×

தீண்டாமை மனிதத்தன்மையற்ற செயல் என்ற வாசகத்தை அனைத்து பாடப் புத்தகங்களில் அச்சிட வேண்டும்: எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: தீண்டாமை மனிதத்தன்மையற்ற செயல் என்ற வாசகத்தை அனைத்து பாட புத்தகங்களில் அச்சிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு தொழில் நுட்பக்கல்வித்துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி., எஸ்.டி.பணியாளர் நலச்சங்க பொதுச்செயலாளர் டி.மகிமை தாஸ், மாநில தலைவர் மணிமொழி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: தீண்டாமை ஒழிப்புச்சட்டம் இந்திய அரசியலமைப்பின் 17வது பிரிவில் இடம் பெற்றுள்ளது.

தீண்டாமையை ஒழிப்பதற்காக இந்திய பாராளுமன்றம் 1955ம் ஆண்டு குடியியல் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் 1989ம் அண்டு ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டம் 2015-ல் வன்கொடுமை திருத்தச் சட்டம் போன்றவை உருவாக்கப்பட்டுள்ளன. இவைகளின்படி தீண்டாமையை எந்த வடிவத்திலும் நடைமுறைப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் ஆண்டுதோறும் அனைத்துத்துறை அரசு அலுவலகங்கள் பள்ளி, கல்லூரிகளில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்க பலமுறை அறிவுறுத்தியிருந்தாலும்கூட இன்றளவும் பல அலுவலகங்களில் தீண்டாமை உறுதிமொழி ஏற்பதையும் இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 அன்று கொண்டாடப்படும் தேசிய சட்ட தினத்தையும் தவிர்த்தே வருகின்றனர்.

தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை மனிதத் தன்மையற்ற செயல் என்ற இந்த வாசகங்கள் பல ஆண்டுகளாக, தமிழ்நாட்டுப் பாட நூல் கழகத்தால், மாணாக்கருக்கு வழங்கப்படும் பாடபுத்தகங்களின் முதற்பக்கத்தில் அச்சிடப்பட்டு இருக்கும். தற்போது அவைகள் என்ன காரணத்தினாலோ அச்சிடப்படுவதில்லை. எனவே, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கும் அனைத்து பாடப்புத்தகங்களிலும் மேற்கண்ட வாசகங்களை மீண்டும் அச்சிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தீண்டாமை மனிதத்தன்மையற்ற செயல் என்ற வாசகத்தை அனைத்து பாடப் புத்தகங்களில் அச்சிட வேண்டும்: எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : SC ,SD Employee Association ,Chennai ,Chief Minister ,MLA ,K. ,SD Workers' Association ,Stalin ,Tamil Nadu Department of Technical Education ,Dr. ,Ambedkar S. C. ,S. D. Secretary General of Personnel ,Welfare ,D. Glory Das ,SD Staff Association ,Dinakaran ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...