திருவண்ணாமலை: சினிமா புகழ் மட்டும் போதாது. தமிழ்நாட்டு மக்கள் விவரமானவர்கள் என்று விஜய்க்கு திருமவாளவன் அறிவுரை கூறி உள்ளார்.
விசிக தலைவர் தொல்.திருமாவளவன் திருவண்ணாமலையில் நேற்று அளித்த பேட்டி:
மறு சீரமைப்பினால் எம்பி தொகுதிகளின் எண்ணிக்ைக குறைக்கப்படுவதை தடுப்பதற்காக, வரும் மார்ச் 5ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டியிருக்கிறார். இது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அதனை விசிக வரவேற்கிறது. தென்மாநில முதல்வர்களுடன் தமிழக முதல்வர் கலந்தாய்வு செய்ய வேண்டும். தொகுதி சீரமைப்பினால், தென் மாநிலங்களில் 80 தொகுதிகள் குறையும். குறிப்பாக, தமிழ்நாட்டில் தற்போதுள்ள 39 தொகுதிகள் 31 தொகுதிகளாக மாறும். எனவே, மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு செய்ய வேண்டும்.
நடிகர் விஜய் இப்போதுதான் கட்சி தொடங்கியிருக்கிறார். முதலில் அவர் தேர்தலை சந்திக்கட்டும், மக்கள் எந்த அளவு அவரை ஏற்றுக்கெள்கிறார்கள், அங்கீகரிக்கிறார்கள் என்று பார்ப்போம். அதன்பிறகுதான், யாருக்கு பின்னடைவு என்று தெரியும். சினிமா புகழ் போன்றவற்றை மட்டுமே மூலதனமாக வைத்து எல்லாவற்றையும் ஓரம் கட்டிவிட முடியாது. தமிழ்நாட்டு மக்கள் மிகவும் விவரமானவர்கள். இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்கள். இளைஞர்களை அவ்வளவு எளிதில் ஏய்த்துவிட, ஏமாற்றிவிட முடியாது.
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் எனும் இந்துத்துவா ஆர்எஸ்எஸ் செயல்திட்டத்தை பாஜ அரசு நிறைவேற்ற பார்க்கிறது. மும்மொழி எனும் பெயரில் இந்தியை கட்டாயமாக திணிப்பதன் மூலம் ஒரே மொழி எனும் செயல்திட்டத்தை அடைவதுதான் பாஜவின் தொலைநோக்கு திட்டமாகும். மும்மொழி திட்டத்தை, தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு எந்த சூழ்நிலையிலும் ஏற்காது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post தமிழ்நாட்டு மக்கள் விவரமானவர்கள் சினிமா புகழ் மட்டும் போதாது: விஜய் மீது திருமாவளவன் தாக்கு appeared first on Dinakaran.
