புதுடெல்லி: இந்த ஆண்டுக்கான பிஎப் வட்டிவிகிதமும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. 8.25 சதவீதமாக நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர் வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதங்களில் இந்த நிதியாண்டிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த நிதியாண்டைப்போலவே இந்த ஆண்டும் பிஎப் வட்டி விகிதம் 8.25 சதவீதமாக நீடிக்கும் என்று நேற்று இபிஎப்ஓ அறிவித்துள்ளது.
கடந்த 2022-23ம் ஆண்டில் இபிஎப்ஓ 8.15 சதவீதத்திலிருந்து 2023-24ம் ஆண்டிற்கான பிஎப் வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக உயர்த்தியது. ஆனால் இந்த ஆண்டு அதே சதவீதம் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த பிஎப் ஒன்றிய குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நேற்று எடுக்கப்பட்ட இந்த முடிவு குறித்து ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,’ 2024-25 நிதியாண்டிற்கான பிஎப் வட்டி 8.25 சதவீத வரவு வைக்க ஒன்றிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடந்த கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி இந்த முடிவு ஒன்றிய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்த பிறகு, 2024-25ம் ஆண்டிற்கான பிஎப் வட்டி விகிதம் நாடு முழுவதும் உள்ள 7 கோடிக்கும் மேற்பட்ட பிஎப் சந்தாதாரர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும். முக்கிய மாற்றங்கள்: ஒன்றிய அமைச்சர் மாண்டவியாவின் தலைமையின் கீழ் நடந்த கூட்டத்தில் ஊழியர்களின் வைப்புத்தொகை-இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டுப் பலன்களை மேம்படுத்துவது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த அடிப்படையில் இடிஎல்ஐ திட்டத்தில் இணைந்து ஒரு வருடம் கூட ஆகாதநிலையில் உறுப்பினர் இறந்தால் குறைந்தபட்ச ஆயுள் காப்பீட்டுப் பயன் ரூ. 50,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் ஒரு உறுப்பினர் கடைசியாக செலுத்திய பங்களிப்பிலிருந்து ஆறு மாதங்களுக்குள் இறந்துவிட்டால், இடிஎல்ஐ உதவிகள் வழங்கப்படும். மேலும் இரண்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பிற்கு இடையே ஒன்று அல்லது இரண்டு நாட்கள் இடைவெளி (வார இறுதி நாட்கள் அல்லது விடுமுறை நாட்கள் போன்றவை) இருந்ததால், ஒரு வருடத்திற்கான தொடர்ச்சியான சேவையின் நிபந்தனை பூர்த்தி செய்யப்படவில்லை என்று கூறி குறைந்தபட்சம் ரூ. 2.5 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ. 7 லட்சம் வரையிலான இடிஎல்ஐ உதவிகள் மறுக்கப்பட்டது. புதிய மாற்றங்களின் கீழ், ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனத்திற்கு மாறும் போது இரண்டு மாதங்கள் வரை இடைவெளி இப்போது தொடர்ச்சியான சேவையாகக் கருதப்படும். இந்த மாற்றங்கள் ஒவ்வொரு ஆண்டும் பணியின் போது இறக்கும் 20,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு உதவியாக இருக்கும்.
The post எந்தவித மாற்றமும் இல்லை பிஎப் வட்டி 8.25 சதவீதம்: இபிஎப்ஓ அறிவிப்பு appeared first on Dinakaran.
