×

2வது நாளாக வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி திருக்குறுங்குடி வனசரகத்தில் சிறுத்தை, செந்நாய் எச்சங்கள் பதிவு

களக்காடு : திருக்குறுங்குடி வனச்சரகத்தில் நேற்று முன்தினம் காலை துவங்கிய புலிகள் மற்றும் ஒருங்கிணைந்த வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகளில் நேற்று 2வது நாளாக நடந்த கணக்கெடுப்பில், சிறுத்தை மற்றும் செந்நாயின் எச்சங்களை கண்டறிந்து செல்போன் ஆப்பில் வனத்துறையினர் பதிவிட்டனர்.

களக்காடு புலிகள் காப்பக வனக்கோட்டத்துக்கு உட்பட்ட திருக்குறுங்குடி வனச்சரகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணிகளை வனச்சரகர் யோகேஷ்வரன் (திருக்குறுங்குடி) கடந்த 24ம் தேதி துவக்கி வைத்தார்.

கணக்கெடுப்பின் முதல் நாள் நம்பி கோயில் பீட்டில் யானைகளின் கால் தடங்கள் மற்றும் சாணங்களை கணக்கெடுப்பாளர்கள் கண்டறிந்தனர். நேற்று 25ம் தேதி 2வது நாளாக சிறுத்தை மற்றும் செந்நாயின் எச்சங்களை கண்டறிந்து அதனை அளவீடு செய்து குறிப்பெடுத்தனர்.

மேலும் செல்போன் ஆப்பிலும் பதிவிட்டனர், நாளொன்றுக்கு 6 மணி நேரம் நடைபெறுகிற கணக்கெடுப்பு பணிகள் மார்ச் 1ம் தேதி நிறைவடைகிறது. 8குழுக்களாகப்பிரிந்து 40க்கும் மேற்பட்ட வனஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் திருக்குறுங்குடி வனப்பகுதியில் கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதுபோல் மேல்கோதையாறு வனச்சரகத்தில் 5 குழுவினர் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே மார்ச் 2ம் தேதி வரை பக்தர்கள் மலை கோயிலுக்கு செல்லவும், சுற்றுலாவிற்கும் தடைநீடிக்கிறது.

முண்டந்துறையில் புலியின் கால்தடம் பதிவு

விகேபுரம்: முண்டந்துறை வனச்சரகத்திற்கு உட்பட்ட பாதர் மலை பீட்டில் உள்ள வாட்ச் டவர் செம்மூஞ்சி பகுதியில் வனக்காவலர் ஜான்சன் தலைமையில் வனக்குழுவினர் கணக்கெடுப்பு பணியை நேற்று 2 வது நாளாக தொடங்கினர். அப்போது இப்பகுதியில் புலியின் கால் தடம் காணப்பட்டது.

அதனை செல்போன் ஆப் மூலம் பதிவு செய்தனர். இன்றுடன் மூன்று நாட்களுக்கு மாமிச உண்ணி கணக்கெடுக்கும் பணி முடிகிறது. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தாவர உண்ணிகளை நேர்க்கோட்டில் சென்று கணக்கெடுக்கின்றனர்.

The post 2வது நாளாக வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி திருக்குறுங்குடி வனசரகத்தில் சிறுத்தை, செந்நாய் எச்சங்கள் பதிவு appeared first on Dinakaran.

Tags : Thirukurungudi forest ,Kalakkadu ,Thirukurungudi forest reserve ,
× RELATED அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின்...