடுத்து, தேனி நகரின் மத்தியில் செயல்பட்ட என்.ஆர்.டி நினைவு அரசினர் மருத்துவமனையில் இருந்த அனைத்து படுக்கைகள், எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட அனைத்து உபகரனங்களும் இரவோடு, இரவாக க.விலக்கில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனால் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் பல கோடி மதிப்பிலான கட்டிடங்களில் செயல்பட்ட தேனி என்.ஆர்.டி நினைவு அரசினர் மருத்துவமனை மூடப்பட்டது. இம் மருத்துவமனை வளாகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் பகுதி நேர மருத்துவமனையாக செயல் பட்டது. ஒரு மருத்துவர் பகுதி நேரமாக காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை வந்து காய்ச்சல், தலைவலி போன்ற சிறிய நோய்களுக்கு மட்டும் சிகிச்சை அளித்து வந்தனர்.
பெரிய அளவிலான சிகிச்சை அளிக்கப்படாததால் இம் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 50க்கும் குறைவான நோயாளிகளே வந்தனர். சுமார் 3 ஏக்கர் பரப்பளவில், பல கோடி மதிப்பிலான மருத்துவமனை கட்டிடம் வீணாக உள்ளதை ஊடகங்கள் சுட்டிக் காட்டியதையடுத்து, இம் மருத்துவமனையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர், இம்மருத்துவமனை வளாகத்தில் மனநல சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது. ஆனால், மனநல சிகிச்சைக்கான முழுமையான வசதிகள் இன்னமும் செயல்படுத்தப்படாத நிலை நீடித்து வருகிறது.
தேனி நகர மக்கள் சிகிச்சைக்காக தேனியில் இருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ள க.விலக்கு அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே, இம்மருத்துவமனை வளாகத்தில் மனநல மருத்துவமனைக்கு பதிலாக பல கோடி மதிப்பிலான இம்மருத்துவமனையில், கூடுதல் டாக்டர்கள், செவிலியர்கள், பார்மஸிஸ்ட்டுகளை நியமித்து 24 மணி நேர மருத்துவமனையாக செயல்படுத்த அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post தேனி அரசினர் மனநல மருத்துவமனையை பொதுமருத்துவமனையாக மாற்ற கோரிக்கை appeared first on Dinakaran.
