சென்னை: தொகுதி மறுவரையறை தொடர்பாக மார்ச் 5ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியாவில் தற்போது 543 மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர். மாநிலங்களவையில் 245 பேர் உள்ளனர். பிரதமர் மோடி நாடாளுமன்றத் தொகுதிகள் அதிகரிக்கப்படும் என்றார், அப்படி செய்தால் அது தென் மாநிலங்களுக்குப் பாதகமாக முடியும். அதாவது, மக்கள் தொகை அடிப்படையில் 2026ம் ஆண்டுக்குப்பின், மக்களவை தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும்போது, தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை குறையும் எனவும், உத்தரபிரதேசம் உள்பட வட மாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் கார்னேஜ் மையத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், தென் மாநிலங்களவை விட, வடமாநிலங்களில் மக்கள் தொகை எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கிறது. 2026ம் ஆண்டுக்குப்பின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்பு தொகுதி மறுவரையறை பணிகள் மேற்கொள்ளப்படும். மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகள் மறு சீரமைப்பு செய்யப்படும். அப்போது உத்தரபிரதேசத்துக்கு 11 மக்களவை தொகுதிகள் கூடுதலாக கிடைக்கும். தமிழகத்தில் 8 மக்களவை தொகுதிகள் வரை குறைந்து 31 மக்களவை தொகுதிகளாக மாறலாம். 42 தொகுதிகள் உள்ள ஆந்திரா, தெலங்கானாவில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 34 ஆக குறையலாம்.
இதேபோல் கேரளாவிலும் மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை 20லிருந்து 12 ஆக குறையலாம். கர்நாடகாவில் மக்களவை தொகுதிகள் 28லிருந்து 26ஆக குறையலாம். தொகுதி மறுவரையறையின் முக்கிய நோக்கமே, ஒவ்வொரு தொகுதியிலும், ஓரளவு சமமான எண்ணிக்கையில் வாக்காளர்கள் இருப்பதை உறுதி செய்வதுதான். அப்போதுதான், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் நியாயமான பிரதிநிதித்துவம் இருக்கும். தொகுதி மறுவரையால் உ.பி.க்கு 11 தொகுதிகளும், பீகாருக்கு 10 தொகுதிகளும், ராஜஸ்தானுக்கு 6 தொகுதிகளும், மத்திய பிரதேசத்துக்கு 4 தொகுதிகளும், குஜராத், அரியானா, ஜார்க்கண்ட், டெல்லி மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதிகள் அதிகரிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தொகுதி மறுவரையரை தொடர்பாக மார்ச் 5ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்திருந்தார். மேலும், அனைத்துக் கட்சிகளும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அவர் கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு மொத்தமாக 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைக்கப்பட இருக்கும் கட்சிகள்: திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் நீதி மையம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஆதி தமிழர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை, மூவேந்தர் முன்னேற்றக் கழகம், மக்கள் விடுதலை கட்சி, அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்), தேசிய முற்போக்கு திராவிட கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், பாஜ, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி, புதிய தமிழகம், புரட்சி பாரதம் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, மனிதநேய ஜனநாயகக் கட்சி, இந்திய சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, அனைத்து இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், பசும்பொன் தேசிய கழகம், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி, கலப்பை மக்கள் இயக்கம், பகுஜன் சமாஜ் கட்சி, விடுதலை, ஆம் ஆத்மி கட்சி, சமதா கட்சி, தமிழ்ப்புலிகள் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, இந்திய குடியரசு கட்சி.
The post மார்ச் 5ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் 45 கட்சிகளுக்கு அரசு அழைப்பு: தொகுதி மறுவரையறை பாதிப்பு குறித்து ஒன்றுசேர்ந்து குரல் கொடுக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.
