- ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி குரூப் ஏ
- இந்தியா
- நியூசிலாந்து
- துபாய்
- ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி குரூப் ஏ.
- சாம்பியன்ஸ் டிராபி குரூப் ஏ
- தின மலர்
துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைக்கான போட்டியில் ஏ பிரிவில் முதலிடத்தை பிடிக்க, இந்தியா – நியூசிலாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்த உள்ளன. சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஒரு நாள் போட்டி தொடரில் ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள், தங்கள் முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளை வீழ்த்தி அரை இறுதி வாய்ப்புகளை இறுதி செய்து விட்டன. அதனால் பாகிஸ்தான், வங்கம் போட்டியை விட்டு வெளியேறி விட்டன.
அரையிறுதியை உறுதி செய்த அணிகளில் ரன் ரேட் அடிப்படையில் நியூசி முதல் இடத்திலும், இந்தியா 2வது இடத்திலும் உள்ளன. இந்நிலையில் இந்த அணிகள் தங்கள் கடைசி லீக் ஆட்டத்தில் நாளை களம் காண உள்ளன. இந்தியா தொடர்ந்து விளையாடி வரும் துபாயில் இந்த போட்டி நடைபெறும். அதற்காக ராவல்பிண்டியில் இருந்து நியூசி அணி துபாய் வந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, 6 புள்ளிகளுடன் ஏ பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும்.
அதனால் மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசி அணி இன்று அதிரடியை காட்டும். அதற்கு வில்லியம் யங், டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், டாம் லோதம், மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோர் கைகொடுப்பார்கள். ஆனால் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியை அத்தனை எளிதில் விட்டுக் கொடுக்காது.
மீண்டும் ஆட்டத் திறனுக்கு திரும்பியுள்ள விராட் கோஹ்லி, ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா ஆகியோருடன் குல்தீப் யாதவ், முகமது ஷமி, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் வெளுத்துக் கட்டும் வாய்ப்பு அதிகம். அதனால் இந்திய அணி மாற்றமின்றி களம் காணும். தொடர் வெற்றிகளை பெற்று வரும் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் என்பதால் நாளை அனல் பறப்பது உறுதி.
* நேருக்கு நேர்
* இந்தியா – நியூசிலாந்து அணிகள், 1975 முதல் இதுவரை 118 போட்டிகளில் நேருக்கு நேர் களத்தில் சந்தித்துள்ளன. அவற்றில் இந்தியா 60, நியூசி 50 ஆட்டங்களில் வென்று உள்ளன. எஞ்சிய போட்டிகளில் 7ல் முடிவு எட்டப்படவில்லை. ஒன்று சமனில் முடிந்தது.
* இவ்விரு நாடுகளிலும் அல்லாமல் பொதுவான வேறு நாடுகளில் நடந்த, முடிவு எட்டப்பட்ட 31 ஆட்டங்களில் நியூசி 16, இந்தியா 15 போட்டிகளிலும் வென்று இருக்கின்றன.
* ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர்களில் ஒரே ஒரு முறை மட்டுமே இந்த அணிகள் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அதில் நியூசி 4 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது
* இந்த 2 அணிகளுக்கு இடையே கடைசியாக நடந்த 5 ஒரு நாள் ஆட்டங்களிலும் இந்தியா வென்று 5-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
* இந்த அணிகள், மற்ற அணிகளுடன் கடைசியாக விளையாடிய தலா 5 ஆட்டங்களிலும் வெற்றி வாகை சூடி இருக்கின்றன.
* தொடர் வெற்றி உற்சாகத்தில் இருக்கும் இந்திய அணி கடந்த 2 ஆட்டங்களில் விளையாடிய அதே வீரர்களுடன் களம் காணும் வாய்ப்பு அதிகம். தமிழ்நாட்டு வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி அணியில் இடம் கிடைத்தும், ஆடும் அணியில் வாய்ப்பு கிடைப்பது கேள்விக் குறிதான்.
* நியூசிலாந்து போட்டியில் ரோகித் ஆடுவது சந்தேகம்
பாகிஸ்தானுடனான போட்டியில் பங்கேற்றபோது, இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவின் கால் தொடையின் பின்பக்க சதைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. அதனால், நேற்று நடந்த பயிற்சிகளில் அவர் கலந்து கொள்ளவில்லை. பிசியோதெரபி சிகிச்சை ரோகித்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. காயம் முழுமையாக குணமாகாததால் நாளை நியூசிலாந்து அணிக்கு எதிராக நடக்கும் போட்டியில் ரோகித் இடம்பெற மாட்டார் எனத் தெரிகிறது. அவருக்கு பதில் ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்படுவார் எனக் கூறப்படுகிறது. துவக்க வீரர்களாக சுப்மன் கில், கே.எல்.ராகுல் களமிறங்குவார்கள் என தகவல்கள் கூறுகின்றன.
The post ஐசிசி சாம்பியன்ஸ் ஏ பிரிவில் முதலிடத்தை பிடித்து முந்தப்போவது யார்? இந்தியா நியூசிலாந்து நாளை மோதல் appeared first on Dinakaran.
