துபாய்: சாம்பியன்ஸ் கோப்பைக்காக துபாயில் நியூசிலாந்துடன் இன்று நடக்கும் ஒரு நாள் போட்டி, இந்திய நட்சத்திர வீரர் விராட் கோஹ்லிக்கு 300வது போட்டியாக அமைந்துள்ளது. நியூசிலாந்துடன் இன்று நடக்கும் போட்டியில் பங்கேற்பதன் மூலம் கோஹ்லி, 300வது போட்டியில் ஆடிய 7வது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்த உள்ளார்; உலகளவில் 22வது வீரராக அவர் திகழ்வார். அதிக ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் பட்டியலில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 463 போட்டிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
பாகிஸ்தானுடன் நடந்த போட்டியில் கோஹ்லி தனது 51வது சதத்தை விளாசி, 14,000 ரன்களை கடந்து சாதனை படைத்திருந்தார். நியூசிலாந்துடனான போட்டியில் அவர் சதமடித்தால் மேலும் சில சாதனைகளை கோஹ்லி அரங்கேற்றும் வாய்ப்பு உருவாகி உள்ளது. நியூசிலாந்துடன் ஆடி அதிக சதம் விளாசிய வீரர்களாக 6 சதங்களுடன் ஆஸி வீரர் ரிக்கி பான்டிங், இந்திய வீரர்கள் ஷேவாக், கோஹ்லி உள்ளனர். இன்றைய போட்டியில் கோஹ்லி சதம் அடித்தால் பான்டிங், ஷேவாக்கை முந்தி 7 சதங்களுடன் முதலிடத்துக்கு செல்வார்.
அதேபோல், சர்வதேச போட்டிகளில் நியூசி அணிக்கு எதிராக 3,000 ரன் கடந்த 5வது வீரராக உருவெடுக்க கோஹ்லிக்கு 85 ரன்களே தேவை. இப்பட்டியலில் ஏற்கனவே, டெண்டுல்கர் (3345), ரிக்கி பான்டிங் (3145), ஜேக்கஸ் காலிஸ் (3071), ஜோரூட் (3068) உள்ளனர்.
The post சாதனைகள் தகர்க்கும் தனி ஒருவன்; கோஹ்லி 300: சதமடித்தால் ஷேவாக்கை முந்துவார் appeared first on Dinakaran.
